

திருப்பூர்: ஏழை எளியவர்களின் குரலாக இலக்கியம் நிற்கிறது என திருப்பூரில் நடைபெற்று வரும் 18-வது புத்தகத் திருவிழாவின், 6-ம் நாள் கருத்தரங்கில் எழுத்தாளர் பவா. செல்லதுரை பேசினார்.
நிகழ்வில் அவர் பேசியதாவது: உலகில் எழுதப்பட்ட அனைத்து இலக்கியங்களும், புத்தகங்களும் மனித அனுபவத்தையே பேசுகின்றன. மனிதனின் கீழ்மை, மேன்மை,அர்ப்பணிப்பு, துரோகம் போன்ற பண்புகளைத்தான் திரும்பத்திரும்ப எடுத்துரைக்கின்றன. இலக்கியத்தின் அடிப்படை மூலக்கூறுகளாக மனிதர்களே உள்ளனர்.
உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை அனைத்து எழுத்தாளர்களும் பாவப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்கின்றனர். மேலே இருப்பவர்கள், கீழே இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் என்றுதான் இலக்கியம் சொல்கிறது. அனைத்து நடைமுறை அனுபவங்களையும் கற்ற பிள்ளைதான் இந்த சமுதாயத்தில் உயர்ந்து வரமுடியும். குரல் அற்றவர்களின் குரலாக, ஏழை எளியவர்களின் குரலாக, பாவப்பட்டவர்களின் பக்கமே இலக்கியம் எப்போதும் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.