ஜேசிபி ஓட்டும் பாட்டி

ஜேசிபி ஓட்டும் பாட்டி
Updated on
1 min read

இரண்டு, மூன்று, நான்கு எனப் பலவிதமான வண்டிகளுக்குமாகச் சேர்த்து மொத்தம் 11 ஓட்டுநர் உரிமம் வாங்கிவைத்திருக்கிறார் ராதாமணி என்ற 71 வயது பாட்டி. கிரேன், ஜேசிபி, டிராக்டர், ரோடு ரோலர், பஸ், லாரி என எல்லாவற்றையும் எளிதாக ஓட்டி கேரளத்தைக் கலக்கிவருகிறார் இந்தப் பாட்டி.

1981-ல் தனக்கு 30 வயது இருக்கும்போது ராதாமணி முதன்முதலாக கார் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய மிகச் சிலரில் ராதாமணியும் ஒருவர். அதே நேரம் கேரளத்தில் லாரி, பேருந்து இரண்டுக்குமான ஓட்டுநர் உரிமத்தை வாங்கியவர்களில் முதல் பெண் இவர்தான்.

கொச்சிக்கு அருகில் தோப்பும்படியில் ஏடூஇசெட் என்னும் பெயரில் ஓட்டுநர் பள்ளியை நடத்திவருகிறார் ராதாமணி. இந்த ஓட்டுநர் பள்ளி 1978-ல் அவரது கணவர் டிவி லாலனால் தொடங்கப்பட்டது. கேரளத்தின் முதல் ஓட்டுநர் பள்ளியும் இதுதான் எனச் சொல்லப்படுகிறது.

ஆர்வத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டாலும் ராதாமணி தொடர்ந்து வாகனம் இயக்கியதில்லை. ஆனால், அதற்கு அடுத்தபடியாகக் கனரக வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. கணவர் பயிற்சி அளிப்பதைப் பார்த்தே அதைக் கற்றிருக்கிறார். ஆர்வத்தால் விரைவில் கற்றுத் தேர்ந்து இருக்கிறார். தோப்பும்படியிலிருந்து சேர்த்தல வரை பேருந்தை இயக்கி இருக்கிறார். இதுதான் அவரது முதல் பயணம். ஆனால் பயம் இல்லாமல் ஒட்டியிருக்கிறார். கார் ஓட்டுவதுபோல், இருசக்கர வாகனம் ஓட்டுவதுபோல்தான் இருந்தது அந்த அனுபவம் எனத் தன் முதல் கனரக வாகன அனுபவத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 1988-ல் அவர் இதைச் செய்தார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

கொச்சிக்கு அருகில் ஆருட்டி என்னும் ஊரிலிருந்து பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு முடிவைக்கூடப் பார்க்காமல் லாலனைத் திருமணம் முடித்து தோப்பும்படிக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவர். அதன் பிறகு தன் தயக்கத்தை எல்லாம் உடைத்து ஒரு முன்னுதாரணமான பெண்ணாக ஆகியிருக்கிறார். 2004-ல் அவரது கணவர் இறந்த பிறகு தன் மகன்களிடன் சேர்ந்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை நடத்திவருகிறார். இன்று பெண்கள் பலர் ஆர்வத்தால் கனரக ஓட்டுநர் பயிற்சி எடுக்க வருகிறார். அதற்கு ராதாமணிதான் கரணம் என்பது கவனத்துக்குரிய விஷயம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in