

கரோனா பலரின் வாழ்வியலை மாற்றியிருக்கிறது. வீட்டிலிருந்தே வேலை என்பதை பலரும் சில வருடங்களுக்கு முன்னர் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று வீட்டிலிருந்து வேலையை செய்வது பல நிறுவனங்களில் முக்கிய ஆப்ஷனாக மாறிவிட்டது.
இந்தப் புதிய மாற்றம் பல சவுகரியங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் தங்களது தனிப்பட்ட கனவுகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதனை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.அத்தகைய கனவுகளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர்கள்தான் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், லஷ்மி கிருஷ்ணா இணையர். தங்கள் பயணம் எப்படி தொடங்கப்பட்டது என்பதை விவரித்துள்ள ஹரிகிருஷ்ணா, "எங்களது பயணக் கனவு 2019-ஆம் ஆண்டே தோன்றிவிட்டது. எங்களுடைய முதல் தாய்லாந்து பயணத்தில் நாங்கள் ’TinPin Stories’ என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து எங்களது வேலையை விட்டுவிட்டு ஃப்ரீலான்சிங் செய்ய ஆரம்பித்தோம். இதற்கு கரோனா காலம் எங்களுக்கு உதவியது என்றுதான் கூற வேண்டும். வேலையை விடுவது நிச்சயம் எளிதான முடிவல்ல. ஆனால், எங்கள் குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளித்தனர். குடும்பத்தின் ஆதரவு இருந்தால் மட்டுமே நாம் கனவுகளை நோக்கிச் செல்ல முடியும்.
பைக் வழியே சர்வதேச பயணத்திற்கு நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், கரோனா காரணமாக சர்வதேச சாலைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் இந்தியாவின் சிறு சிறு கிராமங்களுக்கு காரில் செல்ல முடிவு செய்தோம். முதலில் கர்நாடகா மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கு நாங்கள் பயணம் மேற்கொண்டோம். இதுவரை 13 கிராமங்களுக்கு சென்றிருக்கிறோம். காரின் வழியே பயணங்கள் மேற்கொள்வது அற்புதமானது. காரிலேயே தங்குவது, காரிலேயே தூங்குவது, சமைப்பது என அனைத்தும் சாத்தியமானது. எங்களது பயணம் பாதுகாப்பாகவும் இருந்தது.
பயணத்திற்கு புறப்படும்போது 10 செட் துணிகள், சமைப்பதற்கு சில உணவு பொருட்கள், லேப்டாப், மைக் போன்றவற்றை எடுத்துக் கொண்டோம். எங்கள் காரின் பின்பகுதியை படுகையறையாக மாற்றிக்கொண்டோம். எங்களது முதல் பயணத்திற்கு நாங்கள் ஒதுக்கிய பட்ஜெட் ரூ.2.5 லட்சம். ஆனால், செலவான தொகை பட்ஜெட்டைவிட குறைவாகவே இருந்தது.
நாங்கள் தண்ணீருக்காகத்தான் பெரும் தொகையை செலவு செய்தோம். அக்டோபர் 28, 2020 எங்களது பயணத்தை கேரளாவிலிருந்து தொடங்கினோம். கேரளாவிலிருந்து கர்நாடகா சென்றோம். உடுப்பியில் உள்ள சுவர்ணா ஆறு என அனைத்து பகுதிகளுக்கும் சென்றோம். அங்குள்ள மக்களின் பெருந்தன்மை எங்களைத் தொட்டது. மொழி பிரச்சினையைத் தாண்டி, அங்கிருக்கும் மக்களோடு நாங்கள் தொடர்பு கொள்ள முடிந்தது.
கர்நாடாகவில் உள்ள சித்தி பழங்குடிகளை (ஆப்பிரிக்க வம்சாவளியினர்) சந்தித்தோம் . அங்கிருந்து மும்பை, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் என எங்களது பயணம் நீண்டது.
முதலில் 60 நாள்கள் மட்டுமே பயணத்திற்கு திட்டமிட்டோம். ஆனால், 120 நாட்கள் சென்றுவிட்டது. இரவு எப்படி உறங்கினீர்கள் என்று கேட்டால்... நாங்கள் பெரும்பாலும் கார்களை பெட்ரோல் நிலையங்களில் நிறுத்திவிட்டு உறங்கிவிடுவோம். குளிப்பதற்கு பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் பாத்ரூம்களைதான் பயன்படுத்தினோம். முதலில் எல்லாம் சிரமமாக இருந்தது, பின்னர் பழகிவிட்டது. பாத்ரூம் தூய்மையாக இல்லாவிட்டால் வேறு இடத்திற்குச் சென்றுவிடுவோம்.
எங்களது ஒவ்வொரு நாள் பயணமும், சாகசம், மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. பயணத்திற்கு நாங்கள் சேகரித்து வைத்த பணத்தையே பயன்படுத்தினோம். எங்களது யூடியூப் சேனல் மூலம் சிறு பணம் வரும்... ஆனால் அது எங்களது பயண செலவுகளை ஈடுகட்டாது.
இந்த 120 நாட்கள் பயணத்தில் என் மனைவி என்னிடம் கூறியதில் முக்கியமானது... "இந்தியா பயணிப்பதற்கு பாதுகாப்பான நாடு" என்பது தான்" என்றார்.
தற்போது இந்த இணையர், இலங்கையில் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
தகவல் உறுதுணை: Condé Nast Traveller