

இயக்குநர், நடிகர் விசுவின் படம் ஒன்றில் இப்படி ஒரு வசனம் உண்டு. "பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா, அவர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர்கிட்ட போய் வைத்தியம் பார்ப்பார்" - இந்த நீண்ட வசனத்தின் கேலிகளை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், இந்தக் கேள்வி மிக முக்கியமான ஒன்று. உளவியலாளர்களும் மனநோயால் பாதிக்கப்படுகிறார்களா? அப்படி பாதிக்கப்பட்டால் தங்களின் நோயாளிகளுக்கு அறிவுறுத்துவது போல உளவியலாளர்களும் அதனை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறார்களா? - இப்படி கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
துரதிர்ஷ்டவசமாக உளவியல் மாணவர்களும், உளவியலாளர்களும் தங்களின் மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசுவது இல்லை. அப்படி பேசுவது அவர்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மனநலத் துறையில் உள்ள வல்லுநர்கள் கூட தங்களுடைய மனநோய் பற்றிய அனுபவங்களை மறைக்கவே பார்க்கிறார்கள். இந்த மவுன கலாசாரம், மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவது பற்றி உளவியலாளர்கள் அறிந்து வைத்திருக்கும் உண்மைகளுக்கு எதிராக அமைந்து விடுகிறது.
உளவியலாளர்கள் மனநலன் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இந்த மூடநம்பிக்கையைக் குறைக்கவும், மற்றவர்கள் பயன் பெறவும் ஊக்குவிக்கும் என்கின்றனர் தென் புளோரிடா பல்கலைக்கழகத்தில், மருத்துவ உளவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆண்ட்ரூ டெவெண்டோர்ஃப், டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியல் உதவிப் பேராசிரியர் சாரா விக்டர். தி கான்வர்சேஷன் தளத்துக்காக அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது...
காய்ச்சல், தலைவலியைப் போலவே இன்று மனநோயைப் பற்றி பேசுவதும் பரவலாகியிருக்கிறது. விளையாட்டு, பொழுதுபோக்குத் துறை பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் மனநலம் பற்றி பொதுவில் பேசத் தொடங்கியுள்ளனர்.
உண்மையில் மனநல சிகிச்சை அளித்து வரும் உளவியலாளர்கள் தங்களின் மனநலம் பற்றி வெளிப்படையாக பேசத் தயங்குகின்றனர். அது அவர்களின் பணி எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் நம்புகின்றனர். மனநோய் பற்றிய வெளிப்படைத்தன்மை களங்கப்படுத்தப்படுவது இந்த துறையில் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்யக்கூடிய நபர்களின் மனநலத் தொழில்களுக்கு எதிராக விலகலுக்கே வழிவகுக்கும்.
எங்கள் இருவரில் ஒருவர் உளவியல் மருத்துவர், மற்றவர் அந்தத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நாங்கள் இருவரும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளோம். சமீபத்தில் நாங்கள் மருத்துவ உளவியளார்கள், பயிற்சியாளர்களுக்கு இடையில் மனநலப் பிரச்சினை எவ்வாறு பொதுவானதாக உள்ளது, அந்தச் சிக்கல் அவர்களை தொழில் ரீதியாக பாதித்ததா? - இவற்றைப் பற்றி ஓர் ஆராய்ச்சி செய்தோம்.
மற்றொரு புறம், மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் அதிலிருந்து மீண்டு அதனை வெற்றிகொள்ள முடியும் என்பதை விளக்க நாங்களும் எங்களுடைய சகாக்களும் மனநோய் தொடர்பான எங்களுடைய சொந்த அனுபவங்களை வெளிப்படையாக எழுதினோம்.
உளவியலாளர்களும் மனிதர்களே! - விரைவில் வரவிருக்கும், மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில், கிட்டத்தட்ட உளவியல் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் என 1,700 பேர் பங்கேற்றனர். ஆன்லைன் வழியாக நடந்த அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்களின் மனநலம் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். ஆய்வில், அவர்கள் எப்போதாவது மனநல பாதிப்புகளை அனுபவித்திருக்கிறார்களா? மனநோய் பாதிப்புக்காக தொழில்முறை மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்திருக்கிறார்களா? - இந்த இரண்டு கேள்விகள் தனித்தனியாக கேட்கப்பட்டன.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு கட்டத்தில் தங்களுக்கு மனநல பாதிப்புகள் இருந்ததாகவும், 48 சதவீதம் பேர் தங்களுக்கு மனநோய் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த விகிதாச்சாரங்கள் பொதுமக்களின் மனநோய் பாதிப்பு விகிதங்களுக்கு இணையானது. எங்கள் ஆய்வில், தங்களின் நோயாளிகளைப் போலவே உளவியலாளர்களும் மனநல பாதிப்புகள், நோய்களுடன் போராடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
மனநல பாதிப்பு இயலாமைக்கு வழிவகுக்கிறது. உளவியலாளர்கள் ஏன் மனநல பாதிப்பை வெளிப்படுத்துவதில்லை என்பதை இந்த உண்மை ஓரளவு விளக்குகிறது. எங்கள் ஆய்வில் உளவியல் ஆசிரியர்கள், பயிற்சியாளர்களில் மனநலக் குறைபாடுகளுடன் பதிலளித்தவர்களில் 95 சதவீதம் பேர் இந்த அனுபவங்களுடன் தொடர்புடைய `இல்லை`, `லேசான` தொழில்முறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தனர். மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனக் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதையே தெரிவித்தனர். ஒரு திறமையான உளவியலாளராக இருப்பதற்கு சொந்த மனநலன் பாதிப்பை உணர்வது எந்த வகையிலும் தடையாக இருக்காது என்று ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
ஒன்றிணைவைத் தடுக்கும் மூடநம்பிக்கை: விரைவில் வெளியாகவிருக்கும் மற்றொரு ஆய்வு முடிவு, உளவியலாளர்கள் தங்களின் சொந்த மனநல பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேசுவதில் உள்ள தடைகள் பற்றிய உளவியல் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது. அதில் முதன்மையானது, மனநலன் பற்றி உளவியலாளர்களின் மத்தியில் இருந்து வரும் மூடநம்பிக்கை அல்லது களங்கம். அதாவது, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள உளவியலாளர்கள், பயிற்சியாளர்கள் அவர்களுடைய சக ஊழியர்களால், பாதிக்கப்பட்டவர்களாக, திறமையற்றவர்களாக நியாயமற்ற முறையில் பார்க்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
பயிற்சி அமைப்பில் ஒருவருடைய மனநல கஷ்டங்கள், பாதிப்புகள், இயலாமையை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும்போது, அவர் பணியமர்த்தல், பதவி உயர்வு, விருது வெல்வது போன்ற தொழில் முறை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதை முந்தைய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தபோதிலும், ஒருவர் தன்னுடைய மனநல பாதிப்புகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும்போது, வேலை நேரம், செயல்திறன் எதிர்பார்ப்பு ஆகியவைகளை சரிசெய்வது போன்ற பணிகள் சார்ந்த ஆதரவினைப் பெற முடியும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாழ்க்கை அனுபவம் முக்கியமானது: நூற்றுக்கணக்கான நோயாளிகளுடன் பணிபுரிந்தும், மருத்துவராகவும் இருப்பதால் எங்களின் சொந்த மனநலப் போராட்டங்கள், நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்துகொள்ள உதவுகிறது.
சிகிச்சையளிப்பவர்கள் மனநலன் குறித்தும், அவை எவ்வாறு செயல்படுகிறது என்ற தங்களின் சொந்த அனுபவங்களை நோயாளிகளிடம் தெரிவிக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மையில், இன்று பரவலாக பயன்படுத்தப்படும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மனநல பாதிப்பு அனுபவமுள்ள உளவியலாளர்கள் உருவாக்கியதே. உதாரணமாக, அந்த கணத்தில் எப்படி வாழ்வது, மன அழுத்தம், உணர்ச்சிகளை ஆரோக்கியமான வழிகளில் சமாளிக்கவும், உறவுகளை மேம்படுத்த உதவும் எனக் கூறும் "டயலடிக்கல் பிஹேவியர் தெரபி" (dialectical behavior therapy) அப்படி உருவானதே.
ஆராய்ச்சி விஞ்ஞானிகளாக மனநல அனுபவங்கள் நமது எண்ணங்களைத் தெரிவிப்பது மட்டும் இல்லாமல், முடிவில்லாத தகவல் சேகரிப்பு, ஆய்வுகளை எழுதுவது அதனை வெளியிடுவது எனத் தொழில்முறையால் வரும் பின்னடைவுகளை திறம்பட சமாளிக்கவும் உதவுவதை நாங்கள் கண்டறிந்தோம்.
மனநலச் சவால்களின் தனிப்பட்ட அனுபவம், ஏன் நமது பணி, போராட்டம் மதிப்பு வாய்ந்தது என்பதை நினைவுட்டுவதுடன் உண்மைான மன உளைச்சல்கள், உண்மையான உணர்ச்சி போராட்டங்களைக் கையாளும் உண்மையான மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகின்றன.
உலவியலாளர்கள் வெளிப்படையாக இருப்பது பெருமையே: எங்கள் போராட்டங்களை வெளிப்படையாக கூற முடிவெடுத்துள்ள நாங்கள், மற்றவர்களும் எங்களைப் போலவே வெளிப்படையாக தங்கள் பிரச்சினைகளைப் பேசவேண்டும் என நினைக்கவில்லை. அதேபோல, நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு, ஆராய்ச்சியைத் திறன்பட செய்வதற்கு உளவியலாளர்கள் அனைவருக்கும் மனநலன் சார்ந்த அனுபவங்கள் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கூறவில்லை,
மாறாக, தங்களின் மனநல பிரச்சினை அனுபவங்களை வெளிப்படையாக பேச முடிவெடுத்த உளவியலாளர்கள், இந்த மனநலப் பிரச்சினையை பற்றி வெளிப்படையாக பேசினால் தங்களின் நிலையை நல்லவழியில் பயன்படுத்தமுடியும் என்றும், அது அவர்களைப்போலுள்ள பிற உளவியலாளர்களுக்கும் உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.