பூக்குழி, கலைஞர், இன்ஸ்பிரேஷன்... - பர்சனல் பகிரும் அமுதா ஐஏஎஸ்

பூக்குழி, கலைஞர், இன்ஸ்பிரேஷன்... - பர்சனல் பகிரும் அமுதா ஐஏஎஸ்
Updated on
2 min read

"நான் 16 வருடங்களாக தொடர்ந்து பூக்குழி இறங்கி வருகிறேன். ஒருமுறை கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில், அப்போது அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ் அவர்களும், நானும் பூக்குழி இறங்கினோம். அப்போதும் அது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த விஷயத்தில் கலைஞர், அமைச்சரைக் கூப்பிட்டு கண்டித்தார். ஆனால், என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. அமைச்சர் கட்சி சார்ந்தவர் என்பதால் கட்சித் தலைவர் ரீதியில் அவரிடம் கலைஞர் பேசினாலும், என் விஷயத்தில் நான் ஒரு அதிகாரி. இந்த வேண்டுதல் என்பது என்னுடைய தனியுரிமை என்கிற புரிதலில் கலைஞர் தெளிவாக இருந்தார்."

- திமுக ஆட்சியில் மிக முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரியான நீங்கள், 'வேண்டுதல்' நிறைவேற்றியது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டதை கவனித்தீர்களா? என்ற கேள்விக்கு, தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா ஐஏஎஸ் புன்னகையுடன் அளித்த பதில்தான் இது. அவருடனான சிறப்பு நேர்காணல்...

உங்கள் பார்வையில், சமகால சமூகத்தில் மிக மோசமான அவலச் சூழல் என்றால் எது?

"பெண்களின் மீது தொடுக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளைத்தான் நான் மோசமான சமூக அவலமாகப் பார்க்கிறேன். எந்தவொரு சமுதாயமாக இருந்தாலும் சரி... பெண்களுக்கான சமத்துவம், கல்வி போன்ற சரிநிகர் உரிமைகளைக் கொடுக்காமல் இருக்கிறதோ, அந்த சமுதாயத்தின் வளர்ச்சி தடைபடும். எனவே, சமூக ரீதியான பொருளாதாரத்தோடு முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இன்று எந்தக் குடும்பத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகளைக் கொடுக்கப்படுகிறதோ, அங்கு அந்தக் குடும்பம் உயர் நிலையை அடைவது நிச்சயம்."

அதேபோல் அத்துமீறல்கள், அடக்குமுறைகளுக்கு பெண்கள் ஆளாவதும் அதிகரித்தவண்ணம் உள்ளது பற்றி...

"இன்று ஆண் - பெண் சமத்துவத்தை உணர்த்துவதை பெற்றோர்கள் வீட்டிலிருந்து தங்கள் குழந்தைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆண் குழந்தை இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும். பெண் குழந்தை இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்று எப்போதும் நிர்பந்திக்க கூடாது. ஆண் குழந்தைகளுக்கும் சரி, பெண் குழந்தைகளுக்கும் சரி, சமமான வீட்டு வேலைகளைக் கொடுக்கும்பட்சத்தில் ஆண் குழந்தைகள் இன்னும் பொறுப்புணர்வு உள்ளவர்களாக வளர்வார்கள். ஆண் குழந்தைகளிடம் பெண்களும் தன்னைப் போல ஒரு சக மனுஷி என்பதை சொல்லிக் கொடுத்தே பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்."

அமுதா ஐஏஎஸ் என்றாலே களத்தில் இறங்கிப் பணிபுரியும் உத்வேகம்தான் முன்னிற்கிறதே...

"நான் பார்த்த பணிகளில் எல்லாம் என் வேலையைத் திறம்பட மட்டுமே செய்தேன். அமுதா செய்வார் என்று நினைத்தார்கள். செய்து முடித்தேன். சந்தர்ப்பம் கொடுத்தால் பெண்கள் எல்லாம் திறமையுடையவர்கள்தான். சொன்னதைச் செய்து முடிக்கிறார்களோ இல்லையோ, அதனைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் நான் சொல்லிவிட்டால், செய்து முடிக்கும் வரை அதே நினைவுடன் இருப்பேன். செய்து முடித்தால்தான் அப்பாடா என்றிருக்கும் எனக்கு. இந்த குணங்கள்தான் என் வளர்ச்சிகளுக்கான உயரத்தைத் தொட எனக்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம்."

உங்களுக்கான பரபரப்பான பணிகளுக்கு இடையில் உங்களுக்கே உங்களுக்கான நேரத்தை எப்படி ஒதுக்குகிறீர்கள்?

"என்னுடைய அம்மா இன்றும் உடல்நிலை சரியில்லாமல்தான் இருக்கிறார். தற்போது என் அலுவலக வேலையை முடித்துவிட்டு, நான் இரவு 9 மணிக்கு மருத்துவமனை சென்று அவர்களைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். அங்கு சென்றால் அவர்களுடன் இருக்கும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஆனால், அலுவலகம் வந்துவிட்டால் அலுவலகப் பணிகளில் முழுமையாக மூழ்கிவிடுவேன். மற்ற எதையும் நினைக்கமாட்டேன். எப்போதும் குடும்பத்தையும் அலுவலகத்தையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொள்ள மாட்டேன்."

நீங்கள் இன்று பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?

"எனக்கு என் பாட்டியும் அம்மாவும்தான். சின்ன வயசில் இருந்தே எந்தத் தப்பும் செய்யக்கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லியே வளர்த்தார்கள். அதிலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற பாடத்தை அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அது அவர்களிடம் ஆச்சரியத்தை எனக்கு உருவாக்கியது. அன்று அவர்கள் கற்றுக்கொடுத்த நல்பழக்க வழக்கங்கள்தான் என்னை சரியான பாதையில் முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது."

உங்களுக்குப் பிடித்தமான உணவு?

" உணவு என்று பார்த்தால் எல்லாமே சாப்பிடுவேன். ஆனால், எனக்கு பணியாரம் மிகவும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவேன்."

"உங்கள் குழந்தைப் பருவத்தில் மறக்கமுடியாத அனுபவம்...

"நான் இந்த முறை மதுரை சித்திரைத் திருவிழாவை மிகவும் மிஸ் செய்தேன். நான் ஊருக்கு செல்லமுடியாத சூழல் இருந்ததால் டிவியில்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்த்தேன். அது எனக்குள் என் சிறுவயது குழந்தை கால திருவிழா நினைவுகளை அசைபோட வைத்தது. பால்ய காலத்தில் மதுரை வீதிகளில் கள்ளழகர் எதிர்ச்சேவையின்போது ஓடித் திரிந்தது நினைக்கையில் மறக்க முடியாததாக இருக்கிறது."

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in