

மதுரை: புத்தகமே தொடர்ந்து வெற்றியை தரும் ஆயுதம் என்று எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் சார்பில், ‘இலக்கிய இணையர் பேராசிரியர்கள் இரா. மோகன் - நிர்மலா மோகன் அறக்கட்டளை’ தொடக்க விழா நடந்தது. தமிழ் உயராய்வு மைய உதவி பேராசிரியை தி.மல்லிகா வரவேற்றார். முதல்வர் பா. மனோகரன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் சு.ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், உபதலைவர் ரா.ஜெயராமன், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை தலைவர் காயத்ரி தேவி அறிமுக உரையாற்றினார்.
எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் புதிய அறக்கட்டளையை தொடங்கி வைத்து ‘பெரிதினும், பெரிதுகேள்’ எனும் தலைப்பில் பேசியதாவது: புத்தகங்களே தொடர்ந்து வெற்றி தரும் ஆயுதம். புத்தகங்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் திசைமாறி சென்றுவிடக் கூடாது. நமது வாழ்க்கைக்கு அறிவுரை, புகழ், உதவி, அதிர்ஷ்டம் தேவை. கேட்பதை சரியாக கேட்டால் அனைத்தும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிர்மலா இரா.மோகன் ஏற்புரை நிகழ்த்தினார்.