

வாழ்க்கைக்கு படிப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோல் பயிற்சியும் முக்கியம் என்று வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்தார்.
வேலூர் ஆண்கள் மத்திய சிறை காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்கள், தலைமை காவலர் களுக்கான 5 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். ஆப்கா இயக்குநர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஆண்கள் மத்திய சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி வரவேற்றுப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, பயிற்சி முகாமை தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘குடும்ப சூழல் காரணமாக குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்கு கைதியாக பலர் வருகின்றனர். வாழ்க்கைக்கு படிப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோல் பயிற்சியும் முக்கியம். தொடர்ந்து, பயிற்சி வழங்குவதால் மட்டுமே சாதிக்க முடியும். அதீத நம்பிக்கையும் தவறுக்கு வழிவகுக்கும். சீருடை பணியாளர்களாகிய நீங்களும், நானும் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்’’ என்றார்.