

ஒவ்வோர் ஆண்டும் மே 8-ம் தேதி சர்வதேச தலசீமியா (ரத்த சிவப்பணுக்களை தொடர்ந்து அழிக்கும் நோய்) தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கும் 1.50 சதவீதம் பேருக்கு தலசீமியா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 1.50 லட்சம் குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: தலசீமியா என்பது ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் மரபணு மாற்றம் ஆகும். இதனால் ஒருவகை ரத்தசோகை ஏற்படும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் உள்ள ஹீமோ குளோபின் இந்த மரபணு மாற்றத்தால் உருமாறுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைக்கு, பெரும்பாலும் பிறந்த இரண்டு வயதுக்குள் ரத்தசோகை கண்டறியப்படுகிறது. முடிந்தவரை நோயை விரைவாக கண்டறிந்து குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது அவசியம். கர்ப்பத்துக்குள் இருக்கும் குழந்தைக்கு தலசீமியா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும். நெருங்கிய சொந்தத்துக்குள் திருமணம் செய்பவர்களின் வாரிசுகளுக்கு இந்நோய் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன?
குழந்தையிடம் சுறுசுறுப்பின்மை, ரத்தசோகையால் உடல் வெளுத்து காணப்படுதல், மஞ்சள் காமாலை, முக அமைப்பு, பற்களின் அமைப்பில் மாற்றங்கள், வளர்ச்சியின்மை, வயிறு வீக்கம் (கல்லீரல், மண்ணீரல் வீக்கம்) ஆகியவை தலசீமியா நோயின் அறிகுறிகள் ஆகும். தமிழகத்திலும் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி மையத்தில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பதிவு பெற்றுள்ளனர்.
சிகிச்சை முறை
தலசீமியா பாதிப்புள்ள குழந்தைக்கு ரத்தசோகை ஏற்படுவதால் அவர்களுக்கு 3 அல்லது 4 வாரத்துக்கு ஒருமுறை சிவப்பு ரத்த அணுக்கள் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து ரத்தம் செலுத்தும்போது, நாள்பட குழந்தையின் உடலில் இரும்புச்சத்து மிகுதி ஏற்படும். இதைத் தடுக்க உரிய மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.
இந்த மருந்துகள், கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவமனையில் 24 மணி நேரமும் தலசீமியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த வங்கியில் இதற்காக எந்த பற்றாக்குறையும் இல்லாமல் துரிதமாக ரத்த அணுக்கள் வழங்கப்படுகின்றன. இந்நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை என்பது நிரந்தர தீர்வாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.