

கடந்த ஒரு வருடமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறேன். இப்போது அந்தப் பிரச்சினை தீவிரமடைந்துவிட்டது. என்னால் பல நாட்களுக்கு இரவில் தூங்க முடிவதில்லை. சில நேரம் மயங்கிப் போகிறேன் (hallucinated). ஆனால், என் அறிவு மட்டும் விழிப்புடனே இருக்கிறது. இந்தப் பிரச்சினையில் இருந்து நான் எப்படி விடுபடுவது? - கே.அருணாசலம், மின்னஞ்சல்
மருத்துவர் கு.சிவராமன்: மூளை தொய்வின்றிப் பணிபுரியவும் உடல் வேலை செய்யவும் நல்ல உடற் பயிற்சியும் சரியான அளவில் உறக்கமும் மிகவும் அவசியம். உங்களது பிரச்சினை தீவிரமாக இருப்பதால், நவீன உறக்கமுண்டாக்கும் மருந்துகளின் உதவியைச் சில காலம் பெறுவது நல்லதுதான். கூடவே சித்த மருத்துவ, பாரம்பரிய அனுபவ உதவிகளைப் பெறு வதும் மிக அவசியம். அது நாளடைவில் எவ்வித மருத்துவ உதவியுமின்றி, உங்களை உறங்க வைக்க வழிகாட்டும்.
வரும்போது கழிப்பறை போய்க்கொள்ளலாம் என்பதும் நேரம் கிடைக்கும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் மேற்கத்திய அணுகுமுறை. நமது மூதாதையர்கள் எப்போதும் அப்படிச் சொன்னதில்லை. ‘பகலுறக்கஞ் செய்யோம்’ என்று சொல்லி, இரவு உறக்கத்தின் இன்றியமையாமையை எடுத்துச் சொன்னவர்கள் சித்தர்கள்.
தினசரி இரவில் குறைந்தபட்சம் 6 ½ மணி நேர உறக்கம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியம். அதுவும் இரவு விளக்கெல்லாம் இல்லாத இருளில்தான் உடலுக்கு நல்லது செய்யும் ‘மெலடோனின்’ சத்து சுரக்கும். இரவில் அந்தச் சுரப்புத்தான் பகலெல்லாம் நாம் நமது செயலால், உணவால், சிந்தனை யால் கெடுத்த நம் உடலைப் பழுது நீக்கி, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார் செய்கிறது. புற்றுநோய் உள்ளிட்ட வாழ்க்கைமுறை நோய்களைத் தடுக்கிறது.
மாலை நேரத்தில் 45 நிமிடங்களில் 3 கிலோமீட்டர் தூரம் நல்ல வேகநடை செய்துவிட்டு, பின் வீட்டுக்கு வந்து வெந்நீரில் குளியலிடுங்கள். அது இரவில் சீக்கிரம் தூக்கத்தை வரவழைக்கும். மனதை ஒருமுகப்படுத்தித் தூங்க வைக்கும் யோக நித்திரை பயிற்சியைப் பிராணாயாமத்துடன் பயிலுங்கள். எளிய தியானப் பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்டு, தினசரி செய்யுங்கள். உங்கள் HALLUCINATION பிரச்சினை மறையும்.
பசும்பாலில் ஜாதிக்காய்த் தூள் 2 சிட்டிகை போட்டு, அதில் அரை ஸ்பூன் அளவு அமுக்கராங்கிழங்கு பொடியையும் சேர்த்து, படுக்கும் முன்னர் இளஞ்சூட்டில் அருந்துங்கள். மனஅழுத்தம் சார்ந்த பிரச்சினை இருந்தால், அதற்குரிய மருத்துவ மூலிகைகளைச் சித்த மருத்துவரிடம் ஆலோசித்துப் பெற்று, எடுத்துக் கொள்ளுங்கள்.
மனம் - உறக்கம் - நரம்பியல் சார்ந்த மூளையின் இயக்கங்களில், பாதிப்பின்றிப் பணியாற்ற உதவும் சடாமாஞ்சில், வாலுளுவை, நீர்ப்பிரம்மி, சங்கு புஷ்பம் முதலான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு.
- 'நலம் வாழ' பகுதியிலிருந்து.