

கோடைக்காலம் இது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க மலைப் பிரதேசங்களை நோக்கி ஓரிரு நாட்களுக்கு மக்கள் நகரும் நாட்கள். எல்லோராலும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று திட்டமிட முடியாது. அதுபோன்ற சூழலில் அருகில் உள்ளே மலைப்பிரதேசங்களுக்குச் செல்லலாம். அந்த வகையில் மத்திய மண்டலத்தையொட்டி கொங்கு மண்டலப் பகுதியில் இருக்கும் கொல்லிமலைக்குச் சென்றுவரலாம்.
கிழக்குத் தொடர்ச்சி மலை: தமிழகத்தில் கிழக்குத் தொடர்ச்சிமலையின் கடைசி மலை கொல்லி மலை. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ., தொலைவில் சேந்தமங்கலம் பகுதியில் கொல்லிமலையின் ஆதிக்கம் தொடங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,000 முதல் 1,600 மீட்டர் உயரமுள்ள இந்த மலை வடக்குத்தெற்காக 28 கி.மீ., பரப்பளவும், கிழக்கு மேற்காக 19 கி.மீ., பரப்பளவும் கொண்டது. மொத்தமாக 441.4 சதுர கி.மீ., பரப்பளவில் விரிந்துள்ளது. கொல்லி மலையில் அதிகமான மூலிகைகள் நிறைந்துள்ளதால் இதற்கு ‘மூலிகைகளின் ராணி’ எனச் சிறப்புப் பெயரும் உண்டு. ‘வேட்டைக்காரன் மலை’ என்றொரு பெயரும் உண்டு.
கொல்லிப்பாவை என்கிற அம்மன் இந்த மலையைப் பாதுகாக்கிறாள் என்கிற நம்பிக்கையால் இந்த மலைக்குக் கொல்லிமலை என்று பெயர் வந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோன்று கொல்லி எனப்படும் வானளாவிய மரங்கள் இங்கே அதிகமாக இருக்கின்றன. இம்மலைகளின் ஆதிக்கத்தால், கொல்லிமலை என அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே கொல்லிவாய்ப் பறவைகள் அதிகம் இருந்ததால் இது கொல்லிமலை என்று பெயர் பெற்றதாகவும்கூடக் கதைகள் உலவுகின்றன.
புகழ் பெற்ற சந்தை
ஆனால், கொல்லிமலை என்றால் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசம். கொல்லிமலையில் இருந்து சுவேதா ஆறு, கோம்பை ஆறு, அய்யாறு, கட்டாறு, கருவோட்டாறு, பஞ்ச நதி போன்ற சிற்றாறுகள் உற்பத்தியாகி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளை நிரப்பி காவிரி ஆற்றில் கலக்கின்றன. கொல்லிமலையில் நீர் ஊற்று நிறைந்த இடங்கள் அதிகம் உள்ளன. இதற்கு இந்தச் சிற்றாறுகளே காரணம்.
நீர் நிறைந்த மலை என்பதால், இம்மலையில் மா, பலா, வாழை, கொய்யா, அன்னாசி போன்ற மலைப் பழங்களும், இங்கே நிறைந்துள்ள மூலிகைகளும் அதிக அளவில் உற்பத்தியாகும் மிளகு, பூண்டு, காபி ஆகியவை கொல்லிமலைக்குப் பெயர் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. கோடைக்காலத்தில் நடக்கும் வாரச் சந்தைகளில் பொருட்கள் வாங்க பல ஊர்களிலிருந்து வருவது இந்த ஊர்ச் சந்தையின் சிறப்புகளில் ஒன்று. எனவே, இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்கிவருகிறது.
மலைப்பாதையின் தொலைவு
26 கி.மீ.,செங்குத்தான இம்மலைப் பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலையில் குடிகொண்டுள்ள அறப்பளீஸ்வரர் கோயிலும் பெரியண்ணன் கோயிலும் பிரசித்திபெற்ற ஆன்மிகத் தலங்கள். இம்மலையில் விழும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவருகிறது. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து வெளியேறும் தண்ணீர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து திருச்சி மாவட்டத்தில் புளியஞ்சோலை என்கிற பகுதியை அடைகிறது. கொல்லிமலையில் பறவைகள், அரிய வகை கரடி, மான், மயில், காட்டுப் பன்றி, பாம்புகள், குரங்குகள் நிறைந்திருக்கின்றன. சுற்றுலா சென்று வர ஏதுவான பகுதி இது.