Published : 10 Feb 2020 11:40 AM
Last Updated : 10 Feb 2020 11:40 AM

பிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப் பகிர்ந்த பாலிவுட் பிரபலம்

பிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தகத்தில் வரும் வில்லனுக்கு 'கரோனா வைரஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சீன நகரமான வுஹானில் தோன்றி தற்போது உலகம் முழுவதும் 40,000-க்கும் மேற்பட்டோரை கரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இப்படி சர்வதேச அளவில் பீதியைக் கிளப்பியுள்ள கரோனாவின் பெயர் காமிக்ஸ் வில்லனுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. அதுவும் 2017-வது ஆண்டிலேயே.

ஆம், 2017-ல் வெளியான பிரெஞ்சு ஆஸ்டரிக்ஸ் காமிக் தொடரில் வரும் வில்லன் பாத்திரம் கரோனா வைரஸ் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்ட்ரிக்ஸ் சீரிஸின் 37-வது பதிப்பில், 'ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் சேரியட் ரேஸ்' என்ற அந்த காமிக்ஸ் புத்தகத்தில் முகமூடி அணிந்துவரும் வில்லனுக்குத்தான் அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இத்தகவலை பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கரொனா வைரஸின் உதவியாளராக வரும் கதாபாத்திரத்துக்கு 'பேசிலஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேசிலஸ் என்றால் லத்தீன் மொழியில் பாக்டீரியா என்று அர்த்தம்.

ஆட்கொல்லி கிருமிகளின் பெயர்கள் காமிக்ஸ் கதாபாத்திரத்தின் வில்லன்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் செய்தி கரோனா தாக்கத்தால் உலக நாடுகள் திணறிவரும் வேளையில் கவனம் பெற்றுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸில் கரோனா வைரஸ் தோற்றே போகும். அதேபோல் நிஜத்திலும் கரோனா வைரஸ் தோற்றுப்போக வேண்டும் என்பதே இப்போது பலரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

இதை பலரும் ஜாவேதின் டீவீட்டுக்குக் கீழ் பின்னூட்டமாகப் பதிவிட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் என்பதை உலக சுகாதார நிறுவனம் சாதாரண சளித் தொல்லை தொடங்கி மெர்ஸ், சார்ஸ் தற்போது கரோனா பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியாக வரையறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x