‘ஹீமோபிலியா’வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்கீடு

‘ஹீமோபிலியா’வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்கீடு
Updated on
2 min read

உலக ஹீமோபிலியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 17-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘ஹீமோபிலியா’ என்பது மரபணு வழியாக வரக்கூடிய நோயாகும். இக்குறைபாடு உள்ளவர்களின் உடலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும். உரிய சிகிச்சை இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மரபு வழி நோயான இது ஆண்களை மட்டுமே பாதிக்கிறது. நம் உடலில் ரத்தம் உறைவதற்கு 13 காரணிகள் (ஃபேக்டர்ஸ்) தேவை. இவற்றில் காரணிகள் 8,9 ஆகியவை இன்றியமையாதவை. காரணி-8 குறைபாடு ஹீமோபிலியா-ஏ எனவும், காரணி-9 குறைபாடு ஹீமோபிலியா-பி எனவும் அழைக்கப்படுகிறது.

உலகளவில் 11.25 லட்சம் ஆண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4.18 லட்சம் பேருக்கு தீவிர குறைபாடு உள்ளது. சராசரியாக இந்தியாவில் 1.36 லட்சம் பேரும், தமிழகத்தில் சுமார் 1,800 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹீமோபிலியா சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 331 பயனாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை முறைகள்

கோவை அரசு மருத்துவமனை யின் டீன் நிர்மலா கூறியதாவது:

இயல்பைவிட எத்தனை சதவீதம் காரணிகள் குறைபாடு உள்ளதோ அதை வைத்து லேசான, மிதமான, தீவிர பாதிப்பு என மூன்று வகையாக ஹீமோபிலியா பாதிப்பை பிரிக்கிறோம். குழந்தைக்கு லேசான பாதிப்பு இருந்தால் விளையாடும்போதோ, அடிபடும்போதோதான் பாதிப்பு தெரியும். மிதமான பாதிப்பு உள்ளதை குழந்தைகள் தவழும் வயதில் தெரிந்துகொள்ளலாம். தீவிர பாதிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு, பிறக்கும்போதே தொப்புள்கொடியில் இருந்து ரத்தம் உறையாமல் வெளியேறும்.

விரைவில் கண்டறிவது நல்லது

குழந்தைக்கு இக்குறைபாடு இருப்பதை எவ்வளவு விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்கிறோமோ அவ்வளவு நல்லது. ஏனெனில் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தொப்புள் கொடி, ஊசிபோடும் பகுதிகளில் ரத்தக்கசிவு, பல் ஈறுகள், மூக்கு, மூட்டுகள், தசைகளில் ரத்தக்கசிவு, மூளை, உணவுக்குழாய், குடல், கழுத்தில் உள்ள பெரிய ரத்தநாளத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். மூட்டுகளில் மிகுந்த வலி, அசைக்கமுடியாத தன்மை இருக்கும். எனவே, விரைவாக கண்டறிந்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

வாழ்நாள் முழுவதும் சிகிச்சை

குறைபாடுள்ள காரணிகளை செலுத்தும் செலவு அதிகம். இருப்பினும், அரசு அவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டும். குறைபாடுள்ள காரணிகள் 8,9,7 ஆகியவற்றை ரத்தக்கசிவு ஏற்பட்ட 2 மணி நேரத்துக்குள் பயனாளிக்கு செலுத்த வேண்டும். ஒருவர், மாதந்தோறும் குறைந்தபட்சம் 3 முறை மருத்துவமனைக்கு வந்து குறைபாடுள்ள காரணியை செலுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும்போது சிலநேரங்களில் அதிகப்படியான காரணிகளை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். பாதிக்கப்பட்டவ ர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தற்போது வரை தேவைக்கேற்ப மட்டுமே காரணிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரத்தக்கசிவு வருவதற்கு முன்பே அவர்களுக்கு தொடர்ச்சியாக காரணிகளை செலுத்தி, ரத்தக்கசிவே வராமல் தடுக்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, குழந்தைகளுக்கு வாரம் இருமுறை காரணிகள் செலுத்தப்படும். இதற்கென தனியே அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in