Last Updated : 09 Apr, 2022 07:17 PM

 

Published : 09 Apr 2022 07:17 PM
Last Updated : 09 Apr 2022 07:17 PM

எல்ஜிபிடிக்யூ+ சமூக பிரச்சினைகள் | பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சியை எப்படி வழங்கப்போகிறது அரசு?

கோப்புப் படம்

"இந்த வழக்குக்கான தீர்ப்பை எனது இதயத்திலிருந்து எழுத நினைக்கிறேன். மூளையிலிருந்து அல்ல... இவ்வழக்கு தொடர்பான புரிதலுக்காக எனக்கு உளவியல் கல்வி தேவைப்படுகிறது. அதற்கான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்” - எல்ஜிபிடிக்யூ+ சமூகம் தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அடுக்கிய வாக்கியங்கள் இவை.

தொடர்ந்து எல்ஜிபிடிக்யூ+ தொடர்பான வழக்குகளில் ஆக்கபூர்வமான கருத்துகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், 'பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு எல்ஜிபிடிக்யூ+ மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், சவால்களையும் அறிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்' என்ற உத்தரவை தமிழக துறைக்கு இப்போது வழங்கியிருக்கிறார். ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சிகள் சுமார் 6 முதல் 8 வாரங்கள் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சியை அரசு சார்ந்த நிறுவனங்கள் அளிக்காமல் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்துக்காக இயங்கும் அமைப்புகள், மருத்துவர்கள், எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினரால் வழங்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை என்பதால், பயிற்சிகளை உடனடியாக துவக்கலாம் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த நங்கை தம்பதியினர் (Lesbian), பெற்றோரால் போலீஸ் மூலம் துன்புறுத்துவதாக மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கில் இந்த உத்தரவை நீதிபதி வழங்கியிருக்கிறார்.

முன்னதாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் நாட்டிலேயே முதல் முறையாக 96 வழக்கறிஞர்களுக்கு எல்ஜிபிடிக்யூ+ பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது. இவ்வாறு எல்ஜிபிடிக்யூ+ சமூகம் சார்ந்த விழிப்புணர்வுகள் தமிழகத்தில் மெல்ல அதிகரித்து வருவதை மறுப்பதற்கில்லை. நிச்சயம் இது ஆரோக்கியமான போக்குத்தான். ஆனால் இந்த மாற்றங்கள் செயல்பாட்டு வடிவை பெற்றுள்ளதா என்ற கேள்வி நம் முன் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இதற்கான விடையை அவ்வமைப்பு சார்ந்த செயல்பாட்டாளர்களே கூறுகிறார்கள்.

கிரேஸ் பானு (ஒருங்கிணப்பாளர் திருநர் உரிமை கூட்டியக்கம்): "இம்மாதிரியான பயிற்சிகளை நாங்கள் பல வருடங்களாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். பள்ளிகளில் பாலினம் தெளிவற்று மாணவர்கள் இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் வழங்கும் இம்மாதிரியான பயிற்சிகளை மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும்போது முக்கியமானதாக அம்மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். அம்மாணவர்கள் பொதுவெளியில் அடையாளப்படுத்தக் கூடாது. அம்மாணவர்களை வசைகளுக்கு உள்ளாவதை அனுமதிக்கக் கூடாது.

எல்ஜிபிடிக்யூ+ மக்களை பாதிக்கும் இழிவு வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது என்று முதலில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். என்னை எவ்வாறு அழைக்க வேண்டும். நான் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை நான்தான் (எல்ஜிபிடிக்யூ+) தீர்மானிக்க வேண்டும். 9 ஆம் வகுப்புகளில் திருநங்கை சமூகத்தினர் சிலரின் வாழ்க்கை வரலாறுகள் இடம்பெற்றிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வரலாற்றைவிட எல்ஜிபிடிக்யூ+ குறித்து அறிவியல் ரீதியாக குழந்தைகளிடம் கொண்டு செல்லுங்கள் என்றுதான் நான் கூறுவேன். அப்போதுதான் குழந்தைகள் அதனை நன்கு உள்வாங்குவார்கள். வெளிபுறத் தோற்றத்தை வைத்து எந்த நபரின் பாலினத்தையும் தீர்மானிக்கக் கூடாது என்று அவர்கள் உணர்வார்கள். ஆசிரியர்களுக்கு எல்ஜிபிக்யூ+ குறித்து பயிற்சி அளிக்கும் அதே நேரத்தில் சாதிப் பற்றோடு இருக்கக் கூடாது என்ற பயிற்சியும் தேவைப்படுகிறது. ஏனெனில் இன்னமும் ஆசிரியர்கள் சிலர் சாதிப் பற்றோடு இருப்பதை நாம் காண முடிகிறது.

நிச்சயமாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஏனெனில், குழந்தைகள்தான் வருங்கால தலைமுறையினர். இதுதான் என்னுடைய வலியுறுத்தல்.

இம்மாதிரியாக தீர்ப்புகள் முன்னரே நிறைய வந்துள்ளன. இதில் உண்மை என்னவென்றால், நீதிபதிகள் கொடுக்கும் உத்தரவை எந்த அரசும் காது கொடுத்து கேட்பதில்லை. முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கும் அதிகாரிகள் பலரும் எல்ஜிபிடிக்யூ+ சமூக பற்றிய புரிதலற்றுதான் இருக்கிறார்கள். அவ்வாறான சூழலில் அரசுதான் பிரதிநிதித்துவம் வாய்ந்த தலைமைகளை கொண்ட குழுக்களை அரசு உருவாக்க வேண்டும். எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தை பொறுத்தவரை சமூக நலத் திட்டங்களை உருவாக்க அரசு தயராக இருக்கிறது. ஆனால், கல்வி ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாக அவர்களுக்கான வாய்பை வழங்குவதில் அரசு சிறப்பாக செயல்படவில்லை என்றுதான் கூறுவேன். சம உரிமையைதானே அரசு பேசுகிறது. அப்படி என்றால் சம உரிமை அனைத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் அல்லவா? அப்படி இருந்தால் மட்டுமே மாற்றம் உருவாகும்” என்றார்.

கோபி ஷங்கர் (தென்னிந்தியப் பிரதிநிதி, தேசிய மாற்றுப் பாலினத்தவர் கவுன்சில்): 2017-ஆம் ஆண்டே அதிகாரபூர்வமாக இல்லாமல் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம் எல்ஜிபிடிக்யூ+ விழிப்புணர்வு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது தொடர்பாக அரசாணையும் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர். அந்த வகையில் இதற்கு வலுசேர்க்கும் வகையில் நீதிபதியின் இந்த உத்தரவு அமையலாம்.

உங்களுக்கு ஓர் உதாரணம் கூறுகிறேன், எல்ஜிபிடிக்யூ+ விழிப்புணர்வு ஏற்படுத்த 2011-ல் மதுரை மகாத்மா மேல்நிலை பள்ளி மாணவர்களிடத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் தன்பாலின ஈர்ப்பைப் பரப்புகிறோம் என்று அந்த நிகழ்வு நடந்துக் கொண்டிருக்கும்போதே பள்ளி நிர்வாகம் எங்களை வெளியே அனுப்பியது. இதுதான் அப்போது நடந்தது. இப்போது சிறிது மாறியிருக்கிறது என்பது ஆறுதல்.

18 வயதை கடந்த மாணவர்களுக்கு நாம் எதனையும் கூறலாம். ஆனால், பாலினம் தெளிவற்று இருக்கும் குழந்தைகளிடம் பாடம் வழியாக இம்மாதிரியான விஷயங்களை எடுத்து செல்கிறார்கள் என்றால், இது கத்தியை அவர்களிடம் கொடுப்பதற்கு சமம். நாம் இதனை நேர்த்தியாகக் கையாள வேண்டியுள்ளது. ஏனெனில், தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களோ, அமைப்புகளோ இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் சிறுமி பத்து இடங்களில் தனக்கு நடந்த கொடுமைகளை விளக்க வேண்டியுள்ளது. நமது சட்ட அமைப்பும் அவ்வாறுதான் உள்ளது. பல நேரங்களில் சைல்ட் ஹெல்ப் லைன் வேலை செய்யாத நிலைதான் உள்ளது. நான் ஒன்றுதான் கூறுகிறேன்... வரும் மாற்றங்கள் நிச்சயம் வரவேற்ககூடியது. ஆனால் குழந்தைகளுக்கு எம்மாதிரியான குழந்தைப் பருவத்தை அளிக்கிறோம் என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இது அனைத்து குழந்தைகளுக்கு பொருந்தும். இதற்கான செயல்பாட்டில் அரசு தீவிரமாக இறங்க வேண்டும்” என்றார்.

2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை மாறியுள்ளது. அதிலும், குறிப்பாக தமிழகத்தில் இதுகுறித்த விவாதம் தொடர் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் நேர்மறை விளைவுகள் சமூக, குடும்ப, கல்வி அமைப்புகள் மற்றும் சட்ட ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தொடர் விழிப்புணர்வு முயற்சி பாரட்டத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x