

இரவு சரியாக தூங்கவில்லை எனில், அடுத்த நாள் வேலைகள் மட்டும் பாதிக்காது.. உடலும் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக பாதக விளைவுகளைச் சந்திக்கும். இரவு தூங்காமல் இருப்பதன் பாதிப்புகள் குறித்தும், ஆரோக்கியமான தூக்கத்தைத் தழுவும் வழிகள் குறித்தும் மனநல மருத்துவர் செல்வராஜ் பகிர்ந்தவை:
மன அழுத்தம் ஏற்பட தூக்கமின்மையே ஒரு முக்கியக் காரணம். பணியில், படிப்பில், குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், அதை சரிசெய்வதற்கான வழியைத் தீர்மானித்து விட்டு இரவு நன்றாகத் தூங்கினால் மன அழுத்தம் ஏற்படாது.
இரவு தூங்குவற்கான சூழ்நிலையை நாம் ஏற்படுத்தாமல், தூக்கம் வரவில்லை என சூழ்நிலைகள் மீது காரணம் சொல்கிறோம். இரவு தூக்கமின்மை அல்லது நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் மன அழுத்தம் அதிகமாகும். மெட்டபாலிசம் சரியாக வேலை செய்யாது. இதனால் உடல் எடை அதிகமாகும். மனதுக்கும் உடலுக்கும் தூக்கம் என்பது மிக அவசியம். ஆரோக்கியமான தூக்கத்திற்கான 10 வழிகள் இதோ...
> தூங்கப்போகும்போது காஃபி அருந்தக் கூடாது. விரும்பினால், 4 மணி நேரத்திற்கு முன்பே அருந்தியிருக்க வேண்டும்.
> இரவு உணவு குறைந்த அளவிலும், எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவாகவும் இருக்க வேண்டும்.
> நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
> உடற்பயிற்சி செய்து உடலை சீராக வைத்திருக்க வேண்டும்.
> இரவு தூங்கும்போது டிஜிட்டல் சாதனங்களை அணைத்து வைத்து தூங்க வேண்டும்.
> மதிய நேரத்தில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
> தூங்கும் அறையையும் படுக்கையையும் உங்களுக்குப் பிடித்த வகையில் வைத்துகொள்ளுங்கள்.
> மன அழுத்தம் உங்களை இரவில் ஆட்கொள்ள நினைக்கும். கவலைக்கும் மன அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
> காலை சூரியனிடம் வைட்டமின் ’டி’யை வாங்கிக்கொள்ளுங்கள். அதிகாலை எழுந்துகொள்ள வேண்டும்.
> சரியான நேரத்திற்கு தூங்கி காலை சீக்கிரம் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.