

நாம் எல்லோரும் வெற்றிகரமான வாழ்க்கையை விரும்புவோம். வெற்றி என்பது ஒரு நாளில் நடப்பது அல்ல. அதற்காக ஒவ்வொரு நாளும் நாம் தயாராக வேண்டும். நாள் என்பது காலம். அதுதான் எல்லோருக்கும் பொதுவான செல்வம். அந்தச் செல்வத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேறு எந்தச் செல்வத்தை செலவழித்தாலும் திரும்பப் பெற முடியும். ஆனால், காலம் போனால் அவ்வளவுதான்.
ஒரு நாளை நாம் சரியாக மேலாண்மை செய்தால் நமக்கான வெற்றி எளிதாகக் கிடைக்கும். ஒரு பத்து நிமிசம்தானே, ஒரு மணி நேரம்தானே, ஒரு நாள்தானே என அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் காலம் போய்விடும். நாட்கள் சேர்ந்ததுதான் ஆண்டு. இதை மனத்தில் கொள்ள வேண்டும். அதனால் ஒரு நாளை எப்படிப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.
ஒரு நாளை முதலில் ஆரோக்கியமான உடற்பயிற்சியுடன் தொடங்க வேண்டும். இது எளிமையான உடற்பயிற்சியாக இருந்தால் போதுமானது. யோகாசனப் பயிற்சியாக இருந்தால் கூடுதல் சிறப்பு. உடற்பயிற்சி மூலம் உங்கள் உடல் என்னும் கருவி ஆற்றல் பெறும். உங்களால் அந்த நாளில் சிறப்பாகச் செயல்பட இது துணையாக இருக்கும்.
தினமும் ஒரு தியானப் பயிற்சி செய்வது நல்லது. எந்த முறையிலான தியானமாக இருந்தாலும் பரவாயில்லை. அது உங்கள் உடல், மன ஆரோக்கியத்துக்கு நல்லது. இல்லையெனில் மூச்சுப் பயிற்சி செய்யலாம்.
அடுத்ததாக நீங்கள் அடைய விரும்பும் இலக்கை, நீங்கள் பெறவிருக்கும் வெற்றியைக் குறித்து ஒரு வாக்கியத்தை உருவாக்கி அதைத் திரும்பத் திரும்ப உச்சரிக்க வேண்டும். அந்த வெற்றியை, இலக்கை அடைந்துவிட்டதாக ஒரு காட்சியைக் கற்பனையாக மனதில் ஓட்டிப் பார்க்க வேண்டும். இதனால் உங்கள் ஆழ்மனதுக்கு உங்கள் இலக்கை அழுத்தமாகப் பதியவைக்க முடியும்.
ஒரு நாளில் நாம் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதைக் குறித்து ஒரு பட்டியல் உண்டாக்க வேண்டும். அது அலுவல் ரீதியான வேலையாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி.
தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது ஏதாவது உங்களுக்கு விருப்பப்பட்ட புத்தகத்தை வாசிக்க வேண்டும். அது கதையாகவோ கட்டுரையாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வாசிப்பு சிந்தை திடம் பெற உதவும்.
தினமும் ஒரு நாளில் ஆன வர செலவுக் கணக்குகளை எழுதிவைக்க வேண்டும். இதை வைத்து உங்கள் பட்ஜெட்டை நீங்கள் தீர்மானிக்க முடியும். இந்த நாளைச் சிறப்பாக்க உங்களுக்கு உதவிய விஷயங்களை, மனிதர்களை மனத்தில் நினைத்து அதைக் குறித்து எழுதிவைக்க வேண்டும். அவர்களுக்கு மனதார நன்றி சொல்ல வேண்டும். தினமும் உங்களுக்குப் பிடித்த நபர்களுடன் மனதாராப் பேச வேண்டும். உங்கள் மனதுக்கு அது ஆசுவாசத்தைத் தரும்.
இறுதியாக ஒரு நாளைக் குறித்து, நீங்களே உங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் பட்டியலில் குறிப்பிட்ட ஏதாவது ஒரு செயலைத் திட்டமிட்டபடி உங்களால் செய்ய முடியவில்லை என்றாலோ, தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, அவசியமில்லாத உரையாடல்களில் ஈடுப்பட்டாலோ, உங்கள் மனம் புண்பட்டாலோ, அது ஏன் எனக் கேள்வி கேட்டுப் பதிலைக் கண்டறிய முயல வேண்டும். இம்மாதிரிச் செயல்கள் மூலம் உங்கள் நாளைப் பயனுள்ளதாக ஆக்க முடியும்.