கரோனா காலத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிய குழந்தைகள் - தமிழகமே முதலிடம்!
சென்னை: கரோனா காலத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் முதன்முறையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதன்படி, தமிழகத்தில் 57 சதவீத குழந்தைகள் முதன்முறையாக டிவியில் வீடியோ பார்ப்பது, கணினி மற்றும் மொபைல் போனில் கேம் விளையாடுவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் காலத்தில் குழந்தைகளை கவனிப்பதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முன்களப் பணியாளர்களிடமிருந்து பெற்றோர்களுக்கு மிகவும் குறைவான ஆலோசனை மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 57 சதவீத குடும்பங்களுக்கு எந்தவித ஆலோசனையும் கிடைக்கவில்லை என்று இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகள் முறையாக கிடைக்கவில்லை என்றும், ஊட்டத்சத்து உள்ள உணவுகள் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என்றும் பல மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நிதி ஆயோக் நிறுவனம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கரோனா காலத்தில் குழந்தைகள் வளர்ச்சி தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வானது செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை 11 மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 1,043 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி கரோனா தொற்று காலத்தில் 2 வயதுக்கு கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி வழங்கும் பணி பெரிய அளவில் பாதிப்பு அடையவில்லை என்று தெரியவந்துள்ளது. நகர்புறங்களில் 90 சதவீத பேரும், கிராமபுறங்களில் 85 சதவீத குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைத்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் ஆய்வு செய்யப்பட்ட வீடுகளில் 2 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி கிடைத்துள்ளது. 1 சதவீத வீடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. குறிப்பாக, இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 11 சதவீத குடும்பங்கள் தங்களின் குழந்தைக்கு எந்தவித தடுப்பூசியும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஒரு கிராம சுகாதார செவிலியர் ஒருவர் கூறுகையில், "கரோனா தொற்று காலத்தில் தடுப்பூசிகள் பணிகள் பாதிக்கப்படவில்லை. தொலைபேசி மூலம் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர்த்து தடுப்பூசி, உடல் நலம், தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு அதிகம் கொண்டு சேர்த்த மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 88 சதவீத வீடுகளுக்கு இது தொடர்பான தகவல் முழுமையாக சென்று சேர்ந்துள்ளது.
ஊட்டச்சத்தை பொறுத்தவரையில் கரோனா காலத்தில் தமிழகத்தில் 6 சதவீத குழந்தைகளுக்கு குறைவான ஊட்டச்சத்து மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், 26 சதவீத குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் இருந்து குறைவான உணவு மட்டுமே கிடைத்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், வீடுகளில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான சூழ்நிலை இருந்தது என்பது தொடர்பாகவும் இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. இதன்படி கரோனா காலத்தில் 5-இல் ஒரு பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளனர். விளையாடுவது, குளிக்கவைப்பது, பேசுவது, பாடல் பாடி விளைளயாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 30 சதவீத பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளனர்.
அதேவேளையில், இந்த காலத்தில் முதல் முறையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிய குழந்தைகளின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஊரடங்கின் தொடக்க காலமான மார்ச் 2020-இல் நாடு முழுவதும் 3-இல் ஒரு குழந்தை முதல் முறையாக வீடியோ பார்ப்பது, தொழில்நுட்ப சாதனங்களில் கேம் விளையாட்டு உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்டுள்ளனர். இதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 57 சதவீத குழந்தைகள் முதன்முறையாக தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்தக் காலத்தில் குழந்தைகளை கவனிப்பதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முன்களப் பணியாளர்களிடமிருந்து பெற்றோர்களுக்கு மிகவும் குறைவான ஆலோசனை மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 57 சதவீத குடும்பங்களுக்கு எந்தவித ஆலோசனையும் கிடைக்கவில்லை என்று இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
