ஸ்ட்ரெஸ்லாக்ஸிங் | ரிலாக்ஸ் செய்யும்போது மன அழுத்தம் ஏற்படுகிறதா? - 3 காரணங்களும் தீர்வுகளும்

ஸ்ட்ரெஸ்லாக்ஸிங் | ரிலாக்ஸ் செய்யும்போது மன அழுத்தம் ஏற்படுகிறதா? - 3 காரணங்களும் தீர்வுகளும்
Updated on
3 min read

ஓய்வெடுக்க விரும்பும்போது எப்போதாவது நீங்கள் மன அழுத்தமும் எதிர்மறை எண்ணங்களும் அதிகமாக ஏற்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா? நம்மில் பலரும் இந்த மாதிரியான உணர்வினை அனுபவித்திருப்போம். அதனால்தான் சிலர் இதனை "ஸ்ட்ரெஸ்லாக்ஸிங்" (stresslaxing) என்று கூறுகின்றனர்.

"ஸ்ட்ரெஸ்லாக்சேஷன்" என்பது ஓய்வாக இருக்கும்போது தூண்டப்படும் அழுத்தைக் குறிக்கும் புதிய வார்த்தையாக இருந்தாலும், பல ஆண்டுகளாக இது ஆய்வு செய்யப்பட்டு வந்திருக்கிறது. உலகில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான மக்கள், தாங்கள் நிதானமாக ஓய்வெடுக்க விரும்பும்போது, இதயம் வேகமாக துடிப்பது, அதிமாக வியர்வை ஏற்படுவது போன்ற மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை உணர்கின்றனர். ஓய்வெடுக்க விரும்போது ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க மக்கள் ஏதாவது செய்தாக வேண்டும் என்பது கொஞ்சம் முரண்பாடான ஒன்றுதான். எல்லா மக்களும் இந்த "ஸ்ட்ரெஸ்லாக்சேஷன்" அனுபவிப்பதில்லை. ஆனாலும் இது ஏன் ஏற்படுகிறது, அதனைக் கடக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதற்கான சில வழிமுறைகள் இங்கே...

1. மனஅழுத்தத்தில் இருப்பதை ஒபுபுக்கொள்ளுங்கள்: எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று பாசாங்கு செய்வது 'மறுப்பு' என்று அழைக்கப்படுகிறது. உங்கள் மன அழுத்தத்தை மறுப்பது "ஸ்ட்ரெஸ்லாக்ஸிங்" ஏற்படுவதற்கான தொடக்கமாக அமையலாம். உண்மையில் குறுகிய கால மறுப்பு மாற்றத்திற்கு உதவும். உதாரணமாக நெருங்கிய ஒருவரின் மரணத்திற்கு பின்னர், அந்த உணர்ச்சியை சமாளிக்க 'மறுப்பு' உதவும். ஆனால், அன்றாட மன அழுத்தங்களை நாம் தொடர்ந்து மறுக்கும்போது, அது ஒருவரை நிரந்தரமாக குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

மன அழுத்தத்தை நீங்கள் மறுக்கும்போது, அந்த சிக்கலுக்கு நடவடிக்கை எடுக்க உடல் உங்களுக்கு தொடர்ந்து சமிக்ஞை அனுப்பும். இதனால் உங்கள் மனம் அழுத்தத்திற்கான காரணங்களை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக ஓய்வெடுக்க முயற்சிக்கும்போது அது உங்களை அதிக அழுத்தமாக உணரவைக்கிறது.

இதனை எப்படி சரி செய்யலாம்: மன அழுத்தத்தை உணர்த்தும் அறிகுறிகள் உதவியாக இருக்கும் என ஒப்புக்கொள்ளுங்கள். உங்களுக்குள் ஏற்படும் சிக்கலை சரி செய்வதற்காக உடல் எச்சரிக்கை செய்ய முயற்சிக்கிறது. அதை சரி செய்ய உடலின் அனைத்து வளங்களையும் அது பயன்படுத்துகிறது. உங்கள் மன அழுத்தத்துடன் தொடர்புடைய எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் எழுதுங்கள். இது அழுத்தத்திற்கான காரணத்தை புரிந்துகொள்ள உதவும். இதனால் அந்த அழுத்தத்தினை உங்களால் சமாளிக்க முடியும். உதாரணமாக, அதிகமான வேலை பளு உங்கள் மன அழுத்தத்திற்கு காரணமாக இருந்தால் அதனைக் குறைக்க நீங்கள் தியானம் செய்து பயனில்லை. மாறாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது சிறந்த தீர்வாக இருப்பதை நீங்கள் உணரலாம்.

2. மற்றவர்களின் எண்ணங்களுக்காக கவலைப்படுகிறீர்கள்: நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான விஷயம் ஒன்று இருக்கும். அது வேலையாகவோ அல்லது விளையாட்டாகவோ இருக்கலாம். ஆனால், எதற்காக அதனை நாம் செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. சிலர் புதிதாக ஒன்றைச் செய்வதற்கும் அல்லது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும் ஒரு விஷயத்தை விரும்பிச் செய்வர். ஆனால் பெரும்பாலானவர்கள் அடுத்தவர்கள் தங்களின் திறமையைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தை விரும்பிச் செய்பவர்களாக இருப்பார்கள். தவறான காரணத்திற்காக ஆர்வத்தை தொடர்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது ஒருவரை ஒரு வட்டத்திற்குள் சிக்க வைத்துவிடும்.

அதாவது, இப்படிப்பட்டவர்கள் நோய்வாய் பட்டிருக்கும்போதும் ஓய்வு எடுத்துக்கொள்ளாமல், தங்களை நிரூபிக்க வேலை செய்வார்கள். இது மன அழுத்தத்தை அதிகமாக்கும். ஒருவர் ஓய்வெடுக்க விரும்பும்போது மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையை ஏற்படுத்தலாம். இதனால் நிறைய எதிர்மறையான எண்ணங்கள் உண்டாகலாம்.

இப்படி உணரும் நபர்கள் எதைப்பற்றி அவர்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்களோ அதிலிருந்து மனரீதியாக கொஞ்சம் விலகி இருக்கலாம். இந்த ஓய்வு நீ்ண்ட நேரம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. குறுகிய கால இடைவெளிகளை எடுத்துக் கொள்வது, உங்கள் ஆர்வத்தில் இருந்து விலகி இருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் ஓய்வெடுக்கவும் உதவும் என்பதை உணர வைக்கலாம்.

3. மனமே உங்களுக்கு எஜமானன்: சிலரால் ஒரு முடிவை எடுக்கும்போது அதில் இருக்கும் அனைத்து நன்மை தீமைகளையும் ஆராயாமல் இருக்க முடியாது. ஓய்வெடுக்க விரும்பும்போதும் கூட இது நிகழலாம். இது மிகை எண்ணங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தப் பிறகும் அவர்கள் மற்ற விருப்பங்களைப் பற்றி சிந்திப்பார்கள். வேறு ஏதாவது ஒன்று நிம்மதியாக இருக்க உதவுமா என்றும் யோசிக்கலாம். இது மனதை நிதானப்படுத்துவதற்கு பதிலாக இன்னும் அழுத்தமாக உணரவைக்கும்.

துரதிர்ஷ்டவசமாக இந்த மிகை எண்ணம் சுய வருத்தத்திற்கு வழிவகுக்கலாம். எந்த விருப்பத்தைத் தேர்வு செய்திருந்தாலும் பரவாயில்லை அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். மிகை எண்ணம் கொண்ட ஒருவர் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக அன்றைய நாளில் செய்யவேண்டிய மற்ற வேலைகளைப் பற்றிச் சிந்தித்து கொண்டிருப்பார். இது மேலும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

இதனை எப்படி சரி செய்வது: நிதானமாக ஏதாவது செய்ய விரும்பும் நாளில் அன்று எடுக்கவேண்டிய முடிவுகளை பட்டியலிடலாம். செய்யவேண்டிய வேலையை எவ்வளவு நேரத்தில் செய்யவேண்டும் என்று திட்டமிடலாம். மற்ற வேலைகளை நீங்கள் தள்ளிப்போடவில்லை என்பதை உணர்த்தினால் ஓய்வெடுப்பதை எளிதாக்கும். ஓய்வெடுக்க முயற்சிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது. இதை நினைவில் வைத்துக்கொள்வது நிதானமாக வேலைசெய்யும் போது குறைந்த மன அழுத்தத்தை உணர உதவும்.

ஓய்வெடுக்கும்போது மன அழுத்தத்தை உணர்ந்தால் அது இன்னும் நேர்மறையான எண்ணங்களுக்கு வழிவகுக்கும். ஒருவரை முழுமையான மனிதராக மாற உதவும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம், விருப்பமான ஒரு நிதானமான செயல்பாட்டைக் கண்டுபிடிப்பதாகும். அது சமைப்பது, ஓடுவது என எதுவாக இருந்தாலும், அது அன்றைய மன அழுத்தத்திலிருந்து மாற உதவுவது முக்கியம்.

RCSI மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் நேர்மறை உளவியல் மற்றும் ஆரோக்கியத்திற்கான மையத்தின் மூத்த விரிவுரையாளர், ஜோலாண்டா பர்க் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

தகவல் உறுதுணை: தி கான்வர்சேஷன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in