

உலகம் முழுவதும் தட்டம்மை நோய் 76 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா காரணமாக வழக்கமான தடுப்பூசி பணிகளில் ஏற்பட்ட பாதிப்புதான் இதற்கு காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் வழக்கமான தடுப்பூசி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி முழுமையாக செலுத்தாத காரணத்தால் பல லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் உலகம் முழுவதும் தட்டம்மை நோய் பாதிப்பு தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது.
79 சதவீதம்
உலக அளவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 9,665 தட்டம்மை நோய் பாதிப்பு மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால், இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் 17,338 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 சதவீதம் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிக்கா நாடுகளில்தான் தட்டம்மை அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
5 நாடுகள்
கடந்த 12 மாதங்களில் நைஜீரியாவில் 12,341, சேமலியாவில் 9068, ஏமனில் 3629, ஆப்கானிஸ்தானில் 3628, எத்தியோப்பியாவில் 3039 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாடுகளில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் 50 சதவீத பேருக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
23 மில்லியன்
2020-ம் ஆண்டில் 23 மில்லியன் குழந்தைகளை வழக்கமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகள் இவ்வளவு குழந்தைகள் தடுப்பூசி கிடைக்காமல் இருப்பது இதுதான் முதல் முறை. மேலும், இந்த எண்ணிக்கை 2019-ம் ஆண்டை விட 3.7 மில்லியன் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
43 நாடுகள்
கரோனா தொற்று பரவல் காரணமா 43 நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் பணிகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை. இதன் காரணாமாக சுமார் 203 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். தட்டம்மை தடுப்பூசி கிடைக்காத காரணத்தால் 73 மில்லியன் குழந்தைகள் தட்டம்மை பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம் என்று யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்தியாவில் இதுவரை வழக்கமான தடுப்பூசி பணிகளில் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் 2,32,22,003 கோடி குழந்தைகளுக்கு முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தட்டம்மை தடுப்பூசி மட்டும் 64,56,922 குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டள்ளது.
தடுப்பூசி
தட்டம்மை நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள குழந்தைகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன்படி 9 முதல் 12 வயது மாதத்திற்குள் முதல் தடுப்பூசியூம், 16 முதல் 24 மாதங்களுக்கு இடையில் 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
பொதுமக்கள் தாமாக முன்வந்து குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் மட்டுமே கரோனா தொற்றுடன் சேர்த்து மற்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.