Published : 06 May 2022 06:28 PM
Last Updated : 06 May 2022 06:28 PM

ஊழியர்களின் குட்டித் தூக்கத்திற்காக 30 நிமிட இடைவேளை! - கர்நாடக நிறுவனத்தின் முன்முயற்சி

புதுடெல்லி: வேக்ஃபிட் சொல்யூஷன் என்ற இந்திய நிறுவனம் தனது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இனி தினமும் அலுவலக வேலை நேரத்தில் அரை மணி நேரம் தூங்குவதற்கான நேரம் என அறிவித்துள்ளது.

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் வரும் என்பார்கள். மதிய உணவுக்கு பின்பு வரும் ஒரு குட்டித் தூக்கத்தை எல்லோரும் உணர்ந்திருப்போம். அந்த நேரத்தில் தேநீரோ, காபியோ குடிப்பது ஒன்றே அதனைச் சமாளிக்க இருக்கும் ஒரே வழி. இந்த நிலையில், வேக்ஃபிட் சொல்யூஷன் தனது ஊழியர்கள் அனைவரும் இனி தினமும் அரைமணி நேரம் அலுவலகத்தில் தூங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

கர்நாடகாவை தலைமையிடமாக் கொண்டு ஆன்லைனில் மெத்தைப் பொருட்கள் விற்பனை செய்யும் வேக்ஃபிட் சொல்யூஷன் என்ற நிறுவனம் தனது ஊழியர்களின் நலனை மனதில் கொண்டு இந்த முன்முயற்சியை பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சைத்தன்ய ராமலிங்க கவுடா, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், 'ஊழியர்கள் தினமும் பிற்பகல் 2 - 2.30 மணி வரையில் தூங்குவதற்காக எடுத்துக்கொள்ளலாம். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக நல்ல உறக்கத்திற்காக மெத்தைகளை விற்பனை செய்துவரும் நாம், மதியம் உறக்கத்திற்கு அநீதி இழைத்திருக்கிறோம். இன்று முதல் நாம் அதை கவனத்தில் எடுத்துக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மதிய நேரத் தூக்கம் எப்படி சிறப்பாக செயல்படுவதற்கும், அதிக உற்பத்திக்கும் உதவுகிறது என்று ஆய்வுத் தகவலை மேற்கோள் காட்டியுள்ள அவர், நாசாவின் ஆய்வு ஒன்று '26 நிமிட பூனைத் தூக்கம் மூலம் 33 சதவீதம் செயல்திறனை அதிகரிக்கச் செய்யலாம்' எனத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, வேக்ஃபிட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், மதிய உறக்கத்திற்கான நேரத்தில் அதன் ஊழியர்கள் பணி செய்யவேண்டியது இல்லை. ஊழியர்கள் தங்குதடையின்றி தூங்குவதை உறுதி செய்வதற்கு தூங்கும் அறைகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு வேக்ஃபிட் நிறுவனம் நடத்திய, "ரைட் டூ ஒர்க் நாப்ஸ்" என்ற கணக்கெடுப்பில் பங்கேற்ற 1,500 பேரில் 70 சதவீதத்தினர் தங்களுக்கு தூங்குவதற்கு அறைகள் இல்லை என்றும், 86 சதவீதம் பேர் குட்டித் தூக்கம்தான் தங்களின் செயல்திறனை அதிகரிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

வேக்ஃபிட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மற்ற நிறுவன ஊழியர்களின் மத்தியில் ஆச்சரியத்தையும், தங்கள் நிறுவனத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, மற்றொரு நிறுவனமான ஜீரோதா, மாலை 6 மணிக்கு மேல் அலுவல் சார்ந்த தொடர்புகள் கிடையாது என்று அறிவித்திருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x