நாகரிகமான மனிதரை புத்தகத்தால் மட்டுமே உருவாக்க முடியும்: எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கருத்து

தமிழக பொதுநூலக இயக்ககம் சார்பாக அண்ணா நகர் நூலகத்தில் நேற்று உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஓய்வுபெற்றவருமானவரித் துறை அதிகாரியும் எழுத்தாளருமான பாஸ்கரன் கிருஷ்ண மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ‘புத்தக வாசிப்பு, வேலைவாய்ப்பு’ என்ற தலைப்பில் வாசகர்களிடம் கலந்துரையாடினார்.படம்: பு.க.பிரவீன்
தமிழக பொதுநூலக இயக்ககம் சார்பாக அண்ணா நகர் நூலகத்தில் நேற்று உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஓய்வுபெற்றவருமானவரித் துறை அதிகாரியும் எழுத்தாளருமான பாஸ்கரன் கிருஷ்ண மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ‘புத்தக வாசிப்பு, வேலைவாய்ப்பு’ என்ற தலைப்பில் வாசகர்களிடம் கலந்துரையாடினார்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சமுதாயத்துக்குத் தேவையான நாகரிகமான மனிதரை, புத்தகத்தால் மட்டுமே உருவாக்க முடியும்என்று எழுத்தாளர் பாஸ்கரன்கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

உலக புத்தக தின விழா ஆண்டுதோறும் ஏப்.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழக பொதுநூலக இயக்ககம் சார்பாக அண்ணாநகர் (கிளை) முழு நேர கிளை நூலகத்தில் நேற்று உலக புத்தக தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற வருமானவரித் துறை அதிகாரியும் எழுத்தாளருமான பாஸ்கரன்கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டு ‘புத்தகவாசிப்பு மற்றும் வேலைவாய்ப்பு’என்ற தலைப்பில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசகர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: உலகத்தில் வேறு எந்த செயல்பாடுகளுக்கும் இல்லாத சிறப்பு, நூல் வாசிப்புக்கு உண்டு. ஒரு நூலை வாசிக்கும்போது அது உங்கள் குரலிலே ஒலிக்கும். பொது நூலக இயக்ககத்தின் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்கள் மட்டும்தான் அரசு நூலகத்தில் உள்ளன. உலகம் மிகப் பெரியது என்பதை தினம் தினம் கற்றுக் கொடுக்கும் திறன் புத்தகத்துக்கு மட்டும்தான் உள்ளது. அதனை வாசிப்பதன் மூலம்தான் நமது பார்வை விரிவடையும்.

எனவே, தொட்டி மீன்களாக இல்லாமல் கடல் மீன்களாக மாற வேண்டும். தேசம், மொழி, இனம் என எல்லாவற்றையும் கடந்து உலக குடிமகனாக நம்மை மாற்றும். சமுதாயத்துக்குத் தேவையான கண்ணியமான, நாகரிகமான மனிதரை, புத்தகத்தால் மட்டுமே உருவாக்க முடியும். அந்தப் பணியைத் தமிழக பொது நூலக இயக்ககம் சிறப்பாகச் செய்கிறது. புத்தக வாசிப்பு மூலம் ஏற்படும் வளர்ச்சி நமது கண்ணுக்குத் தெரியாது.

ஆனால், நமது செயலில்தெரியும். சினிமா, வணிக வளாகம், கோயில் போன்றவற்றுக்கு செல்வதுபோல நூலகத்துக்கும் குடும்பமாக வர வேண்டும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்கள் தினமும் கட்டாயம் 4 நாளிதழாவது படிக்க வேண்டும். அதேபோல, அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாகப் படித்தால், எந்த போட்டித் தேர்விலும் எளிதாக வெற்றியடைய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அண்ணா நகர் நூலகத்தின் நூலகர் எஸ்.ரங்கநாதன், வாசகர் வட்டத் தலைவர் வழக்கறிஞர் டி.சுப்பிரமணியன், ஓய்வுபெற்ற ஆடிட்டர் எஸ்.லட்சுமி, வாசகர் வட்ட உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐடி அதிகாரி வி.தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in