

சிறப்பு ஒளிப்படம் பிரிவில் 2022ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதை காஷ்மீரைச் சேர்ந்த ஒளிப்படப் பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ வென்றுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் நிலவிய நெருக்கடியைத் தத்ரூபமாக, மனத்தை உலுக்கும் வகையில் சன்னா இர்ஷாத் மட்டூ பதிவுசெய்து இருந்தார். அதற்காக மதிப்புமிக்க இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் சன்னா இர்ஷாத் மட்டூ. ‘அல் ஜசீரா’, ‘டைம்’, ‘டிஆர்டி வேர்ல்ட்’ உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களில் சன்னாவின் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 2021 இல் மதிப்புமிக்க மேக்னம் அறக்கட்டளையுடன் சன்னா இணைந்து (பெல்லோஷிப்) பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிட்சர் பரிசு என்பது அமெரிக்காவில் செய்தித்தாள், ஊடகவியல், இணைய இதழ், இலக்கியம், இசை ஆகியவற்றில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் விருது. இந்த விருது 1917ஆம் ஆண்டு ஜோசப் புலிட்சர் எனும் பிரசித்தி பெற்ற ஹங்கேரிய - அமெரிக்கப் பத்திரிகையாளர், செய்தித்தாள் வெளியீட்டாளரின் விருப்பப்படி நிறுவப்பட்டது. இந்த விருது கொலம்பியா பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
19 உறுப்பினர்களைக் கொண்ட புலிட்சர் விருது குழுவில், அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஊடக நிறுவனங்களின் முன்னணிப் பத்திரிகையாளர்கள், செய்தி நிர்வாகிகள், ஐந்து கல்வியாளர்கள், கலைத் துறையின் ஆளுமைகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையின் தலைவர், பரிசுகளின் நிர்வாகி ஆகியோர் இந்தக் குழுவின் வாக்களிக்காத உறுப்பினர்கள்.
இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது, சன்னாவுடன் இணைந்து தார் யாசின், முக்தார், மறைந்த டேனிஷ் சித்திக் ஆகிய ஒளிப்படக் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. 38 வயதான சித்திக், கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஒளிப்படம் எடுக்கும்போது இறந்தார். விருது பெற்ற டேனிஷ் சித்திக் கடந்த ஜூலை மாதம் காந்தஹார் நகரில் ஆப்கானிஸ்தான் துருப்புக்களுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடந்த மோதலைப் பதிவு செய்யும்போது கொல்லப்பட்டார். புலிட்சர் பரிசை சித்திக் வெல்வது இது இரண்டாவது முறை. 2018 ஆம் ஆண்டில் ரோஹிங்கியா நெருக்கடியைக் குறித்த ஒளிப்படங்களுக்காக சித்திக் புலிட்சர் விருதைப் பெற்றார்.