

கொலராடோ: மாரடைப்பு உட்பட இதய நோய் பாதிப்பு குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிந்து கொள்ள உதவும் புதுவகை ரத்த பரிசோதனை முறையை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
இதய நோய் பாதிப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உலக அளவில் தங்கள் இன்னுயிரை இழப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார மையத்தின் தரவுகள். இதில் ஐந்தில் ஒரு பங்கு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் மாதிரியானவை இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதய நோய் பாதிப்பு குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிந்து கொள்ள உதவும் புதிய வகை ரத்த பரிசோதனை முறையை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
அந்த நாட்டில் உள்ள கொலராடோ மாகாணத்தின் போல்டர் நகரில் செயல்பட்டு வரும் சோமாலாஜிக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை முன்னெடுத்து வெற்றி பெற்றுள்ளனர். இந்த ரத்தப் பரிசோதனையின் மூலம் 27 வகையான புரோட்டின் (புரத) மாதிரிகளை புரோட்டியோமிக்ஸ் மற்றும் இயந்திரத்தின் உதவியுடன் ஆய்வு செய்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதய நோய் பாதிப்பு ஏற்படுமா என்பதற்கான சாத்தியக் கூறுகளை அறியலாம் என தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
சுமார் 11000 பேருக்கு இந்த வகையில் ரத்த பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வு தொடர்பான முடிவு மருத்துவ இதழான ‘சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின்’-இல் வெளியாகியுள்ளது.
முன்கூட்டிய இதய நோய் பாதிப்பு குறித்து அறிந்து கொள்வதன் மூலம் நோயாளிகளுக்கு தக்க சிகிச்சை மற்றும் அதனை தடுப்பதற்கான உத்திகளை கடைபிடிக்கலாம் என தெரிவித்துள்ளனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள். இப்போதைக்கு இந்த முறையின் கீழ் அமெரிக்காவில் நான்கு சுகாதார அமைப்புகளில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.