

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது போன்ற பழமொழிகளைக் கடந்துவந்த தலைமுறைக்கு ‘டயட்’, ‘நோ டயட் டே’ போன்றவை புதிது. பள்ளிக் குழந்தைகள்கூட ‘டயட்டில் இருக்கிறேன்’ என்று சொல்வதெல்லாம் காலக் கொடுமை. சரிவிகித உணவு முறைதான் ‘டயட்’ என்பது மாறி, உணவைக் குறைப்பதும் சாப்பிடாமல் இருப்பதும்தான் ‘டயட்’ என்று மாறிவிட்டது. அதீத ‘டயட்’டால் நொந்துபோன பெண் ஒருவரால் உருவாக்கப்பட்டதுதான் ‘நோ டயட் டே’ (No Diet Day). ஒவ்வோர் ஆண்டும் மே 6 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
தங்கள் உடல் எடை குறித்தும் தோற்றம் குறித்தும்தான் பலரும் கவலைப்படுகிறார்கள். வெள்ளித் திரையில் மின்னும் நட்சத்திரங்களுக்கு நிகரான தோற்றப் பொலிவுடனும் உடல்வாகுடனும் இருக்க வேண்டும் என்பதுதான் பலரது லட்சியம். இதில் ஆண், பெண், வயது என்று எந்தப் பாகுபாடும் இல்லை. இயல்பான முகத்தைப் பேரழகாக மாற்றிக் காட்டும் ஃபேஸ் ஆப், மேக் அப் வகையறாக்களே நமக்குள் ஊறியிருக்கும் அழகுத் தேடலுக்குச் சான்று.
நாற்பதுகளைத் தொட்டவர்களுக்கு இளமையாகத் தோன்ற வேண்டும் என்கிற கவலை என்றால் இருபதுகளில் இருப்பவர்களுக்கோ உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பெருங்கவலை. இதற்காக நாளொரு டயட் பிளானும் பொழுதொரு உடற்பயிற்சியுமாகச் செய்வோரும் உண்டு.
புறத்தோற்றம் அடையாளம் அல்ல
இங்கிலாந்தைச் சேர்ந்த மேரி இவான்ஸ் யங் என்பவரும் தன் இளம் வயதில் இப்படித்தான் இருந்தார். கிரேஸ் கெல்லி, டோரிஸ் டே போன்ற ஹாலிவுட் நடிகைகளைப் போல சிவந்த உதடும் நகங்களுமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது பெருவிருப்பம். உடல் எடையைக் குறைத்துத் திரை நட்சத்திரங்களுக்கு இணையாக வலம்வர வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட ‘டயட் பிளான்’களைக் கடைபிடித்தார்.
நடுத்தர வயதை எட்டியதும் உடல் கொஞ்சம் பூசினாற்போல ஆனதும் அவரது கவலை அதிகமானது. சுற்றியிருப்பவர்களின் கேலியும் கிண்டலும் அவரை நாள் முழுக்க உடல் எடை குறித்த கவலையிலேயே வைத்திருந்தது. ஒரு கட்டத்தில் சாப்பாட்டைக் கண்டாலே பதறி ஓடினார். உணவின் மீதான ஒவ்வாமை அவரை ‘அனோரெக்ஸியா’ (உடல் எடை குறைய வேண்டும் என்பதற்காக உணவைத் தவிர்ப்பது, அதிகமாகச் சாப்பிட்டுவிட்டோம் என்கிற எண்ணத்தில் வலிந்து வாந்தியெடுப்பது, உச்சகட்டமாக மனப் பாதிப்புக்கு ஆளாவது) என்னும் பாதிப்பை நோக்கித் தள்ளியது. உடலும் மனமும் பாதிப்படைய ஒருவழியாக அதிலிருந்து மீண்ட மேரி இவான்ஸ், ‘டயட்’டுக்கு எதிரான பிரச்சாரத்தைத் (‘டிச் த டயட்’ - Ditch the Diet) தொடங்கினார். டயட்டுக்காகத் தான் பட்ட பாட்டை எழுதினார். ஒருவரது அடையாளம் அவரது புறத்தோற்றமல்ல; திறமையும் சாதனையும்தான் என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டார்.
டயட் கொள்ளை
அழகு என்பதற்கு எப்படி ஒற்றைத்தன்மையான வரையறை இல்லையோ அப்படித்தான் உடல் வாகுவுக்கும் என்பது மேரியின் வாதம். ‘சிறுத்த இடையும் மெலிந்த கை, கால்களும் மட்டுமே அழகு என்றால், அப்படி இல்லாதவர்கள் அவலட்சணமானவர்களா?’ என்கிற மேரியின் கருத்துக்குப் பலரும் உடன்பட்டனர். ‘அனைத்து வகையான உடல் வடிவத்தையும் ஏற்போம்’ என்பதைத் தன் பரப்புரையாக்கினார். ‘டயட் பிரேக்கிங்’ (Diet Breaking) என்னும் புத்தகத்தை எழுதினார்.
‘உலகம் முழுவதும் இன்று பேலியோ, கீட்டோ, லோ கார்ப் டயட், தி டியூகன் டயட், அல்ட்ரா லோ ஃபேட் டயட், அட்கின்ஸ் டயட், இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்று ஏகப்பட்ட ‘டயட்’ திட்டங்கள் உலா வருகின்றன. இவற்றை வைத்துப் பெரும் கொள்ளையே நடக்கிறது. உண்மையில் பெரும்பாலானோர் பரிந்துரைக்கும் ‘டயட்’ திட்டங்களால் எந்த நிரந்தரத் தீர்வும் கிடைப்பதில்லை. இந்த ஏமாற்று வேலைக்கு நாம் பலியாகிவிடக் கூடாது’ என்பதைத் தன் புத்தகத்தில் எழுதியிருந்தார். ஆளாளுக்கு ஏதோவொரு டயட்டைப் பின்பற்றுவதைப் பார்த்துக் கவலையுற்றவர், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 1992 மே 6 அன்று ‘நோ டயட் டே’ என்பதை அறிவித்து, அன்று ஒரு நாளாவது எந்த டயட் திட்டமும் இல்லாமல் இருப்போம் என்றார். அது கொஞ்சம் கொஞ்சமாக பிற நாடுகளுக்கும் பரவ, ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் மே 6 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
வயதாவது பாவமல்ல
இளம் வயதில் ‘டயட்’ குறித்து எழுதியவர், வயதானதும் இணை ஆசிரியராக இருந்து ‘ஏஜிங் வித் ஆட்டிடியூட்’ (Ageing with Attitude) என்கிற புத்தகத்தை எழுதினார். ‘வயது கூடுவது பாவமல்ல’ என்பதுதான் புத்தகத்தின் கரு. ‘இன்று பெரும்பாலான பெண்கள் தங்கள் வயதைச் சொல்லத் தயங்குகிறார்கள். ஏதாவது வாங்க வேண்டும் என்றால்கூட எனக்கு வயதாகிவிட்டது, வேண்டாம் என்கிறார்கள். வயதாவதற்கும் நாம் வாழ்வதற்கும் என்ன தொடர்பு? இன்னும் சிலர் தங்களை இளமையாகக் காட்டிக்கொள்ள மேக் அப்பை நாடுவார்கள். அதுவும் தேவையற்றது. நான் என் மகளுக்கு அம்மா போல் இருந்தால் போதும், அவளுக்கு மகள் போல இருக்கக் கூடாதல்லவா? தேவையென்றால் என்னால் கோடை மழையில் வெறுங்காலுடன் ஓட முடியும்’ என்று சொல்லியிருக்கிறார் எழுபதுகளைக் கடந்த மேரி இவான்ஸ்.
உடலுக்குத்தான் வயது கூடுமே தவிர, மனத்துக்கு அல்ல என்பதைத் தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துவருகிறார் மேரி. 1960-ல் புறத்தோற்றம் குறித்துக் கவலைப்பட்ட மேரி, 70-களில் பெண் விடுதலை குறித்து யோசிக்கத் தொடங்கினார். அதன் விளைவுதான் புறத்தோற்றம் என்கிற பெயரால் பெண்களின் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை அவர் உணர்ந்துகொண்டதும் அதற்கெதிரான அவரது செயல்பாடுகளும்.
ஆரோக்கியமே அழகு
உண்மையில் புறத்தோற்றம், உடல் வடிவம் போன்றவை எல்லாமே பெண்களின் மீது ஏற்றப்படும் பெரும் சுமை. எல்லாப் பெண்களும் ஒன்றுபோலவே இருந்துவிட்டால் ஒவ்வொருவரின் தனித்தன்மை என்னவாவது? இன்று பெரும்பாலான பெண்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆரோக்கிய உணவைத் தவிர்ப்பதும் அழகு சாதனங்களின் பின்னால் செல்வதும் அவர்களை மீண்டும் அழகுச் சந்தைக்கான காட்சிப் பொருளாகத்தான் ஆக்கும். ‘நம் உடல் நமக்குச் சுமையாக மாறாத வரைக்கும் நாம் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று பொருள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால், இன்றைய தேவை அழகல்ல, ஆரோக்கியமே.