Last Updated : 04 Feb, 2022 12:50 PM

 

Published : 04 Feb 2022 12:50 PM
Last Updated : 04 Feb 2022 12:50 PM

இயல்பான பள்ளி வாழ்க்கைக்குத் திரும்ப தடுமாறும் பிள்ளைகளை அணுகுவது எப்படி? - குழந்தைகள் மனநல மருத்துவர் நேர்காணல்

"நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்குச் செல்வதால், குழந்தைகளுக்கு உற்சாகமோ, மனச்சோர்வோ, அச்சமோ கவலைக்கு உள்ளாக்கும் பிற உணர்வுகளோ ஏற்படலாம். எனவே விரக்தி, சோர்வு, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களை வீட்டில் வெளிப்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் குழந்தைகளுக்கு உதவுங்கள். அவர்களின் பேச்சைப் பொறுமையுடன் கேட்பதே அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும், ஆசுவாசப்படுத்தும்" என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு, தற்போதுதான் முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு வருடங்களிலும் ஆன்லைனில் மட்டுமே பள்ளிப் பாடங்களைப் படித்துவிட்டு வீட்டில் இருந்த குழந்தைகளில் சிலர் தற்போது பள்ளிக்கு ஒருவித பயத்துடனும் மிரட்சியுடனும்தான் செல்கிறார்கள். அவர்களின் பயத்தைப் போக்கவும், இதிலுள்ள சவால்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்வது குறித்தும் வழிகாட்டும் குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவின் பேட்டி...

லாக்டவுனுக்குப் பிறகு மீண்டும் பள்ளி செல்ல பயப்படும் குழந்தைகளைக் கையாளுவது எப்படி?

"குழந்தைகள் முதலில் பள்ளி சென்று பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். கரோனா சூழலுக்குப் பிறகு ஆன்லைனில் பாடம் படித்தார்கள். இப்போது மறுபடியும் பள்ளி செல்கிறார்கள். வீட்டில் அம்மா துணையுடன் எல்லாம் செய்துவிட்டு, திரும்பவும் பள்ளி செல்ல வேண்டும் என்பது குழந்தைகளைப் பொறுத்த அளவில் கஷ்டமானதுதான். தற்போது பள்ளிக்கு அவர்கள் முழு விருப்பத்துடன் செல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடாது. கொஞ்சம் மெதுவாகத்தான் வருவார்கள். பொதுவாக ஒரு விஷயத்தில் நாம் செட் ஆகிவிட்டோம் என்றால், அதிலிருந்து விடுபட சில நாட்கள் ஆகும். அதுபோலத்தான் குழந்தைகளும். இதுவரை வீட்டில் ஜாலியாக ஆன்லைனில் பாடம் படித்துக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது திடீரென முழுநேரமாக பள்ளிக்கூடத்திற்கு அவர்களை அனுப்பும்போது சற்று சுணங்கத்தான் செய்வார்கள். அதற்காக அவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இதை நாம் புரிதலோடு அணுகினால் சரிசெய்துவிடலாம்."

குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

"கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டிலிருந்து படிப்பது மாணவர்களுக்கு இயல்பாகி இருக்கக்கூடும். இதனால், பெற்றோரைப் பிரிந்து பள்ளி செல்வதும், பாதுகாப்பான, பழகிய சூழலிருந்து மற்றவர்கள் கூடும் பள்ளிக்குச் செல்வதும் நண்பர்களைச் சந்திப்பதும் சில குழந்தைகளுக்கு அச்சம் அளிப்பதாக இருக்கலாம். இந்த மனத்தடையை அகற்றி அவர்களுக்கு ஊக்கம் அளிப்பது பெற்றோரின் முதல் கடமையாகும்.

கரோனா பொதுமுடக்கத்தால், மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் சீர்குலைந்து இருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களின் பழக்கவழக்கங்களை கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மாற்றியமைப்பது அவசியம். ஒரு நிலையான, குறித்த நேரத்தில் உறங்க வைப்பது, விழிக்கச் செய்வது, சாப்பிடச் செய்வது போன்ற மாற்றங்களுக்குக் குழந்தைகளை பெற்றோர் மெதுவாகப் பழக்கப்படுத்த வேண்டும். இதைக் கண்டிப்புடன் அமல்படுத்தாமல், அவர்களிடம் பேசிப் புரியவைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

பூங்கொடி பாலா

பள்ளிக்குச் செல்வதால், மாணவர்களுக்கு உற்சாகமோ, மனச்சோர்வோ, அச்சமோ கவலைக்கு உள்ளாக்கும் பிற உணர்வுகளோ ஏற்படலாம். குழந்தைகளுக்கு வீடே பாதுகாப்பான இடம். எனவே, விரக்தி, சோர்வு, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களை வீட்டில் வெளிப்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் குழந்தைகளுக்கு உதவுங்கள். அவர்களின் பேச்சைப் பொறுமையுடன் கேட்பதே அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும், ஆசுவாசப்படுத்தும்.

பள்ளிக்குச் செல்வது குறித்த அச்சத்தைக் குழந்தைகள் வெளிப்படுத்தினால், அதை அக்கறையுடன் அணுகுங்கள். நீங்களும், ஆசிரியர்களும் அவர்களைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அவர்களின் அச்சத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அதை அங்கீகரித்து, குழந்தைகளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்."

குழந்தைகள் பள்ளிக்கு முழு ஈடுபாட்டுடன் வரும் அளவுக்கு ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

"பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் மன அழுத்தம், பதற்றம், அச்சம், சோகம் போன்ற மனச்சிக்கல்களுடன் இருக்கலாம். குழந்தைகளைப் புரிந்துகொண்டு அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களின் குறைகளை அக்கறையுடன் கேட்பதும், அதைப் பரிவுடன் அணுகுவதுமே ஓர் ஆசிரியராக உங்கள் முன் இருக்கும் தலையாயப் பணி. ஒவ்வொரு மாணவரும் தனியாகச் சந்தித்து உரையாடுவதற்கு வாய்ப்பு கொடுங்கள். கவலைகொள்ள வைக்கும் அளவுக்கு முக்கியமான விஷயத்தை மாணவர்கள் பகிர்ந்தால், தாமதிக்காமல் உரியவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்லுங்கள்.

மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் முன்னர், அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். சிலருக்குக் கவனம் செலுத்துவதில் சிரமம் இருக்கலாம், கற்றலின் வழக்கமான நிலைக்குத் திரும்ப அதிக காலம் தேவைப்படலாம். மாணவர்கள் ஓய்வெடுக்கவும், பள்ளிகளில் நிம்மதியாக உலவவும், நண்பர்களுடன் மீண்டும் இணையவும் தேவைப்படும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள்.

வகுப்பறையைப் பாதுகாப்பானதாகவும் வசதியான இடமாகவும் மாற்றும் முயற்சியில் மாணவர்களை ஈடுபடுத்துங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது, எந்தவொரு சவாலையும் எளிதில் சமாளிக்க உதவும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். குழந்தைகளின் பங்களிப்புகளையும் முயற்சிகளையும் பாராட்ட மறக்காதீர்கள்.

முக்கியமாக எல்லா குழந்தைகளையும் பள்ளிக்கு வருவதற்கு ஆசைப்படும் அளவில் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்திக் கொடுங்கள். முதலில் அவர்கள் பள்ளிக்கு இணக்கமுடன் வர வேண்டும். அதன் பிறகு பாடங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் கவனம் முக்கியம்."

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x