170 நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம்: 5 புதிய திட்ட வடிவங்கள் அடுக்கிய நிறுவனம்

170 நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம்: 5 புதிய திட்ட வடிவங்கள் அடுக்கிய நிறுவனம்
Updated on
1 min read

புதுடெல்லி: தனது ஊழியர்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அலுவலகம், வீடு அல்லது நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப் போவதாக ஏர்பிஎன்பி நிறுவனம் அறிவித்துள்ளது.

சான் ஃபிரான்சிஸ்கோவைத் தளமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் ஊழியர்கள் தங்களின் பணிச்சூழலை சுதந்திரமாக தீர்மானிக்க முடியும் என்றும், ஊழியர்களின் முடிவு அவர்களுடைய சம்பளத்தை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் வெளிநாடுகளில் தங்கியிருந்து வேலை செய்ய ஊழியர்களுக்கு அனுமதியளிக்கப் போவதாகவும், ஒவ்வொரு இடத்திலும் வருடத்திற்கு 90 நாட்கள் தங்கி வேலை செய்யலாம் என்று அதன் சிஇஓ ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்ட வடிவத்தின் 5 முக்கிய அம்சங்கள்

1. வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து வேலை: ஊழியர்கள் எங்கிருந்து வேலை செய்தால் அதிக உற்பத்தி திறனுடன் வேலை செய்ய முடியும் என உணருகிறார்களோ அதன் அடிப்படையில் அவர்களின் சொந்த வழியில் பணிபுரியும் வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது. இந்த வாய்ப்பு பெரும்பாலான ஊழியர்களுக்கு கிடைக்கும். சிறிய அளவிலான ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திலோ குறிப்பிட்ட இடத்திலோ பணி செய்ய வேண்டியது இருக்கும்.

2. நாட்டின் எந்த பகுதிக்கும் செல்லலாம்: ஊழியர்கள் தங்களின் குடும்பத்துடன் வசிக்கவோ அல்லது தாங்கள் வேலை பார்க்க விரும்பும் பகுதிக்கு சென்று பணி செய்யவோ நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் பாதிப்பு ஏதும் இருக்காது.

3. உலகம் முழுவதும் பயணம் செய்து வேலை செய்யலாம்: செப்டம்பர் மாதத்திலிருந்து ஏர்பிஎன்பி ஊழியர்கள் 170 நாடுகளில், ஒவ்வொரு இடத்தில் வருடத்திற்கு 90 நாள் தங்கி வேலை செய்யலாம். ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டில் பணி செய்வதற்கான அனுமதியை பெற வேண்டும் என்றாலும், அதிகமான ஊழியர்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய வசதியாக ஏர்பிஎன்பி நிறுவனம் உள்ளூர் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. குழுக்கூட்டங்கள், ஆஃப் சைட்கள், சமூக நிகழ்வுகள்: ஏர்பிஎன்பி நிறுவனம் நேரடியான கூட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தாலும், தொற்றுநோயின் பாதிப்பு இன்னும் குறையாததால், இந்த ஆண்டு குறிப்பிட்ட அளவில் ஆப் சைட் நிகழ்வுகள் இருக்கும். அடுத்த ஆண்டு இது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கப்படும்.

5. ஒருங்கிணைந்த முறையில் வேலை செய்யுங்கள்: இந்த சலுகைகளை அடைய ஊழியர்கள் தங்களின் திட்டங்களை கட்டமைத்து ஒருங்கிணைக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in