Published : 30 Mar 2022 07:01 PM
Last Updated : 30 Mar 2022 07:01 PM

கோடைக்கால உடல்நலப் பிரச்சினைகளும் எளிய வழிகாட்டுதல்களும்

வெயில் ஒரு பிரச்சினை என்றால், வெயிலால் ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் இன்னொரு பிரச்சினை. நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கும் சூழலில், இந்தக் கோடையில் என்னவிதமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்? - பார்ப்போம்.

தலைக்கு எண்ணெய் அவசியம்: வெயிலின் தாக்கத்தால் முடி உதிர்தல் ஒருபுறம் இருக்க, முடி உடைதலும் அதிகமாக இருக்கும். இதைத் தடுக்க, சுத்தமான தேங்காய் எண்ணெய்யைத் தலையின் மேல் தோலில் படுமாறு தினமும் மென்மையாகத் தேய்க்க வேண்டும். குறிப்பாகக் காலையில் தேய்த்துவர, அன்றாடம் வெயிலில் செல்லும்போது, வெயிலின் தாக்கத்தால் முடியின் வேர்கள் வலுவிழப்பது தடுக்கப்பட்டு, முடி உடைதல், முடி உதிர்வுப் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். கூடுதலாக வெப்பத்தால் தலையில் ஏற்படும் கொப்பளங்களும் தடுக்கப்படும். மேலும், வெயில் தாக்கத்தால் ஏற்படும் கண் எரிச்சலும் குறையும்.

எரிச்சல் தீர்க்கும் தண்ணீர்: உடல் வறட்சி, உடலில் நீர்ச்சத்துக் குறைதல், அதைத் தொடர்ந்து ஏற்படும் சிறுநீர் எரிச்சல் போன்றவை இருக்கும் என்றாலும், கோடையில் அவற்றின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். வெட்டிவேர் போட்டு ஊறவைத்த தண்ணீரைக் குடித்துவர, உடல் சூடு குறையும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்குச் சீரகம், வெந்தயம் தலா 10 கிராம் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்துவர சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். மேலும் பூசணிக்காய், சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சை, இளநீர், நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை இந்தக் காலத்தில் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

வெயில் சூட்டால் ஏற்படும் பேதிக்கு, நீர் மோரில் வெந்தயம் சேர்த்துக் குடிக்கலாம். உடல் செரிமனத்துக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாவை உருவாக்கும் குணம் நீர் மோருக்கு உண்டு. இந்த நாட்களில் அதிக காரம், சூடு நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவில் நண்டு, கோழிக்கறி போன்றவற்றைத் தவிர்ப்பது நலம்.

முகத்துக்கு மாவு முக்கியம்: கோடையில் முகப் பொலிவு குறைதல், முகம் கறுத்தல் என்பதும் இயல்பாக ஏற்படக்கூடியதே. இதற்கு, நலங்கு மாவைப் பயன்படுத்தலாம். பாசிப்பயறு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கார்போகரிசி, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு ஆகியவற்றைச் சம அளவு சேர்த்து பொடித்ததே ‘நலங்கு மாவு’ எனப்படுகிறது. தினமும் மாலை அல்லது இரவு தூங்கும் முன், இதைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் தடவி, அரை மணி நேரத்துக்குப் பிறகு முகம் கழுவிவர, முகப்பொலிவு குறையாது.

அதேபோல, வெயில் புழுக்கத்தால் ஏற்படும் தோல் அரிப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கும் நலங்கு மாவு மிகுந்த பலனளிக்கும். சிறிது மஞ்சள், குப்பைமேனி, வேப்பிலை ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து அரிப்பு, படை உள்ள இடங்களில் தடவி, கால் மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். தோலில் ஏற்படும் வேர்க்குருவுக்கும் இது சிறந்த மருந்து.

தாகத்தைக் குடிக்கும் குளியல்: இந்த வெயிலில், தாகம்தான் எல்லோரையும் தாக்கும் பரவலான பிரச்சினை. தாகத்தைப் போக்க குடிக்க தண்ணீருடன், குளியலும் அவசியம். அதுவும், எண்ணெய்க் குளியல். உடல் சூட்டை அதிகரிக்காமலும் குறைக்காமலும் தாங்கும் பண்பு, இந்தக் குளியலுக்கு உண்டு. மற்ற நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோமோ இல்லையோ, கோடையில் தவறாது, வாரம் இரு முறை எண்ணெய்க் குளியல் போட்டே ஆக வேண்டும்.

கோடையில், நோய்த்தொற்று என்பது புறக்கணிக்கத்தக்க அளவே இருக்கும். ஏனெனில், கிருமிகள் வளர்ச்சிக்கு ஏற்ற காலம் வெயில் காலம் அல்ல. வெயிலால் உடலுக்கு ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளைத் தவிர பெரிய அளவில் நோய்கள் ஏற்படாது. எனவே, கோடை காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க அக்கறை தேவை.

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x