

இன்றைய தேதியில் உலகில் பழமையான ஹோட்டல் எங்கு இருக்கிறது தெரியுமா?ஜப்பானில் இருக்கிறது. ‘ரயோகன்’ என்ற அந்த ஹோட்டல் கட்டப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 1,304 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஹோட்டலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தாம் கடந்த 46 தலைமுறைகளாக நிர்வகித்து வருகிறார்கள் என்பது வியப்புக்குரிய அம்சம்!
உலகில் ஹோட்டல்கள் இல்லாத நாடுகளே இல்லை.17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ஹோட்டல்கள் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், ஜப்பானில் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. அதாவது கி.பி. 718-ஆம் ஆண்டில் ‘ரயோகன்’ ஹோட்டல் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த ஹோட்டல் 1.304-ஆம் வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
ஒரு தலைமுறை என்பது 30ஆண்டுகளைக் குறிக்கும். இன்று பெரும்பாலோனருக்குத் தன்னுடைய அப்பாவின் தாத்தா என்ன தொழில் செய்தார் என்று கேட்டாலேயே தெரியாது. அல்லது சொல்வதற்குத் தடுமாறுவார்கள். ஆனால், ஜப்பானில் ‘ரயோகன்’ ஹோட்டலை நிர்வகிப்பது 46-வது தலைமுறையாகும். அதாவது சரியாக 30 ஆண்டுகளுக்கொரு முறை இந்த ஹோட்டல் புதிய தலைமுறையின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. வாழையடி வாழையாக என்ற சொல் பதத்துக்கு ஏற்ப ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹோட்டலை நிர்வகித்து வருவது உலக அதிசயம்தான். ஜப்பானில் மட்டுமல்ல., உலக அளவிலும் இதுதான் மிகவும் பழமையான நிறுவனம். அதனால், இந்த ஹோட்டல் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது.
அதெல்லாம் சரி, ஜப்பானில் இந்த ஹோட்டல் எங்குள்ளது? ஹோன்ஷு தீவில் இஷிகாவா என்ற இடத்தில் உள்ளது பல தலைமுறைகள் கண்ட இந்த ஹோட்டல். ஹோஷி என்பவரால் இந்த ஓட்டல் தொடங்கப்பட்டது. 100 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் ஒரே சமயத்தில் 450 பேர் வரை தங்க முடியும். காலத்துக்கு ஏற்ப பல நவீன வசதிகளும் மாற்றங்களும் ஹோட்டலில் புகுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அதன் பழமை மாறாமல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இந்த ஹோட்டலின் சிறப்பம்சமே ஜப்பான் நாட்டு உணவு வகைகளை கொஞ்சமும் பழமை மாறாமல் அதே பாரம்பரியத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான். ஹோட்டல் கட்டப்பட்ட புதிதில் ஜப்பான் நாட்டு பருவநிலைக்கு ஏற்ப அந்தந்தப் பருவத்தின் பெயர்களை ஓட்டல் அறைகளுக்குப் பெயராகச் சூட்டினார் ஹோஷி. இது இன்றும் அப்படியே தொடர்கிறது. அடேங்கப்பா!
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription