Published : 18 Feb 2022 07:07 PM
Last Updated : 18 Feb 2022 07:07 PM

ஆண்களுக்கும், பெண்களுக்கும்... குழந்தைப் பேறுக்கு உறுதுணைபுரியும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்

திருமணமாகி ஒரு வருடம் இல்வாழ்க்கையில் ஈடுபட்ட பிறகும் குழந்தைப் பேறு இல்லை என்றால், அதை மகப்பேறுயின்மை என்பார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் சாதாரணமாக இல்வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு குழந்தை பிறக்கும், அடுத்த குழந்தை பிறப்பதில் சிரமம் இருக்கும். இந்த நேரத்தில் உடல் ரீதியான, மன ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். பெண் என்று எடுத்துக்கொண்டால் கர்ப்பாசயத்தை வந்து சேர்ந்தடைந்த ஆர்த்தவ பீஜம் நீடித்து வாழாமல் போவது, இந்த பீஜமானது கர்ப்பாசயத்தில் சரியாகப் படியாது, சினை முட்டை கர்ப்பப் பையை வந்து அடையாதது போன்ற காரணங்களும், மேலும் antiphospholipid syndrome, கட்டிகள், ரத்தம் உறையும் நோய்கள், சர்க்கரை நோய், ஊட்டச்சத்து இன்மை, கர்ப்பப் பைக் கட்டிகள், அதிக உடல் எடை, முக்கியமாக PCOD என்ற நோய், சினைமுட்டையில் நீர்க்கட்டு, பெண்ணுறுப்பு அழற்சி என்ற Pelvic inflammatory disease, endometriosis என்று சொல்லக்கூடிய யோனியின் திசு பிற பகுதிகளுக்குப் பரவுதல், தைராய்டு நோய் போன்றவை காரணமாகின்றன.

பெண்களுக்கு progesterone, FSH பார்க்க வேண்டும். தினமும் காலையில் உடல் சூட்டை நிர்ணயிக்க வேண்டும். Anti mullerian hormone போன்றவற்றைச் செய்ய வேண்டும். கர்ப்பப் பைக் குழாய் (fallopian tube) அடைப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

சிகிச்சை முறைகளில் பொதுவாகப் பெண்களுக்குச் சினை முட்டை உருவாகாமல் போனால் அங்கே சினை முட்டையை உருவாக்குவதற்கு சதகுப்பை, எள், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவற்றைக் கொடுப்போம். சிறுதேக்கு, திருதாளி, குமாரியாஸவம், ஜீரகாரிஷ்டம், சீரகக் குழம்பு, குறிஞ்சிக் குழம்பு போன்றவை சிறந்த மருந்துகளாகும். மலை வேம்பாதி எண்ணெயால் குடலைச் சுத்தி செய்ய வேண்டும். Endometrial thickness அதாவது கர்ப்பப் பையின் கனம் 5 மி.மீக்குக் குறைவாக இருந்தால் அதுவும் பிரச்சினை. IVF போன்றவை செய்ய இயலாது. அந்த இடத்தில் க்ஷேத்ர துஷ்டி என்று எடுத்து ஆலமொட்டு பால் கஷாயம், பலசர்ப்பீஸ், தாதுகல்ப லேகியம், பூர்ண சந்திரோதயம் போன்றவற்றைக் கொடுப்போம். மூக்கில் நஸ்யம் - மூலிகை சிகிச்சை இடுவோம். பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம் வைத்து அப்யங்க ஸ்நானம் செய்யச் சொல்லுவோம்.

பெண்களுக்கு...

l மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.

l ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.

l ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

l கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.

l வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.

l அரச மரத்து இலையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட அல்லது அத்தி விதையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட endometrial thickness அதிகரிக்கிறது

l உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.

l இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.

l சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.

l அதிக ரத்தப்போக்கு உள்ள நிலைகளில் சதாவரி லேகியம் கொடுக்கலாம்.

ஆண்களின் குறைபாடு என்று எடுத்துக்கொண்டால் விந்துக்களின் எண்ணிக்கை குறைதல். இது 20 million sperm per milliliter இருக்க வேண்டும். ஆனால் 80, 90 என்றெல்லாம் பார்த்திருக்கிறோம். இப்போது அது மேலும் குறைந்துகொண்டே இருக்கிறது. விந்து வெளியேறாமல் இருத்தல், விந்தின் உருவ அமைப்பில் மாறுபாடு இருத்தல், பிறவிக் குறைபாடுகள், புற்றுநோய்க்கு எடுக்கும் மருந்துகள், அதிகமான உஷ்ண நிலையில் வாழ்தல், மதுபானம் அருந்துதல், ஆண்மைக் குறைபாடு, சில ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல், அதிக உடல் எடையுடன் இருத்தல், விந்து வெளியேறும் நேரத்தில் வெளியேறாமல் மேல்நோக்கி நகருதல், வயது இவையெல்லாம் காரணங்கள். 30 வயதுக்குக் கீழுள்ள தம்பதிகள் தினமும் இல்வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. 20 வயதில் கர்ப்பம் அடையும் வாய்ப்பு அதிகம். 35 வயதுக்கு மேல் குழந்தை பிறக்கும் வாய்ப்புக் குறைவு. அதனால்தான் ஆயுர்வேதத்தில் இளவயதில் திருமணம் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசோதனை என்று எடுத்துக்கொண்டால் ஆண்களுக்கு ஐந்து நாட்கள் உடலுறவு கொள்ளாமல் இருந்துவிட்டு விந்துப் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆண்களுக்குக் குறைபாடு என்று வந்தால் விந்துகளின் அணுக்களைக் கூட்டுவதற்கு அஸ்வகந்தா, பூனைக் காலி, பால்முதப்பன், ஜாதிக்காய், முருங்கை வித்து, பாதாம் பருப்பு, பிஸ்தா, சிறுநாகப்பூ போன்றவை பயன்படுகின்றன. விந்துகளின் முன்னோக்கிச் செல்லும் தன்மையை அதிகரிக்க சேராங்கொட்டையின் மேல் தோடு, வெற்றிலைச் சாறு, பூர்ண சந்திரோதயம், கஸ்தூரி, கோரோசனை போன்றவை பயன்படுகின்றன. உருவ அமைப்பைச் சரியாக்க யாபன வஸ்தி எனப்படும் ஆசனவாய் வழியாகச் செலுத்தக்கூடிய பாலால் காய்ச்சப்பட்ட ஆமணக்கு வேர் கஷாயம் பயன்படுகிறது. இது அல்லாமல் கைமருந்தாகப் பல மருந்துகள் உள்ளன அவற்றை நாம் பார்ப்போம்.

ஆண்களுக்கு...

l வெற்றிலை போடும்போது கூடவே துளசி விதையைப் பொடி செய்து சேர்த்துச் சாப்பிட்டால் தாது கட்டும்.

l நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இவை மூன்றையும் நசுக்கிப் போட்டு கஷாயம் செய்து குடித்தாலும், அமுக்கரா கிழங்குப் பொடி அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து கொடுத்தாலும் தாது பலப்படும்.

l வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளைப் பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும்

l ஓரிதழ் தாமரை, ஜாதிக்காய், துளசி, ஆலம் கொழுந்து, முள் இலவம் பிசின், அம்மான் பச்சரிசி, கொத்தமல்லி இந்தச் சேர்க்கையானது asthenospermia என்று சொல்லக்கூடிய விந்து முன்னோக்கிச் செல்லக்கூடிய குறைபாட்டைப் போக்கும்.

l முருங்கைப் பிசினைப் பாலில் காய்ச்சி கற்கண்டு சேர்த்து அல்லது சின்ன வெங்காயம் ஆகியவற்றை நெய்யில் வதக்கிக் கொடுத்து வர ஆண்மை பலம் அதிகரிக்கும்.

l பூசணி விதை, வெள்ளரி விதை, சாரைப் பருப்பு, நீர்முள்ளி விதை, அக்ரோட் பருப்பு, பருத்திக் கொட்டை, மதனகாமப்பூ, பிஸ்தா பருப்பு, பூனைகாலி விதை, மகிழம் விதை, கல் தாமரை விதை இவற்றை விந்து குறைப்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.

l பிருங்கராஜ ஆஸவம் விந்து துஷ்டிகளுக்குப் பலனைத் தருகிறது.

l விந்துவில் பழுப்பணுக்கள் இருந்தால் வெட்டிவேர், சந்தனம், சிறுநாகப்பூ, மருதம்பட்டை கஷாயம் வைத்துக் கொடுக்க பலன் கிடைக்கும்.

- ’நலம் வாழ’ பகுதியிலிருந்து.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x