

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப அலையால் பல்வேறு உடல் நலக்குறைப்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் அதிகளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தோல் சார்ந்த நோய்களும், அலர்ஜிகளும் மாணவர்களை இம்முறை அதிகம் பாதித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வெப்ப அலை இம்மாதம் முழுவதும் நீடிக்கும் என்பதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகிறது. கோடை வெயிலால் ஏற்படும் சரும, உடல் பிரச்சனைகள் என்னென்ன, அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் யாவை? - இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு தெளிவூட்டும் வகையில் 'இந்து தமிழ் திசை'யில் மருத்துவர் கு.கணேசன் பதிந்தவை இங்கே...
சருமத்தில் எரிச்சல்: அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்தவேளையில், CXCL5 எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இந்தப் பாதிப்புள்ளவர்கள், மருத்துவரை அணுகி வலிநிவாரணி மாத்திரைகள், எரிச்சலைக்குறைக்கும் களிம்புகளைப் பயன்படுத்திப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்.
‘வெப்பப் புண்’ (Sun Burn) என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பிரச்சினையை எளிதில் தடுத்துவிடவும் முடியும். வெயிலில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் ஏற்கெனவே சொன்ன சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க எளிய வழி. மேலும், பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக்கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை ஆடைகளை அணிவதும் சரு மத்துக்குப் பாதுகாப்பு தரும்.
சரும வறட்சி: கோடையில் நமக்கு வியர்வை அதிகமாகச் சுரந்து வெளியேறுகிறது. இதனால் சருமத்திலுள்ள நீர்தன்மை வற்றிவிடுகிறது. அதை ஈடுகட்டுமளவுக்கு அடிக்கடி நாம் தண்ணீர் அருந்த வேண்டும். அப்படி அருந்தாதபோது, சருமம் வறண்டுவிடும். அடுத்து, சருமத்தில் சீபம் எனும் எண்ணெய்ப் பசையுள்ள ஒரு கொழுப்புப் பொருள் சுரக்கிறது. இதுதான் சருமத்தை வறட்சி அடையாமல் பார்த்துக்கொள்கிறது. கோடையில் நாம் குளிக்கும்போது அழுக்கு போகக் குளிக்க வேண்டும் என்று கருதி, சருமத்தை மிக அழுத்தமாகத் தேய்த்துக் குளிப்போம். இது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றிவிடும். இதனாலும் சருமம் வறண்டுவிடுகிறது.
சருமம் வறட்சி அடையாமலிருக்கத் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பழங்கள், பழச்சாறுகள், இளநீர், மோர், பானகம், சர்பத் போன்றவற்றை அதிகமாகக் குடிக்க வேண்டும். வறண்ட சருமத்தில் பாரஃபின் எண்ணெய் அல்லது தரமான மாய்ஸ்சுரைசர் களிம்பைப் பூசிக்கொண்டால் பிரச்சினை தீரும்.
சூரிய ஒளி ஒவ்வாமை: உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை என்று இருப்பதுபோல், ஒரு சிலருக்குச் சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். இவர்கள் வெயிலுக்குச் சென்றுவிட்டால் போதும், உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும். ‘சோலார் அர்ட்டிகேரியா’ ( Solar Urticaria ) என்று அழைக்கப்படும் இந்தத் தொல்லையைத் தடுக்க வேண்டுமானால், கோடையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதையும் மறைக்கின்ற வகையில் ஆடை அணிய வேண்டும். ‘சன் பிளாக்’ லோஷன்களைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பிரச்சினைக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.
வியர்க்குரு: கோடையில் சுற்றுப்புற வெப்பநிலை சர்வசாதாரணமாக 40-லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க வழக்கத்தைவிட, மூன்று மடங்கு வியர்வை சுரக்கிறது. இந்த வியர்வையை அவ்வப்போதுத் துடைத்து உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குரு பவுடர் அல்லது காலமின் லோஷனை வியர்க்குருவில் பூசினால் அரிப்பு குறையும்.
வெப்ப நோய்களை வெல்லும் வழிகள்: வெயில் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள், குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக்குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.
இதற்குப் பதிலாக இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.
இதனால், உடலின் நீரிழப்பால் ஏற்படுகிற பாதிப்புகளை உடனடியாகக் குறைகின்றன. எலுமிச்சை சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.
பழங்களை அதிகப்படுத்துங்கள்: தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் வியர்வையில் பொட்டாசியம் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கப் பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.
எண்ணெய் தவிர்: கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றைத் தவிர்ப்பதே நல்லது. அதேபோல் சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த கோடை உணவு: இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவு வகைகள். மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும் தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.