

"அவர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னரே... நடனத்தை ஆட கற்றுக் கொள்வார்கள்..." - சூபி நடனத்தை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? வெண்ணிற உடை அணிந்து தலையில் பெரிய தொப்பியுடன் ஒரு வட்டத்தில் நின்றுக் கொண்டிருப்பது போல் காலை நகர்த்தாமல் ஒரு கையை மேல் நோக்கி சற்று சாய்த்தும், மற்றொரு கையை கிடைமட்டமாக வைத்தும் சுழன்று ஆடுவார்கள். நிமிடத்திற்கு 12 சுற்றுகளுக்கு அதிகமாக காற்றைப் போல் சுழல்வார்கள்.
சூபி நடனத்தை பாலிவுட் படங்களில் நாம் பார்த்திருக்கலாம். மலையாளத்தில் வெளியான 'சூபியும் சுஜாதாவும்' படத்திலும் சூபி நடனத்துடனான காட்சி இடம்பெற்றிருந்தது. இஸ்லாமின் இறை வழியோடு தொடர்புடையது இந்த சூபி நடனம். இதனை சாமா நடனம் என்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அழைக்கின்றனர். கடவுளை தேடுவதற்கான வழியாக சூபி நடனத்தை இஸ்லாமியர்கள் பார்க்கிறார்கள். அந்த நடனத்தின் மூலம் இறைவனோடு பேசுகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள். சூபி இஸ்லாமின் நம்பிக்கை. சூபி நடனத்தை பொறுத்தவரை, அது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக உள்ளது. குறிப்பாக துருக்கி, சிரியா, லெபனான், ஈரான் போன்ற நாடுகளைக் கூறலாம்.
போரும்... சூபி நடனமும்... - போர் நடக்கும் சிரியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குடும்பம் சூபி நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறது. சிரியாவின் டமாஸ்காஸில் அல் - காரத் குடும்பத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 87 வயதான அப்தில் வகாப் முதல் 3 வயதான அனாஸ்வரை சூபி நடனத்தை ஆடுகின்றனர். இங்கிருப்பவர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னரே சூபி நடனம் ஆட கற்றுக் கொள்கிறார்கள்.
”பல ஆண்டுக்கால போர், கரோனா இவற்றுக்கு மத்தியில் நடனம் எனக்கு அமைதியை அளித்தது. நான் மன அழுத்தத்துடன் இருந்தால், ஓர் அறையில் என்னை அடைத்துக் கொண்டு என் மனம் அமைதி அடையும் வரை நான் சுழன்று கொண்டிருப்பேன். நாங்கள் சிரியாவில் சூபி நடனத்தை ஆடியதைவிட ஐரோப்பிய நாடுகளில் ஆடியதுதான் அதிகம். ஆனால், போருக்குப் பின் எல்லாம் மாறிவிட்டது” என்கிறார் முயாயத்.
மற்ற நாட்களைவிட ரமலான் மாதத்தில் சூபி நடனம் மிகவும் பிரபலம். நோன்பு முடிந்து உணவருந்த அமருவோருக்கு கண்கொள்ளாக் காட்சியாக சூபி அமையும்.
சூபி நடனத்தில் பெண்கள்: சூபி நடனத்தில் தற்போதுவரை ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பெண்கள் சூபி நடனத்தை கையில் எடுப்பதற்கு இன்னமும் பல தடைகள் உள்ளன. பிற்போக்குவாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சூபி நடனத்தை தங்களுக்கான உரிமை ஆயுதமாகவே இஸ்லாமிய பெண்கள் கையில் எடுத்துள்ளார்கள். மத்தியில் மத்திய கிழக்கின் எகிப்து, துருக்கி, ஈரான், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் சூபி நடனத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.
”தலிபான்கள் என்னிடம் வந்து நீங்கள் சூபி நடனத்தை ஆடக் கூடாது என்று கூறினால், நான் அவர்கள் பேச்சை கேட்கமாட்டேன். ஏனென்றால், தலிபான்கள் எங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க முடியாது. அவர்களின் இறைப் பாதை தவறானது. எல்லாவற்றையும் விட நவீன சமூதாயத்தில் வாழும் எனக்கு எனது தனிப்பட்ட விருப்பத்தை தேர்வு செய்ய அனைத்து உரிமையும் உண்டு" என்று ஆப்கானின் ஒரே பெண் சூபி நடன கலைஞரான ஃபஹிமா மிர்சாய் 2020-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
ஆனால், ஒரு வருடத்தில் எல்லாமே மாறியது. ஆகஸ்ட் 6 தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான எராளமான கட்டுப்பாடுகளை தலிபான்கள் அமல்படுத்தினர். அவற்றுள் ஒன்று சூபி நடனம். இதனால் எதிர்ப்புக்கு மத்தியில் சூபி நடனத்தை ஆடிக் கொண்டிருந்த பலரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களுள் ஃபஹிமாவும் தப்பிச் சென்றார்.
தற்போது ஃபஹிமா பிரான்சில் இருக்கிறார். என்றாவது நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கையில் ஈஃபிள் டவர் முன்பு சூபி நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்.
இஸ்லாமின் நம்பிக்கைப்படி கடவுளிடம் பிரார்த்தனைக்காக உருவாகிய மற்றுமொறு மொழியே சூபி நடனம். அதன்படி சுழல் என்பது ஒரு வகையான நகரும் தியானமாகும் இதன்வாயிலாக சூபிகள் தெய்வீகத்துடன் தொடர்புகொள்ள முயல்கின்றனர்.
ஆனால், இன்றோ சூபி நடனம் பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் சூபி நடனம் அமைதிக்கான ஒலி... பெண்களுக்கோ விடுதலைகான ஆயுதம்... பலருக்கும் காதல், அன்பிற்கான மொழி.
சூபிகளை போல்... சுழன்று ஆடுங்கள்..!
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in