

கோடைக்காலம் ஆரம்பமானதில் இருந்து வீட்டை விட்டு வெளியே போவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், வேலைக்குச் செல்வதையும் கல்லூரிக்குச் செல்வதையும் நிறுத்த முடியாது. ஆனால், வெயிலை நண்பராக மாற்றும் வகையில் கோடைக்கு உகந்த ஆடைகளை அணிந்து வெளியே செல்லலாம். அந்த வகையில் வெயிலுக்கு பெண்களுக்கேற்ற ஆடைகள் குறித்து வழிகாட்டுகிறார், ஆடை வடிவமைப்பாளர் திவ்யா.
“வெயில் காலத்தில் உடைக்கு நாம் கண்டிப்பாக முக்கியத்துவம் தரவேண்டும். வெயிலுக்கு சேராத உடைகளை அணிந்தால் தோல் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஜீன்ஸ், லெகின்ஸ் அணிவதை இந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும். புடவை அணிபவராக இருந்தால், காட்டன் புடவைகளை மட்டும் அணிவதுதான் நல்லது. கற்கள் வைத்த புடவைகளையும் அதிக வேலைபாடுகள் இருக்கும் புடவைகளையும் தவிர்க்கலாம்.
கோடையில் பெண்களுக்கேற்ற ஆடைகள்:
> உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் இருக்கும் மாக்ஸி உடை வெயிலுக்கு ஏற்ற உடை. அது காட்டன், ரேயான் துணியாக இருக்க வேண்டும்.
> காட்டன் சுடிதார் வெயிலுக்கு ஏற்றதாக இருக்கும். பேன்ட் இறுக்கமாக இல்லாமல் தளர்வாக அணியவேண்டும்.
> க்ராப் டாப் வெயிலுக்கு ஏற்ற ஆடை. இந்த டாப்வுடன் பலாஸ்ஸோ பேன்ட், பாவாடை அணிந்தால் சரியான காம்போவாக இருக்கும். இந்த உடை பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
> கஃப்தான் ஆடை. இது வெயிலுக்கு ஏற்ற உடை. இந்த ஆடையை அணிந்தால் வெயிலினால் ஏற்படும் புழுக்கம் தெரியாமல் இருக்கும். இந்த ஆடையின் வடிவமைப்பே லூசாக இருப்பதால் இந்த வெயிலுக்கு ஏற்றதாக இருக்கும்.
> இவை அனைத்தையும் விட காதி உடை வெயிலுக்கு சரியானது. காதியில் துணியாகவும் விற்பனை செய்கிறார்கள். துணியாக எடுத்து கூட உங்களுக்குப் பிடித்த ஆடையாக தையல் செய்து கொள்ளலாம்.