

நம்மில் பலரும் வாழ்க்கையில் பெரும் உயரங்களை அடைய வேண்டும் என நினைப்போம். நம் இலக்கு மாறிக்கொண்டே இருப்பதுபோல், அடைய வேண்டிய உயரத்தின் மேல் உள்ள நம் பிடிப்பும் குறைந்துகொண்டே போகும். கனவு காண்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால், அந்தக் கனவை நனவாக்கியவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள். அந்தச் சிலரைத்தான் நாம் உதாரண புருஷர்களாகக் கொண்டாடுவோம். அம்மாதிரியான முன்னுதாரணமான மனிதராக நீங்கள் மாற வேண்டுமா? அதற்கு எட்டு யோசனைகள்:
எண்ணத் தெளிவு பெறுங்கள்: பலருக்கும் என்ன ஆக வேண்டும் என்பதில் தெளிவு இருப்பதில்லை. மட்டுமல்ல இலக்கை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இம்மாதிரி தெளிவில்லாமல் இருப்பதால் நீங்கள் இலக்கை அடைய முடியாமல் போகலாம். அதனால் என்னவாக ஆகப் போகிறீர்கள் என்பதில் முதலில் தெளிவாக இருக்க வேண்டும்.
இலக்கை எழுதுங்கள்
நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதை எழுதிவைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில், கல்லூரிகளில் தேர்வுகளில் நாம் பதில்களை எழுதக் காரணம் அது நம் மனத்தில் நன்கு அழுந்தப் பதிய வேண்டும் என்பதால்தான். அதுபோல் என்ன இலக்கு என்பதை நீங்கள் எழுதிவைக்கும்போது உங்கள் மனத்தில் அது வலுவாகப் பதியும்.
தயாராகுங்கள்
இலக்கைத் தீர்மானித்து, எழுதிவைத்தாகிவிட்டது. இனி அவ்வளவுதான் இலக்கை அடைந்துவிடலாம் என நினைக்கலாகாது. நம் இலக்கை அடைவதற்கான முன் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். சினிமாவில் ப்ரீ ப்ரடெக்சன் பணி என்பர்களே அதுபோல்தான் இதுவும். இலக்கை அடைவதற்கு நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வது. உதாரணமாக நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் சாதிக்க விரும்புகிறீர்கள் என்றால், அந்தத் துறை பற்றி படிக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் ஆக வேண்டுமென்றால், அதன் நுட்பங்களைப் பயில வேண்டும்.
தடைகளைக் கண்டுபிடியுங்கள்
முன் தயாரிப்புகள் எல்லாம் எடுத்தாகிவிட்டது என உடனடியாக களத்தில் இறங்கிவிட முடியாது. இந்தப் பாதையில் சென்றால் என்னனென்ன தடைகள் வரும் என்பதைக் கண்டுணர வேண்டும். அதன் மூலம் அந்தத் தடைகளை நீங்கள் எதிர்கொண்டு முன்னேற முடியும்.
இலக்குக்கான ஒத்துழைப்புகளைக் கண்டறியுங்கள்
நாம் இலக்கை நோக்கிப் பயணிப்பவதற்கு என்ன மாதிரியான ஒத்துழைப்புகளைக் கண்டறிய வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு என்றால் அதை அடைவதற்கான ஒத்துழைப்புகள் எந்த வழிகளில் நமக்குக் கிடைக்கும் என்பதை நாம் கண்டுபிடித்து அதை நம் வெற்றிக்காகப் பயன்படுத்த வேண்டும். அது பயிற்சி, மனிதர்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
முழுமையான திட்டத்தை உருவாக்குங்கள்
இலக்கை அடைவதற்கு முழுமையான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். எப்போது தொடங்க வேண்டும், அதற்கான தயாரிப்புகள், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் என்பவற்றைப் பற்றி ஒரு முழுமையான செயல் திட்டத்தைத் தயாரித்துவைத்துக்கொள்ள வேண்டும்.
செய்யுங்கள்
இப்போது நாம் தயாராகிவிட்டோம். இனிச் செயல்படுத்தத் தொடங்க வேண்டும். செயல்படுத்தும்போதுதான் நம் இலக்கை நோக்கியான பயணம் உண்மையில் தொடங்கும். திட்டமிட்டுக்கொண்டே நாட்களைக் கடத்திவிடக் கூடாது.
உங்களைக் கண்காணியுங்கள்
செயல்பாட்டைத் தொடங்கிய பிறகு நாம் திட்டமிட்டபடி எல்லாம் ஒழுங்காகச் செல்கிறாதா, என்பதைக் கண்காணிக்க வேண்டும். இதை மூன்றாம் ஒரு நபர் ஒருவர் மூலமாகக்கூடச் செய்யலாம். அப்போதுதான் நாம் நம் இலக்கை சரியான காலத்தில் அடைய முடியும்.