

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பள்ளி மாணவர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது மயங்கிய நிலையில் மனத்திரையிலேயே கேமை ஓடவிட்டு கைகளை அசைத்து விளையாட முற்பட்ட காட்சி நம்மை வெகுவாக அதிரவைத்தது.ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவதன் உச்சபட்ச பாதிப்பின் சாட்சியாகவே அந்தக் காட்சி இருந்தது.
இப்போது மீண்டும் ஆன்லைன் விளையாட்டுகளின் மோசமான விளைவுகள் குறித்து தெளிவுபெற வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் பெற்றோர் எப்படி அணுக வேண்டும் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து முனைவர் சுடர்க்கொடி கண்ணன் கூறும்போது, "பப்ஜி ( PUBG), ஃப்ரீ ஃபயர் (FREE FIRE), புளூ வேல் (Blue Whale), கேண்டி கிரஷ் (Candy Crush), டெம்பிள் ரன் (Temple Run), ‘பிங் வேல்’ (Pink Whale) போன்ற இணைய விளையாட்டுகளை இளைஞர்கள் அதிகம் விளையாடுகின்றனர். நிஜ உலகிற்கு இணையான 3D கிராபிக்ஸ் காட்சிகள், உயர் தொழில்நுட்பம் போன்றவை பப்ஜி (PUBG) விளையாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்த விளையாட்டுகள் வைரலாகப் பரவியது. எந்த இடத்தில் இருந்தாலும் நண்பர்கள் சேர்ந்து, பேசிக்கொண்டே, எந்த செலவுமின்றி, விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும் அனைவரையும் சுட்டு வீழ்த்தி வெற்றியின் அடுத்தடுத்த இலக்குகளை அடையும்போது, நண்பர்கள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் அவர்களை உற்சாகப்படுத்தி, மேலும் மேலும் விளையாடத் தூண்டுகிறது.
தங்கள் ஐடி-யை ‘ராயலாக’ வைத்துக் கொள்வதற்காக, ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் வரை பணத்தை விரயம் செய்கின்றனர். பள்ளி மாணவர் ஒருவர் தனது பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90,000-ஐ செலவு செய்ததும், வீட்டிற்குத் தெரியாமல் இருக்க, வங்கியிலிருந்து தன் அப்பாவின் செல்பேசிக்கு வந்த குறும் செய்திகளை அழித்ததும் செய்தியாக வெளிவந்தது. இதேபோல லட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டு பெற்றோரை ஏமாற்றிய சம்பவங்களும் உள்ளன.
இந்தியாவில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டாலும், வி.பி.என் (virtual private network) தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த விளையாட்டை கோடிக்கணக்கானோர் விளையாடுகின்றனர். சமீபத்தில் மதன் என்ற இளைஞர், பப்ஜி விளையாடக் கற்றுத்தருவதாகக் கூறி, தன் யூடியூப் சேனலில் உடன் விளையாடுபவர்களுடன் ஆபாசமான வார்த்தைகளைப் பேசி கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்ததுடன், அவருக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். இவர்கள் மதன் கூறும் ஆபாச வார்த்தைகளை ரசித்தும், எதிர்ப்பவர்களைக் கெட்டவார்த்தைகளால் மதன் திட்டுவதை ஆதரித்தும் வந்துள்ளனர் என்பதே அதிர்ச்சிக்குரியது.
பீடோபைல்கள் (Phedophilia) கேமிங்கில் கூட சிறுவர்கள் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இதுபோன்ற விளையாட்டுகள் குழந்தைகள் மனதைப் பெரிதும் பாதிக்கின்றன. இளைஞர்களிடம் வன்முறையை ஊக்குவிக்கின்றன. ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் இப்படி ஓர் உலகம் இயங்குவது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.
கரோனா ஊரடங்கு ஆன்லைன் விளையாட்டுகளுக்கான கதவுகளை மேலும் அகலமாகத் திறந்துள்ளது. வெளியுலக விளையாட்டு இல்லாமல் போனதால், வீட்டில் அமர்ந்து கொண்டு நம் பிள்ளைகள் நல்லதா, கெட்டதா என தெரியாமல், இணையத்தில் ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கும் விளையாட்டை தேர்வு செய்கின்றனர். பொழுதுபோக்கிற்காக விளையாடியவர்கள், தற்போது அதிலேயே மூழ்கி அடிமையாகின்றனர். இதனால், தங்களுடைய வேலைகளை கவனிக்க முடியாமல் கவனச்சிதறல், மன அழுத்தம், படபடப்பு உள்ளிட்ட நோய்களுக்கும் ஆளாகின்றனர்.
வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, ஆத்திரப்படுவது, பெற்றோரிடம் கோபப்படுவது போன்ற பிஹேவியரல் (Behavioural) பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள். இவர்களை நிஜ உலக பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பி நிழல் உலகில் மூழ்கடித்து, இவர்களின் இயல்பான படைப்பாற்றல், ஒழுக்க சிந்தனை, அறிவு, சமூகப் பற்று ஆகியற்றை காலி செய்து, சகமனிதனை எதிரியாக பார்க்கும் சிந்தனையையும் கலாச்சார சீரழிவையும் திணிக்கிறது.
கண்காணிப்பு அவசியம்:
“வருமுன் காப்போம்” என்ற விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும். இணையத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கும், கண்காணிப்பதற்கும் மைக்ரோசாப்டின் ஃபேமிலி சேஃப்டி அப் (Microsoft Family Safety App) உதவுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் குழந்தை எவ்வளவு நேரம், எப்போது சாதனத்தைப் பயன்படுத்தலாம் என்பதைப் பெற்றோர் முடிவு செய்யலாம். அவர்களின் வயதுக்கு ஏற்ற மற்றும் பாதுகாப்பான உள்ளடக்கத்தைப் பார்க்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் முடியும். தீங்கு விளைவிக்கும் வலைத்தளங்களை குழந்தைகள் பார்க்காமல் தடுக்கலாம். உரையாடல்களைப் பதிவு செய்யலாம். இது பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை சைபர் புல்லிங்கில் இருந்து பாதுகாக்க உதவும். சைல்ட்டு லாக் (Child lock), பேரன்டல் கன்ட்ரோல் (Parental control) போன்ற வசதிகளைப் பயன்படுத்தியும், குழந்தைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பிள்ளைகள் அதிக நேரம் இணையத்தில் மூழ்கியிருப்பதை தெரிந்துகொண்டால், அதைத் தடுக்க அல்லது கண்காணிக்க நடவடிக்கை எடுங்கள். அதிக நேரம் இணைய விளையாட்டுகள் விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிக் கூற வேண்டும். தேவையற்ற, அறிமுகமில்லாத நபர்களுடன் அவர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அத்துடன், திடீரென தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அலைபேசியில் அல்லது இணையத்தில் அவர்கள் மூழ்கியிருந்தால் அதிகம் கவனம் வேண்டும்.
“ப்ளூ வேல்” அல்லது “பிங் வேல்” என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அடுத்தவர்கள் உங்களைத் தூண்டும் விளையாட்டுக்குச் செல்லக் கூடாது என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டுகள் விளையாட அவர்களைப் பழக்கலாம். அவர்களால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாவிட்டால் அவர்களுக்கு முறையான சிகிச்சையும் கவுன்சலிங்கும் கண்டிப்பாகத் தேவை. வாழ்க்கையில் பிரச்சினைகளை எவ்வாறு துணிச்சலாக சமாளிப்பது என்றும், சமூக வலைத் தளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது அவசியம். அரசாங்கமும் முறையான கட்டுப்பாடுகளை விதித்துக் கண்காணிப்பது மட்டுமே ‘விளையாட்டு வினையாகாமல்’ இருப்பதற்கான நிரந்தரத் தீர்வாகும்” என்கிறார் முனைவர் சுடர்க்கொடி கண்ணன்.
மேலும் இதுகுறித்து மனநல மருத்துவர் ராமானுஜம் கூறுகையில், “ஒரு மனிதன் போதைப் பொருட்களுக்கு மட்டும் அடிமையாவதில்லை, தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பழக்கங்களுக்கும் (Behaviour) அடிமையாகி வருகிறான். ’நீங்கள் செய்யக் கூடிய வேலைகள், மொபைல் பயன்பாடு போன்றவை கூட ஓர் அடிமைத்தனம்தான். இது ஒரு வளர்ந்து வரும் போதை.
ஆன்லைன் விளையாட்டு எந்தவித கவலையும் இல்லாமல் நேரத்தைப் போக்கும் சிறந்த வழி என ஆரம்பிக்கின்றனர் சிறுவர்கள். நாள்பட, அந்த செயலியினால் மதுவிற்கு அடிமையாகும் நபரை விட, மிக மோசமான நிலைக்கும் சிறுவர்கள் ஆளாகி விடுகின்றனர். இதற்கு யார் காரணம் என்று அலசிப் பார்த்தால், பலவற்றை நாம் கூறலாம். எனினும் மாணவர்களை இவற்றிலிருந்து விடுபட வைப்பது ஒரு சிரமமான விஷயமாகவே மாறியுள்ளது.
குழந்தைகளுக்கு பொதுவாக தற்போதைய காலத்தில் குழந்தைப் பருவத்திலேயே காட்டப்படும் கார்ட்டூன்களில், வன்முறைகளே அதிகமாக பார்க்க முடிகிறது. அதன்மூலம் உருவாக்கப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் எளிதில் அடிமையாகிவிடுகின்றனர்.
ஆன்லைன் கேம்களில் சிறுவர்களைக் கவருவதற்குப் பல யுக்திகள் உள்ளன. இவை எளிதில் அவர்களுக்குப் போதைப்பொருள் போன்று ஊறிவிடுகிறது. குறிப்பிட்ட காலம், ஆர்வத்திற்காக விளையாடுவார்கள், ஒரு கட்டத்தில் விளையாடவில்லை என்றாலும், கை அதையே தேட துவங்கும். இவ்வாறு, பலரும் முழுநேர அடிமைகளாக மாறுகின்றனர். மேலும், இது அவர்களை மனதளவில் வன்முறையாளர்களாகவும் உருவாக்கி விடுகிறது. யாருக்கும் உதவும் மனப்பான்மையற்று, மிகுந்த சுயநலவாதிகளாகவும் ஆளாக்கிவிடுகின்றது.
ஒட்டு மொத்தத்தில், ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளங்கள் போன்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இவை, மக்களுக்கு நல்லதா கெட்டதா என்று யோசிக்கும் திறனைக் கூட முடக்குகிறது என்றே கூறவேண்டும். ஒரு புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டால், அந்த விளையாட்டை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் விளம்பரம் செய்கின்றனர். இதனால், சிறுவர்கள் தெரிந்தோ தெரியாமலேயோ உள்ளே நுழைய நேரிடுகிறது.
முடிந்த அளவு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மொபைல் போனை கொடுக்காமல் பழக்கப்படுத்துங்கள். மாணவர்களுக்குப் படிப்பில் கொடுக்கப்படும் அதிக அழுத்தம், வீட்டில் கொடுக்கப்படும் அழுத்தம் போன்றவையே இதுபோன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. இவர்களைப் பெற்றோர்கள் முழு சிரத்தையடுத்து தங்களின் கண்காணிப்பில் வைத்து, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை முழு நேரமும் கண்காணித்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர் ராமானுஜம்.