

திருப்பூர்: பசிப் பிணி இல்லாமல் ஆக்குவது சமுதாயக் கடமை என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.
திருப்பூர் 18-வது புத்தகத் திருவிழா மங்கலம் சாலை கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. புத்தக விற்பனைக்கு மத்தியில் மாலை நேரங்களில் பல்வேறு சிறப்பு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிறப்பு அமர்வில் ‘பசியின் கதை' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
பசி குறித்துதான் தமிழ் இலக்கியம்அதிகம் பேசி இருக்கிறது. இந்த திருப்பூர் நகரில் ஏராளமானோர் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கியிருக்கின்றனர். பசி தான்அவர்களை இங்கு வரவழைத்திருக்கிறது. பசியை வெல்வதற்காக மேற்கொண்ட போராட்டத்தின் வரலாறு தான் மனிதகுலத்தின் வரலாறு. உணவும், பசியும் மனித வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று உள்ளன. பசிப்பிணி இல்லாமல் ஆக்குவது சமுதாயக் கடமை என்று திரும்பத் திரும்ப இலக்கியம் சொல்கிறது. மனிதன் வெல்லவே முடியாத ஒரே உந்து சக்தி பசிதான்.
தற்போதைய சூழலில் உணவு மிகப்பெரிய வர்த்தகமாக, மிகப்பெரிய சந்தையாக மாறி இருக்கிறது. பலரும் தேவைக்கு அதிகமாக உணவை குவித்து வைப்பதை, விரயம் செய்வதை காண்கிறோம். பசியைப் பற்றி ஒரு தலைமுறை இன்றைய தலைமுறைக்கு கற்றுத் தரவில்லை. அனைத்து அவமானங்களையும் சகித்துக் கொண்டு உண்ணக் கூடியவர்களாகத் தான் இந்தியர்கள் கணிசமானவர்கள் இருக்கிறார்கள்.
தற்போது சமூகத்தில் ஒரு பக்கம் வளர்ச்சி, மறுபக்கம் ஒடுக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இன்று ஓராயிரம் அட்சய பாத்திரம் இருந்தாலும், பல சமூகங்களுக்கு உணவு என்பது பெரும் கேள்வியாக, சவாலாக உள்ளது. அட்சய பாத்திரம் என்பது பாத்திரமல்ல, அது மனம்தான். பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு தான் அட்சய பாத்திரம். அனைவரும் சேர்ந்து உண்ணும் போது அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.
மனித வாழ்வு மேம்பாடு அடைய அடிப்படையானது, நற்செயல்களை முன்வைப்பது தான். இரண்டு ஆண்டு காலம் கரோனா பெருந்தொற்று நமது சரி, தவறுகளை மீள் பரிசீலனை செய்து கொள்ள கற்றுக் கொடுத்திருக்கிறது. 2000 ஆண்டு கால மொழி, ஆறு, இயற்கை சூறையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த நூற்றாண்டுக்குள் ஏற்பட்டிருக்கும் பேரழிவு மிகப்பெரியது. இயற்கை மனிதனின் அத்தனை தவறுகளுக்குப் பிறகும் செய்த தவறுகளை மன்னித்து இன்னுமொரு முறை வாய்ப்பு அளித்துள்ளது. இதையும்நாம் சரியாக புரிந்து கொண்டு செயல்படாவிட்டால் அடுத்து ஏற்படும் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கக்கூடும்.
புத்தகங்களை இழப்பது உயிரை இழப்பதை விட மோசமானதாகும். அச்சடித்த புத்தகங்களை அழித்தாலும், மனித மனங்களில் உள்ளபுத்தகங்களின் நினைவுகளை அழிக்கவே முடியாது.
ஒவ்வொரு மனிதரும் நடமாடும் புத்தகம். புத்தகம்என்பது காலப்பயணி, காலத்தின் ஊடாக பயணிக்கக் கூடியது. பசி, பட்டினியை வெல்ல முடியுமா தெரியாது. ஆனால் அதற்கான நம்பிக்கையை புத்தகங்கள் தருகின்றன. நம்பிக்கையை வெல்ல முடியாது. இவ்வாறு அவர் பேசினார். புத்தகத் திருவிழா நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.