

விவசாயமும் நெசவும் முதன்மைத் தொழில்களாக விளங்கிய வட ஆற்காட்டுப் பகுதிகள், எளிமையான உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டவை. தோல் தொழிற்சாலைகளின் வருகை, உலக மயமாக்கல் போன்றவற்றின் விளைவாக நகரங்கள் உருவாவதற்கு முன்புவரை கிராமங்கள் தங்கள் தனித்தன்மையை இழக்காமல் இருந்தன. மற்ற மாவட்டங்களைப் போல் சாப்பாட்டுக்கடைகளும் பலகாரக் கடைகளும் அந்தக் காலத்தில் இங்கு இல்லை.
தானியச் சாப்பாடு
பருவ மழையை நம்பித்தான் இங்கு விவசாயம் நடந்தது. அதனால், மானாவாரிப் பயிர்களே பெரும்பாலும் பயிரிடப்பட்டன. சோளம், கேழ்வரகு, கம்பு, நிலக்கடலை (வட ஆற்காட்டு வழக்கில் கலக்கா) போன்றவை அதிகமாகப் பயிரிடப்பட்டன. சோளத்தைப் பயிரிடுவதும் பராமரிப்பதும் எளிது. அதனால் வெள்ளைச் சோளமும் அரசாங்கம் தருகிற மஞ்சள் சோளமும் அதிகம் பயிரிடப்பட்டன.
தண்ணீருக்குத் தட்டுப்பாடு இல்லாதவர்கள் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், மஞ்சள், மிளகாய் போன்றவற்றைப் பயிரிட்டனர். இவை தவிர மொச்சை, துவரை, காராமணி, பச்சைப் பயறு போன்றவையும் பயிரிடப்பட்டன. இவற்றையொட்டியே வட ஆற்காட்டு மக்களின் உணவுப் பழக்கமும் இருந்தது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலும் கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவற்றில் செய்யப்பட்ட களியும் கூழும்தான் முதன்மை உணவாக இருந்தன. சோளத்தை ஊறவைத்து, குருணையாக இடித்துக் கூழ் காய்ச்சுவார்கள். அரவை இயந்திரங்கள் வந்த பிறகு தானியங்களை அரைத்து மாவாக்கிக் களி செய்து சாப்பிட்டார்கள். மாவட்டம் முழுவதும் நெல் பயிரிடப்படும் என்றாலும் அனைவர் வீடுகளிலும் நெல்லுச் சோறு கிடையாது. நிலம், நீச்சு வைத்திருந்தவர்களும் வசதிபடைத்தவர்களும் மட்டுமே மூன்று வேளையும் நெல்லுச் சோறு சாப்பிட்டார்கள். குடியானவர்கள் வீடுகளில் அமாவாசை, பண்டிகை நாட்களில் மட்டும்தான் நெல்லுச் சோற்றைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களுக்கு வேலைக்குச் செல்கிறவர்களின் வீடுகளிலும் நெல்லுச் சோறு உண்டு.
“அரக்கோணத்துல வேலை இருக்கு, ஆக்குடி சோத்தை.
அந்த வேலையும் தவறிப்போச்சி
கலக்குடி பொண்ணே கூழை”
என்கிற சொலவடை வட ஆற்காட்டு கிராமங்களில் பிரசித்தம்.
நாட்டுக் காய்களே ஆதாரம்
எண்ணெய் அரிதான பொருளாகத்தான் இருந்திருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கும் பலகாரங்கள் செய்யவும் மரச் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. சுவையில் வேலூர் முள் கத்தரிக்காய்க்கு நிகர் வேறில்லை. கத்தரியோடு வெண்டை, அவரை, கொத்தரவரங்காய், சுரைக்காய், பூசணிக்காய் (பறங்கிக்காய்), பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், முள்ளங்கி, முருங்கைக்காய் போன்ற நாட்டுக் காய்கறிகள் சமையலில் முக்கிய இடம் பிடித்தன.
இவை தவிர கழனிக்காடுகளில் தானாகவே விளையும் காய்கறிகளையும் சமையலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி விளைந்த சுக்கங்காய் (கண்டங்கத்திரி போல இருக்கும்), பிச்சக்காய் போன்றவற்றை உப்பும் காரமும் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள்.
ஏழை பாழைகளின் பசியாற்றியவற்றில் கீரைகளுக்கு முக்கிய இடம் உண்டு. பொதுவாகப் பலரது வீடுகளிலும் முருங்கை மரம் இருக்கும் என்பதால் முருங்கைக் கீரையைப் பல வகையிலும் சமைத்திருக்கிறார்கள். முருங்கைக்கீரையை எண்ணெய் ஊற்றாமல் வேகவைத்து அதனுடன் வறுத்த வேர்க்கடலை, பூண்டு இரண்டையும் இடித்துச் சேர்த்துச் சாப்பிடுவது வழக்கம். இன்றும் ஆடி மாதத்தில் பலரது வீடுகளில் இதைச் செய்வார்கள். அதேபோல் புளிச்சகீரையும் இந்தப் பகுதிகளில் அதிகம் விரும்பி உண்ணப்பட்டது. அதிக புளிப்பு விரும்பாதவர்கள் அதனுடன் கத்தரிக்காயைச் சேர்த்துக் கடைந்து சாப்பிடுவார்கள்.
மழை பெய்து முடித்ததுமே கொல்லைப்புறங்களில் முளைக்கிற கீரை வகை அனைத்தையுமே சமையலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். குப்பை மேட்டில் விளைவதால் அந்தக் கீரையைக் குப்பைக்கீரை என்று சொல்வார்கள். வட ஆற்காட்டின் தனித்துவம் மிக்க கீரைகளுள் ஒன்று பண்ணைக்கீரை. இதனுடன் புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவைத்துக் கடைந்து சாப்பிடுவார்கள்.
மழைக்காலங்களில் காளான்களையும் சமைத்துச் சாப்பிடுவார்கள். உண்ணத் தகுந்த காளானைத் தேடியெடுப்பது தனி கலை. மண்ணுக்கு மேலே வெள்ளையாகத் தலைகாட்டும் காளானைக் கண்டறிந்து, மண்ணை லேசாகக் கீறினால் உள்ளே முட்டை முட்டியாகக் காளான் பூத்திருக்கும். விஷக் காளான்களும் நாய்க்குடைக் காளான்களும் அதிகமாக இருக்கும் என்பதால் உண்ணத் தகுந்த காளானைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பார்கள்.
பண்டிகை பலகாரங்கள்
தினசரி உணவைப் போலவே பலகாரங்களும் எளிமையானவையே. இட்லியும் தோசையும்கூடப் பலகார வகையில்தான் சேரும். காரணம் தீபாவளி, பொங்கல், கார்த்திகை, வருடப் பிறப்பு போன்ற நாட்களில்தான் பலரது வீடுகளில் இவற்றைச் சமைப்பார்கள். பச்சரியை ஊறவைத்து, தண்ணீர் வடித்து, நொய்போல் இடித்துக்கொள்வார்கள். அதை முறத்தில் கொட்டிப் புடைத்து சிறு நொய்யாகக் கொழித்தெடுப்பார்கள். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி ஆறவிடுவார்கள். புழுங்கல் அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்து, உரலில் மாவாக அரைப்பார்கள். இந்த மாவை, ஆறவைத்திருக்கும் நொய்க் கஞ்சியோடு சேர்த்து உப்பு போட்டுக் கரைத்துவைத்துவிடுவார்கள். இரவுக்குள் புளித்துவிடும் இந்த மாவில் மறுநாள் காலை தோசை சுட்டால் தெருவெல்லாம் மணப்போதோடு சுவையும் அலாதியாக இருக்கும். நொய்யைக் காய்ச்சி ஊற்றுவதால் தோசை பஞ்சுபோல மிருதுவாக இருப்பதுடன் லேசான இனிப்புச் சுவையோடு இருக்கும்.
தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம் இரண்டையும்தான் அதிகமாகச் செய்வார்கள். இந்தப் பகுதியில் பலரது வீடுகளிலும் தீபாவளியன்று கறி சமைக்கும் வழக்கம் உண்டு. அதனால் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளியைக் கொண்டாடிவிடுவார்கள். தீபாவளியன்று காலை இட்லியும் நாட்டுக்கோழி குழம்பும்தான் முக்கிய உணவு. மறுநாள் நோன்பு எடுப்பவர்கள் நோன்பு முடிந்ததும் பலகாரங்களைத் தங்கள் பிறந்த வீட்டுப் பெண்களுக்கு எடுத்துச் சென்று கொடுப்பார்கள்.
இனிப்பு செய்ய மண்டை வெல்லம் எனப்படும் பாகுவெல்லத்தையே பயன்படுத்துவார்கள். ரேஷனில் வெள்ளை சர்க்கரை கிடைத்த பிறகும், வேலூரில் சர்க்கரை ஆலை அமைந்த பிறகும் மக்களிடையே வெல்லத்தின் பயன்பாடு குறைந்து, அந்த இடத்தை வெள்ளைச் சர்க்கரை பிடித்துக்கொண்டது.
காரசாரமான காராமணி வடை
பலகாரங்களில் வடைக்கு முக்கிய இடம் உண்டு. மசால் வடை, ஆமை வடை (பருப்பு வடை) எல்லாம் பிற்காலத்தில் வந்தவை. அந்தக் காலத்தில் காராமணியில்தான் வடை சுட்டார்கள். காராமணிப் பயறைக் கையால் அரைக்கும் எந்திரத்தில் (திருகை) போட்டு ஒன்றிரண்டாக உடைத்து, தோல் போக புடைத்துக்கொள்வார்கள். அதை ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து உரலில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்வார்கள். அந்த மாவை வடையாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுத்தால் அதன் சுவைக்கு முன் வேறெந்த வடையும் எடுபடாது.
வறுத்த நிலக்கடலையோடு வெல்லப்பாகு ஊற்றி உருண்டையாகப் பிடிக்கப்படும் பொருள்விளங்காய் உருண்டையை மாதக் கணக்கில் வைத்துச் சாப்பிடலாம். வளைகாப்பு, காது குத்து போன்ற விசேஷ நாட்களில் சிவப்பரிசியோடு வெல்லம் கலந்து வைக்கப்பட்டும் ‘மசக்கை அரிசி’யும் முக்கியமானது.
(தொடரும்)