

புதுடெல்லி: கோடை வெப்பத்தை சமாளிக்க டெல்லியில் ஆட்டோ ஓட்டி வரும் ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் மினி தோட்டம் அமைத்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோடை வெப்பம் பகல் நேரங்களில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொருவரும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க நூதன முறையில் யோசித்தார் டெல்லியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மஹேந்திர குமார். அதன்படி தனது மூன்று சக்கர வாகனத்தின் மேற்கூரையில் பச்சை பசேலென செடிகளை வளர்த்துள்ளார். அதன் மூலம் தனது வாகனத்தின் மீது படரும் வெப்பத்தை தடுத்துள்ளார் அவர்.
"வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஒரு சிறு முயற்சியாக ஆட்டோவின் கூரையில் தோட்டம் அமைத்துள்ளேன். இங்கு வெப்பமாக உள்ளது. இருந்தாலும் செடிகள் இருப்பதால் ஓரளவுக்கு வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொண்டுள்ளேன். மேலும் சுத்தமான காற்றையும் இந்த செடிகள் கொடுக்கின்றன. இதில் தக்காளி, புடலங்காய் மாதிரியான காய்கறி மற்றும் கீரை வகைகள் உட்பட சுமார் 25 செடிகளை வைத்துள்ளேன்" என மஹேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இப்போது அவர் மட்டுமல்லாது அவரது ஆட்டோவில் பயணித்து வரும் பயணிகளும் கோடை வெப்பத்திலிருந்து இந்த மினி தோட்டத்தின் மூலம் தப்பித்துள்ளனர். இந்தியாவில் வெப்ப அலை வீசி காரணம் காலநிலை மாற்றம் என சொல்லப்பட்டுள்ளது. டெல்லி நகர வீதியில் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான அவரது ஆட்டோ சீறி பாய்கிறது.