'நீராகாரம்' முதல் 'பஞ்சமுட்டிக் கஞ்சி' வரை - குளுமை தரும் வேனிற்கால பானங்கள்!

'நீராகாரம்' முதல் 'பஞ்சமுட்டிக் கஞ்சி' வரை - குளுமை தரும் வேனிற்கால பானங்கள்!
Updated on
4 min read

"கோடைக் காலத்தில் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படும் பான வகைகளும் கஞ்சி வகைகளும் நம்மிடையே ஏராளமாக இருந்திருக்கின்றன. ஆனால் இன்றோ தண்ணீர் குடிப்பதற்குக் கூட அலாரம் வைத்து நினைவுப்படுத்தி, நீர் பருகும் அவசர கால யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். நம்மிடையே புழக்கத்தில் இருந்த வேனிற்கால பானங்களை இப்போதைய சூழலில் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கினால், கோடைக் காலத்தை குளிர்ச்சியாகக் கடக்க முடியும்" என்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்.

ஒரு சாம்பிள்: குளிர்ச்சி தரும் நீராகாரம் குறித்து அவர் தந்த வழிகாட்டுதலில், "முதல் நாள் இரவு சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் ஊறிய சாதத்தை தண்ணீருடன் சேர்த்துப் பிசைந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொண்டால், குளு குளு நீராகாரம் தயார். தேவைக்கேற்ப மோர் சேர்த்துக்கொள்ளலாம். சின்ன வெங்காயத்தையும், நெல்லிக்காய் வற்றலையும் தொடு உணவாக நீராகாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள, பாரம்பரிய சுவை நம்மை மெய் மறக்கச் செய்யும். வெப்பத்தைத் தணிப்பதோடு, ஏராளமான ப்ரோபையாடிக் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும் நீராகாரம், குடல் பகுதியில் நலம் பயக்கும் நுண்கிருமிகளை அதிகப்படுத்தி, ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம் அமைக்கும்.

வெப்பம் தகிக்கும் கோடைக் காலத்தில், ஒரு கிராமத்து குளக்கரையிலோ அல்லது ஆற்றங்கரையிலோ மருத மரத்திற்கு கீழே கூட்டாக அமர்ந்து, உடலுக்கு ஊட்டம் மற்றும் குளிர்ச்சியைத் தரும் கஞ்சி ரகங்களைப் பருகும் சூழல் இப்போது கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. எவ்வளவு தான் இறுக்கமான பணிச் சூழல் இருந்தாலும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், அருகில் இருக்கும் ஒரு கிராமத்து சூழலுக்குச் சென்று, தூக்குச் சட்டிகளில் கம்பங் கூழையும் நீர் மோரையும் சுமந்துக்கொண்டு, சிறிய மண்பானையில் ஊற்றி, கத்தரித்த வாழை இலையில் பரப்பிய கூழுக்கான தொடு உணவை ருசித்து சாப்பிடும் சூழலை உருவாக்கிக் கொண்டால், வேனிற்காலம் அழகாகும். பணிச்சூழல் காரணமாக தகித்துக் கொண்டிருக்கும் மனித மூளையும் கொஞ்சம் ஆசுவாசமடையும்!

சாதம் வடித்து சாப்பிடும் முறையை இன்றைய காலத்தில் நாம் மறந்துவிட்டோம். சாதத்தை குக்கரில் சமைத்துச் சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது. வடித்த சாதத்தின் நீரில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் வேனிற்காலத்தில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல், கோடைக் காலத்தைக் குளிர்ச்சியாக போக்கிட என்னென்ன கஞ்சிகள் சாப்பிட வேண்டும் என்பது குறித்து சித்தமருத்துவர் வி.விக்ரம்குமாரிடம் பேசினோம்.

‘கிரேக்கத்தில் எங்கு சென்றாலும் யாராவது தண்ணீர் குடிக்கிறார்கள் அல்லது தண்ணீர் கொடுக்கிறார்கள். கிரேக்கத்தில் தண்ணீர் பருகுவது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது… நீரூற்றுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் விஷேசமாகத் தரப்படுகிறது…’ - இது புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி மில்லர், தனது கிரேக்க நாட்டு பயண அனுபவ நூலில் குறிப்பிட்டுள்ளச் செய்தி. ‘உலகை வாசிப்போம்’ நூலில் மேற்சொன்ன பயணக் குறிப்பு இடம் பெறுகிறது.

மரு.வி.விக்ரம்குமார்., MD(S)
மரு.வி.விக்ரம்குமார்., MD(S)

வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் நாமும் தண்ணீரை மருந்தாகப் பயன்படுத்தும் பண்பாடு உடையவர்கள். இன்னும் சொல்லப்போனால் கிரேக்கர்களை விட, தண்ணீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்தியர்கள். தண்ணீரைக் கடவுளாக மதிக்கும் பண்பும் நம்மிடையே உண்டு. ஆற்று நீர், ஊற்று நீர், அருவி நீர், சுனை நீர் என இயற்கையின் ஆதாரங்களைக் குடிநீராகவும், நோய் போக்கும் மருந்து நீராகவும் பயன்படுத்திய மரபு நம்முடையது.

குறிப்பாக, கோடைக் காலத்தில் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படும் பான வகைகளும் கஞ்சி வகைகளும் நம்மிடையே ஏராளமாக இருந்திருக்கின்றன. ஆனால் இன்றோ தண்ணீர் குடிப்பதற்குக் கூட அலாரம் வைத்து நினைவுப்படுத்தி, நீர் பருகும் அவசர கால யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். நம்மிடையே புழக்கத்தில் இருந்த வேனிற்கால பானங்களை இப்போதைய சூழலில் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கினால், கோடைக் காலத்தை குளிர்ச்சியாகக் கடக்க முடியும்.

குளிர்ச்சி தரும் நீராகாரம்:

முதல் நாள் இரவு சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் ஊறிய சாதத்தை தண்ணீருடன் சேர்த்துப் பிசைந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொண்டால், குளு குளு நீராகாரம் தயார். தேவைக்கேற்ப மோர் சேர்த்துக்கொள்ளலாம். சின்ன வெங்காயத்தையும், நெல்லிக்காய் வற்றலையும் தொடு உணவாக நீராகாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள, பாரம்பரிய சுவை நம்மை மெய் மறக்கச் செய்யும். வெப்பத்தைத் தணிப்பதோடு, ஏராளமான ப்ரோபையாடிக் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும் நீராகாரம், குடல் பகுதியில் நலம் பயக்கும் நுண்கிருமிகளை அதிகப்படுத்தி, ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம் அமைக்கும்.

வித விதமான பானகங்கள்:

பனைவெல்லம் கரைத்த நீரில் கொஞ்சம் ஏலரிசியையும், இலேசான புளிப்புக்கு கொடம்புளியையும் சேர்த்து, நன்றாக கலக்கி தயாரிக்கப்படும் பானகம், வேனிற்காலங்களில் ஏற்படும் உடற்சூடு, வெப்பக் கழிச்சல், வயிற்று வலி போன்ற குறிகுணங்களை நீக்கும் முக்கியமான மருத்துவ பானம். ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு சேர்மானங்களோடு தயாரிக்கப்படும் பானகங்கள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன.

வெப்பம் போக்கும் கஞ்சிகள்:

சோறு வடித்த கஞ்சியானது ஆறு போல வடிந்து ஓடியதாக உவமை கூறுகிறது பட்டினப்பாலை! இதை ‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுப் போலப் பரந்தொழுகி’ எனும் வரியால் அறிந்துக்கொள்ளலாம். சுரத்தை தணிக்க… உடலுக்கு ஊட்டத்தை அளிக்க… கபநோய்களைக் குறைக்க… குளிர்காலத்திற்கு… வேனிற்காலத்திற்கு என வெவ்வேறு ரக கஞ்சி வகைகள் நம்மிடம் உண்டு. பஞ்ச காலங்களில் பல மக்களின் பசியைப் போக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கிய பெருமை கஞ்சிக்கு உண்டு.

அன்னப்பால்:

வேனிற் காலங்களில் சுரம் மற்றும் அதை தொடர்ந்து செரிமான உபாதைகள் ஏற்படுகின்றனவா? கவலை வேண்டாம், இருக்கவே இருக்கிறது ’அன்னப்பால்’. பாரம்பரிய முறைப்படி சோற்றை வடித்து எடுக்கும் கஞ்சிக்கு அன்னப்பால் என்று பெயர். மெல்லிய பானமான இது, உடலுக்குத் தேவைப்படும் நீரூட்டத்தைக் கொடுத்து, பாதிக்கப்பட்ட செரிமானத்தை உடனடியாக மீட்டுக்கொடுக்கும்.

வெயில் காலங்களில் ஏற்படும் வயிற்றுப் போக்கிற்கு நெற்பொரிக் கஞ்சி சிறப்பான பலன் அளிக்கும். நெல்லைப் பொரித்து உமி நீக்கிய பிறகு தயாரிக்கப்படும் கஞ்சிக்கு நெற்பொரி கஞ்சி என்று பெயர். உடனடியாக வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் தன்மை இந்த நெற்பொரிக் கஞ்சிக்கு உண்டு.

பஞ்சமுட்டிக் கஞ்சி:

துணிக்குள் தலா பத்து கிராம் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சிறுபயறு (அ) தட்டைப் பயறு, கடலை, பச்சரிசி ஆகியவற்றை வைத்து முடிச்சுப் போட்டு, ஒரு லிட்டர் நீர் கொண்ட மண்பானையிலிட்டு, நான்கில் ஒரு பாகமாக (அதாவது 250 மிலி அளவு) குறையும் வரை காய்ச்சிப் பயன்படுத்தலாம். இதிலுள்ள புரதக்கூறுகள் உடலை தெம்படையச் செய்யும். வெப்ப நேரங்களில், காலை வேளைகளில் திட உணவுக்குப் பதிலாக பஞ்சமுட்டிக் கஞ்சி போன்ற திரவ உணவை எடுத்துக்கொள்ள, அதிவெப்பம் காரணமாக இழந்த நீரிழப்பை ஈடுகட்ட முடியும்.

புனற்பாகம்:

இருமுறை வடித்த கஞ்சிக்கு பெயர் புனற்பாகம். அதாவது அவித்த சோற்றில் மீண்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பயன்படுத்துவது. வெப்ப நோய்களை நீக்கும் சக்தியும், உடனடியாக உடலுக்கு உற்சாகத்தை அளிக்கும் பண்பும் புனற்பாகத்திற்கு இருக்கிறது.

சாதம் வேகும் போது கிடைக்கும் கொதிகஞ்சி, வடித்த கஞ்சி, பாலாடைப் போல இறுகிய உறைக்கஞ்சி… இவை அனைத்திற்கும் உடல் வெப்பத்தை சாந்தப்படுத்தும் குணம் உண்டு. வேனிற் காலத்தில் மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களோடு கஞ்சி வகைகளையும் அவ்வப்போது குடிப்பது உடலுக்கு நல்லது. சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி வகைகளையும் தாராளமாக பயன்படுத்தலாம்.

வேனிற்காலங்களில் முடிந்த வரை நீர்த்துவமான உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. நீர்த்துவமான கஞ்சி வகைகள் உடனடியாக உட்கிரகிக்கப்பட்டு, நாம் நினைக்கும் பலன்களை விரைவாக கொடுக்கும்.

கஞ்சி ரகங்களுக்கு தொடு உணவாக நீர்க் காய்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். பீர்க்கு, சுரை, பூசணி, முள்ளங்கி கொண்டு கூட்டோ அல்லது பொறியல் போலவோ செய்துக்கொண்டு கஞ்சிக்கு துணை உணவாக தொட்டு சாப்பிட, தடைப்பட்ட சிறுநீரைப் பெருக்குவதோடு, வெப்பத்தையும் சட்டென குறைக்கும்.

குளிர்ச்சியைக் கொடுக்கும் பானங்கள்:

வெட்டிவேர், கருங்காலி, நன்னாரி, சுக்கு, ஏலம், மல்லி… ஆகியவற்றை தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வெயில் காலங்களில் பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலைக் குறைப்பதற்கு இந்த பானம் சிறந்தது. நன்னாரி வேர்களை நீரில் ஊறவைத்து, பனைவெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் நன்னாரி ஊறல் பானம் அல்லது சர்பத் வேனலுக்கான அத்தியாவசிய பானம். `பித்தம் அதி தாகம் உழலை’ எனும் நன்னாரி குறித்த தேரையரின் பாடல், பித்த நோய்களுக்கு நன்னாரி அற்புத மருந்து என்பதை உறுதிப்படுத்துகிறது.

சீரக ஊறல் நீர், வெந்தய ஊறல் நீர் போன்றவை உடலில் அதிகரித்த வெப்பத்தை உடனடியாக குறைக்கும் இயற்கையின் ஆயுதங்கள். சீரகத்தில் இருக்கும் ‘Thymol’ எனும் வேதிப்பொருளுக்கு செரிமானத்தை சீராக்கும் தன்மையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நீரிழிவு நோயாளர்களுக்கு வெந்தய ஊறல் நீர் வேனிற்காலத்தில் சிறந்த மருந்து. உடல் வெப்பத்தைக் குறைப்பது மட்டுமன்றி, இன்சுலின் சுரப்பையும் முறைப்படுத்துகிறது. வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இந்த செய்கைக்கு காரணமாகிறது.

கம்பிற்கு இருக்கும் குளிர்ச்சித் தன்மை குறித்து, `கம்பு குளிர்ச்சியெனக் காசினியிற் சொல்லுவர்காண்’ எனும் சித்தர் அகத்தியரின் பாடல் வரி எடுத்துரைக்கிறது. கம்போடு மோர் சேர்த்து தயாரிக்கப்படும் கூழ், குளிர்ச்சியை வாரி வழங்குவதில் கில்லாடி. கூடவே சின்ன வெங்காயத்தை கடித்துக்கொள்ள சுவைக்கும் பஞ்சமிருக்காது.

இயற்கையோடு இணைந்து வேனிற்காலத்தைக் கடப்போம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in