

சென்னை: அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே உள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. கரோனா தொற்று காலத்தில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் உடல் உழைப்பே இல்லாத நிலை உருவானது. ஓர் அறைக்குள்ளே அனைத்து பணிகளையும் செய்யும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் தொற்றா நோய்கள் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர். மேலும், கரோனா தொற்று காலத்தில் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருந்தது. இதைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தில் 2022-ம் ஆண்டுக்கான தொற்றா நோய் நிலை அறிக்கையின், படி இந்தியாவில் மொத்தம் மரணங்களில் 66 சதவீத மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 60.47 லட்சம் மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, முறையில்லாத உணவு பழக்கம், உடற்பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்டவற்றைப் பின்பற்றாமல் இருப்பது, மது அருந்துவது, புகையிலை பயன்படுத்துவது ஆகிவற்றால் ஏற்படும் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையின்படி தமிழகத்தில் 30.2 சதவீத ஆண்கள் மற்றும் 24.8 பெண்கள் ஆகியோர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேசிய சாரசரியை விட அதிகமாகும். தேசிய அளவில் 24 சதவீத ஆண்களும், 21.3 சதவீத பெண்களும் உயர் ரத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைப்போன்று தமிழக மக்களில் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வின் படி 22.1 சதவீத ஆண்கள், 20.7 சதவீத பெண்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் 15.6 சதவீத ஆண்களும், 13.5 சதவீத பெணகளும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வை உறுப்படுத்தும் வகையில்தான் தமிழக அரசின் அறிக்கையும் உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 23.95 லட்சம் புதிய உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 32.08 லட்சம் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உள்ளது. இதைப்போன்று 16.44 லட்சம் பேர் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22.78 லட்சம் பேர் ஏற்கெனவே சர்க்கரை நோயால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 59.45 லட்சம் பேர் புதிதாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது. ஏற்கெனவே 79.56 லட்சம் பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு தமிழகத்தில் தொற்றா நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் மீண்டும் நடைபயிற்சி, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.