

கொடைக்கானல்: கோடை வெயில் அதிகரித்ததால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித் துள்ளது.
சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க உணவகங்களில் விலைப்பட்டியல், கூடுதல் போலீஸார் நியமனம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் தாமதமாகத் தொடங்குவதால் பள்ளிகளுக்கு முழுமையாக விடுமுறை விடப்படவில்லை. இருப்பினும் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 1 முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த மாத கடைசி வாரத்தில் கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், வழக்கம்போல் அதிகாரிகள் ஏட்டளவிலேயே திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
கூடுதல் காவலர்கள் தேவை
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீஸாரை நியமிப்பர்.
மாவட்டத்தின் பிற பகுதிகள், மதுரை, சிவகங்கை, தேனி மாவட்ட போலீஸார் சுழற்சி முறையில் கொடைக்கானலில் 2 மாதங்கள் மட்டும் பணியில் இருப்பர். இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்படவில்லை. இதனால் குறைவான போலீஸாரை கொண்டு கொடைக்கானலில் திரளும் சுற்றுலா பயணிகள், வாகனங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கொடைக்கானலில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிப்படுகின்றனர். கோடை சீசன் நேரத்தில் ஒரு மாதத்துக்காவது கூடுதல் போலீஸாரை நியமிக்க தென்மண்டல ஐஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவக விலைப்பட்டியல்?
கொடைக்கானலில் உள்ள பல உணவகங்களில் விலைப்பட்டியல் இருப்பதில்லை. இதைக் கண்காணிக்கும் நகராட்சி நகர்நல அதிகாரி உள்ளிட்டோர் இதை கண்டு கொள்வதில்லை. இதனால் சாப்பிட்டு முடித்தவுடன் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு சுற்றுலா பயணிகள் தள்ளப்படுகின்றனர். பல இடங்களில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு உருவாவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
கூடுதல் படகுகள்
கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் கொடைக்கானல் போட் கிளப் மூலமும் படகுகள் இயக்கப்பட்டன. தற்போது போட் கிளப் அனுமதி முடிந்து மூடப்பட்டுள்ளதால், ஏரியில் இயக்கப்படும் படகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்க கூடுதல் படகுகளை இயக்கவேண்டும்.