

"வாழ்வின் அனைத்து துன்பங்களிலிருந்து இசை உங்களை குணப்படுத்தும்" - ஜெர்மன் தத்துவவியலாளர் ஃபிரெட்ரிக் நீட்சே கூறியது இது. இசை மட்டும் அல்ல, உண்மையில் பாடல் பாடுவதினாலும் பல உளவியல் நன்மைகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன. குழுவாகப் பாடுவது சமூகப் பிணைப்பை ஊக்குவிக்கிறது; மன அழுத்தத்தையும் குறைக்கிறது. வாழ்வை முழுமையாக்குவதற்கும் பாடல்கள்தான் உதவுகின்றன. இவர்கள்தான் பாட முடியும்... அவர்களால் பாட முடியாது என்பதெல்லாம் கிடையாது. அனைவரது குரலும் தனித்துவமானது. பாடலுக்கு ஏற்றது. பயிற்சி செய்வதன் மூலம் அனைவராலும் பாட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பாடுவதில் நமக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என ஆய்வு முடிவுகளும், ஆய்வாளர்களும் பட்டியலிட்டவை:
* பிடித்த மனநிலை: நீங்கள், உங்களுக்கு பிடித்த வேலையை செய்யும்போது மிகவும் உற்சாகமாகவும், பதற்றமின்றியும் காணப்படுவீர்கள். உங்களது மனநிலை ஒட்டம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இதுதான் உங்களுக்கான இடம் என்று ஒரு மனநிலைக்கு வருவீர்கள் அல்லவா? அதனை பாடல் ஏற்படுத்தி கொடுக்கும் . பதற்றமான நிலையில் உங்களுக்கு பிடித்தப் பாடல் ஒன்றின் வரிகளை தொடர்ந்து பாடிக் கொண்டே இருங்கள். நீங்கள் அனைத்திலிருந்தும் விடுப்பட்டு உங்களுக்கு பிடித்த மன நிலை ஓட்டத்தில் இருப்பதை உணரலாம்.
* உடலுடன் தொடர்பு: பாடுவதினால் உங்கள் உடலுடன் நீங்க்ள் தொடர்பில் இருப்பதை நன்கு உணரலாம். பாடகர்களை கவனித்தீர்களா? அவர்கள் தங்கள் உடல் வழியாகவே ஒலியை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இசையமைப்பாளர்களை போல எந்த இசைக் கருவியும், பட்டன்களும், கம்பிகளும் தேவையில்லை.
தீவிரமாக யோசித்துக் கொண்டே இருக்கிறீர்களா? யோசனை உங்களை மூழ்கடிக்கிறதா? அப்போது, பிடித்தப் பாடலைப் பாடுங்கள். மூளையைவிட்டுவிட்டு உடலுடன் நீங்கள் இணைவதை உணரலாம். உங்கள் உடலை பற்றி அறிவதற்கு பாடுவது மிகவும் உதவும்.
* பாடல் ஓர் உடற்பயிற்சி: நம்மில் பலரும் பாடுவது என்பது உடலுக்கான பயிற்சி என்பதை மறந்து விடுகிறோம். நாம் பாடும்போது குரல்வளை, குரல் பாதை, பிற மூட்டுகள், நாக்கு, உதடுகள், பற்கள் என அனைத்து இயைந்து சுவாச அமைப்புடன் இசையை உருவாக்குகிறோம்.
மேலும், சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பாடுவது மிகவும் உதவுகிறது. எனவே, இருதயப் பிரச்சினையைத் தீர்க்க உடற்திறனை மேம்படுத்த நாம் ஜாகிங் செய்வது போல்,பாடுவதை மேம்படுத்த குரல் பயிற்சியும் செய்யலாம். ஏன், சொல்லப்போனால்... நீண்ட காலமாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாடல் பாடுவது சிகிச்சையாகவும் அளிக்கப்பட்டது.
* உளவிலுக்கு உதவி: குழுவாக நாம் ஒரு பாடலைப் பாடும்போது அது சமூக தனிமையை எதிர்த்துப் போராடவும், புதிய சமூகத் தொடர்புகளை உருவாக்கவும், சுமைகளைச் சமாளிக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். மொத்தத்தில் பாடுவது என்பது தனியாகவோ, குழுவாகவோ உளவியலுக்கு ஆரோக்கியம் அளிப்பதாகவே உள்ளதாக அய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றனர்.
* சூப்பர் ஏஜிங்: அயல் நாடுகளில் சூப்பர் ஏஜிங் என்ற வார்த்தை மிகப் பிரபலம். அதாவது, சூப்பர் ஏஜிங் மக்கள் 80 வயதை கடந்தாலும் நினைவாற்றல் மற்றும் செயல் திறன்களில் இளமையாக இருப்பார்கள். இதனைதான் சூப்பர் ஏஜிங் என்று கூறுவார்கள். இதற்கு பாடல் பாடுவது உதவும்.
நம்மில் பலரும் பாத்ரூம் சிங்கர்களாக இருப்போம் அல்லவா..? யாரும் காணாத, யாருக்கும் கேட்காதபடியான பாடல் இனி தேவை இல்லை... சத்தமிட்டே பாடுங்கள்... குரலுடன் உடல், உளவியல் ஆரோக்கியத்தை சிறப்பாக்குகள்!
தகவல் உறுதுணை: தி கான்வர்சேஷன்