Published : 07 Feb 2022 01:41 PM
Last Updated : 07 Feb 2022 01:41 PM

உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வுக்காக110 கி.மீ தொலைவு சைக்கிள் ஓட்டிய எஸ்.பி

திருச்சி: உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி குறித்து காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருச்சி எஸ்.பி சுஜித்குமார் நேற்று 110 கி.மீ தொலைவுக்கு சைக்கிள் ஓட்டினார்.

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக சுஜித்குமார் செயல்பட்டு வருகிறார். இவர் எஸ்.பியாக பொறுப்பேற்றதில் இருந்து, காவல் துறையினரிடம் உடல்நலம் பேணுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், உடற்பயிற்சி குறித்து காவல்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.பி சுஜித்குமார் நேற்று திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் அருகே ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து வையம்பட்டி வரை சைக்கிளில் சென்றுவிட்டு, மீண்டும் அங்கிருந்து சைக்கிளிலேயே திரும்பி வந்தார்.

5 மணி நேரத்துக்குள் 110 கி.மீ தொலைவுக்கு சைக்கிளில் பயணம் செய்துள்ள எஸ்.பி சுஜித்குமார், இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

ஒவ்வொருவரும் தங்களது உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் பராமரிக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி மிக முக்கியம். எனவே, காவல்துறையில் பணியாற்றுவோரிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். காவலர்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறிவிட்டால் மட்டும் போதாது. நாமும் அதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதாலேயே, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 150-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீஸாருடன் இணைந்து 10 கி.மீ தொலைவுக்கு ஓட்டப் பயிற்சி மேற்கொள்கிறேன். அந்த வகையில்தான், தற்போது நீண்டதொலைவு சைக்கிள் ஓட்டியுள்ளேன். சைக்கிள் பயன்படுத்துவதால் நமது உடல் வலுவாகும் என்பதுடன், இயற்கையை நேசிக்கும் நண்பனாகவும் இருக்க முடியும். எனவே, முடிந்தவரை அருகில் செல்லக்கூடிய பணிகள் என்றால் சைக்கிளைப் பயன்படுத்துவது நல்லது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x