கோமங்கலம்புதூரில் 500 ஆண்டுகள் பழமையான புதுப்பிக்கப்பட்ட ‘பங்களா கோர்ட்’ கட்டிடம் திறப்பு

கோமங்கலம்புதூர் கிராமத்தில் புனரமைக் கப்பட்ட பங்களா கோர்ட் கட்டிடம். (உள்படம்) அதனை திறந்து வைத்த சிறுவர், சிறுமிகள். படங்கள்: எஸ்.கோபு
கோமங்கலம்புதூர் கிராமத்தில் புனரமைக் கப்பட்ட பங்களா கோர்ட் கட்டிடம். (உள்படம்) அதனை திறந்து வைத்த சிறுவர், சிறுமிகள். படங்கள்: எஸ்.கோபு
Updated on
1 min read

பொள்ளாச்சி அருகே கோமங்கலம் புதூர் கிராமத்தின் அடையாளமாக திகழும் பழமையான ‘பங்களா கோர்ட்’ கட்டிடத்தை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைத்து, சிறுவர், சிறுமிகளை கொண்டு சமீபத்தில் திறந்து வைத்தனர்.

இதுகுறித்து கோமங்கலம் புதூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் கூறியதாவது:

பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ள கோமங்கலம்புதூர் கிராமத்தின் நுழைவுவாயிலாக, 500 ஆண்டுகள் பழமையான, பங்களா கோர்ட் உள்ளது. தற்போது பல்வேறு வழித்தடங்கள் இருந்தாலும், முந்தைய காலத்தில் இந்த பங்களா கோர்ட் வழியாகத்தான் கோமங்கலம் கிராமத்துக்கு செல்ல முடியும். ஓடுகள் வேயப்பட்ட கட்டிடத்தில், இருபக்கமும் 4 அடி உயரத்தில் சுமார் 100 சதுர அடி பரப்பளவு கொண்ட மேடையில் அமர்ந்துதான் முன்பு பல வழக்குகளுக்கு ஊர் பெரியவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். குடிசைகள் நிறைந்த பகுதியில், இந்த கட்டிடம் மட்டுமே பெரியதாக இருந்ததால் ‘பங்களா கோர்ட்’ என அழைத்துள்ளனர்.

மேலும் புரட்டாசி, மார்கழி மாதங்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியின்போது, வீதி உலா வரும் பெருமாளின் உற்சவத்தை இந்த மேடையில் வைத்து பஜனை பாடல்கள் பாடி பொதுமக்கள் வழிபாடு செய்வது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது.

ரஜினியின் வள்ளி திரைப்படம் உட்பட பல்வேறு மொழிப் படங்களில் இடம்பெற்றுள்ள இந்த கட்டிடத்தின் மீது, லாரி மோதியதில் இரண்டு பக்கமும் இருந்த தூண்கள் சேதமடைந்தன.

ஊரின் அடையாளமாக திகழும் பங்களா கோர்ட்டை பொதுமக்கள் சார்பில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு சீரமைப்பு பணிகள் தொடங்கின. சேதமடைந்த தூண்கள் அகற்றப்பட்டு நாகர்கோவில் பகுதியில் இருந்து கல் தூண்கள் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டன. மேடையின் இருபுறமும் உள்ள சுவர்களில் வில்லிபுத்தூர் கோயிலின் ராஜகோபுரம் மற்றும் சிதம்பரம் கோயிலின் ராஜகோபுரம் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிராமத்தின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் பறைசாற்றும் வகையில் உள்ள இந்த பங்களா கோர்ட்டின் சிறப்பை இளம் தலைமுறையினரும் உணர வேண்டும் என்பதற்காக, புதுப்பிக் கப்பட்ட கட்டிடத்தை சிறுவர், சிறுமிகளை கொண்டு பொதுமக்கள் திறந்துவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in