Last Updated : 11 Mar, 2022 12:46 PM

 

Published : 11 Mar 2022 12:46 PM
Last Updated : 11 Mar 2022 12:46 PM

கண்ணிலுமா பிரஷர் வரும்? - கண்நீர் அழுத்த உயர்வும், கவனத்துக்குரிய குறிப்புகளும்

இப்போதெல்லாம் கண் மருத்துவமனைக்கு வருபவர்களில் பலர் தங்களுக்குக் கண்ணில் அழுத்தம் இருக்குமா என்று கேட்கிறார்கள். இன்னும் சிலர் குளூக்கோமாவாமே, எனக்கு அது இருக்குமா என்றும் கேட்கிறார்கள். இது ஒரு வகையில் நல்ல விழிப்புணர்வுதான். அதாவது அவர்கள் கேட்பது கண்ணில் அழுத்தம் அதிகரித்திருக்குமோ என்கிற கவலையில்.

பொதுவாக நம் கண்ணில் ஒருவித அழுத்தம் பராமரிக்கப்பட்டு வருவது இயல்பான ஒன்றுதான். அழுத்தம் இயல்பாக இருக்கும்போது பிரச்சினை இல்லை. அழுத்தம் அதிகரிப்பதுதான் ( Increased eye pressure) கவலைக்குரிய செய்தி. அதனால் தலைவலி என்றாலோ அல்லது கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றாலோ ஒருவேளை கண்ணில் பிரஷர் அதிகமாயிருக்குமோ என்று அதிகம் கவலைப்படுகிறார்கள். நமக்குத் தெரிந்தது எல்லாம் உடம்பில் உள்ள இரத்த அழுத்தம் தானே ( Blood Pressure.) பிறகு அது என்ன புதிதாகக் கண்ணில் அழுத்தம்? (Eye Pressure)

கண்ணில் அழுத்தம்

பி.பி. ( B.P – Blood Pressure) என்று சர்வ சாதாரணமாக அனைவராலும் சுருக்கமாக அன்பாக அழைக்கப்படும் இரத்த அழுத்தம் நம் உடலில் பராமரிக்கப்படுவது தெரிந்ததுதான். 120/80 மி.மீ பாதரச அழுத்தத்தை விட இந்த அழுத்தம் உயர்ந்தால் அதனை உயர் இரத்த அழுத்தம் என்கிறோம். ( Hypertension )

இதே போல் நம் கண்ணின் இயல்பான அழுத்தம் 10 - 20 மி.மீ பாதரச அழுத்தத்துக்குள் இருக்க வேண்டும். இதைவிட உயர்ந்தால் அதனை கண்நீர் அழுத்த உயர்வு ( Glaucoma) என்கிறோம். நம் உடலில் பி.பி அதிகமாக உயரும்போது எப்படி பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறதோ அது போல் கண்நீர் அழுத்தம் உயரும்போதும் பிரச்சினைகள் ஏற்படும். நம் கண்ணில் உள்ள முன் கண்ரசம் உற்பத்தியாவதில் உள்ள பிரச்சினை அல்லது அதன் சுழற்சி பாதையில் ஏற்படும் தடை காரணமாக அழுத்தம் அதிகரிக்கலாம்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் கண்களைப் பாதிப்பதால் பெரும்பாலும் பாதிப்பு ஏற்பட்ட பிறகே மருத்துவமனைக்குப் பலரும் செல்லும் நிலைமை இருக்கிறது.

பரபரப்பான வாழ்க்கைச் சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், தொழில் சார்ந்த அழுத்தங்கள் மற்றும் தொழில் முறைகள் போன்ற காரணங்களால் கண்நீர் அழுத்த உயர்வு கணிசமாக அதிகரித்து வருவதாக கண்மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் தொடக்க நிலையில் கண்டறிவது முக்கியம். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தாமாக முன்வந்து மருத்துவமனைக்குச் சென்று கண்நீர் அழுத்தச் சோதனை செய்துகொள்வது நல்லது.

கண்நீர் அழுத்த உயர்வினை ஏன் கவனிக்க வேண்டும்

கண்நீர் அழுத்த உயர்வை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாது. சொட்டு மருந்து மூலமாகவோ, லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலமாக அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

இது ஒரு நாள்பட்ட நீடித்த பிரச்சினை என்பதால் வாழ்நாள் முழுவதற்கும் கவனிப்பும் தொடர் சிகிச்சையும் தேவை.

பார்வையைக் காப்பாற்ற கண்நீர் அழுத்த உயர்வினை தொடக்க நிலையிலேயே கண்டறிய வேண்டியது கட்டாயம். நாள்பட்ட நிலையில் பார்வை கடுமையாகப் பாதித்துவிடும்.

35 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை கண்பரிசோதனையினை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் ஒருவேளை இந்நோய் இருந்தால் கூட தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும்.

ஒருமுறை பார்வை நரம்பு பாதித்து பார்வை பாதித்துவிட்டால் இழந்த பார்வையை மீட்க முடியாது. மருத்துவச் சிகிச்சை மூலம் கண்நீர் அழுத்த உயர்வினைக் கட்டுப்படுத்தி மேற்கொண்டு பார்வை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியும்

யார் யார் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்?

கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் (Myopia - மைனஸ் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் )

35 வயதுக்கு மேற்பட்டவர்கள்

வீட்டில் வேறு யாரேனுக்கும் கிளாக்கோமா பிரச்சினை இருப்பவர்கள்

சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை, இரத்த அழுத்த உயர்வு இருப்பவர்கள்

வேறு ஏதேனும் உடல்நல பிரச்சினைகளுக்கு ஸ்டீராய்டு வகை மருந்து எடுத்துக்கொள்பவர்கள்

விளக்கினைச் சுற்றி ஒளிவட்டம் காண்போர்

அடிக்கடி கண்ணாடியை மாற்றவேண்டி இருப்போர்.

அடிக்கடி தலைவலி பிரச்சினை இருப்பவர்கள்

பக்கப் பார்வையில் தடுமாற்றம் உடையவர்கள்

அதிக மன அழுத்தம் உடையவர்கள்

வருமுன் காப்போம்

பிற நோய்களைப் போல் இல்லாமல் கண்நீர் அழுத்த உயர்வு ஏற்பட்ட பிறகு அழுத்த உயர்வினால் ஏற்பட்ட பார்வை பாதிப்பினை சரி செய்ய இயலாது என்பது மிகவும் வருத்தமான செய்தி. அழுத்த உயர்வினால் கண்ணின் பார்வை நரம்புகள் நசிந்து போய் விடும். இதனை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. இது எதனைப் போன்றது என்றால், நீர் ஊற்றாவிட்டால் எப்படி செடியானது காய்ந்து பட்டுப்போய் விடுகிறதோ அதைப் போன்றது. பட்டுப் போன செடியினை நீர் ஊற்றி மீண்டும் தளிர்க்க வைக்க முடியாது அல்லவா?

ஆறுதலான செய்தியே இல்லை என்றால் இருக்கிறது. அழுத்த உயர்வு ஏற்பட்ட பிறகு அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மேற்கொண்டு பார்வை பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க நல்ல மருந்துகளும் லேசர் சிகிச்சை முறைகளும் இருப்பதுதான் அது. ஒருவேளை கண்நீர் அழுத்தம் பின்னாளில் உயர்வதற்கான வாய்ப்பு / அறிகுறிகள் இருந்தால் கூட எளிய லேசர் மருத்துவம் செய்து பார்வையைப் பாதுகாக்கும் அளவுக்கு மருத்துவம் இன்று வளர்ச்சி பெற்றுள்ளது.

முன்னரே குறிப்பிட்டது போல் கண்நீர் அழுத்த உயர்வு ஒரு நாள்பட்ட பிரச்சினை. தொடர் சிகிச்சையும் கவனிப்பும் தேவை. இதன் மூலம் உறுதியாகப் பார்வையை முழுவதுமாக காக்க முடியும்.

| உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம் (மார்ச் 6 - 12) |

- கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x