

பக்கவாதம், மாரடைப்பு போன்ற லைஃப்ஸ்டைல் நோய்களில் இருந்து தப்பிக்க 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக அளவில் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் உடற்பயிற்சி குறைவாக செய்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் வர 27% அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதே வேளையில் 60 வயதுக்கு மேற்கொண்டவர்களில் அதிகளவில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இத்தகைய நோய்கள் தாக்க வாய்ப்பு 11% வரை குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய், அதீத கொழுப்புச் சத்து போன்ற நோய்கள் இருந்தாலும்கூட அவர்கள் தீவிர உடற்பயிற்சி மூலம் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இதற்காக 1 கோடியே 1 லட்சத்து 9 ஆயிரத்து 925 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாளில் ஒரு தனிநபர் செய்யும் உடற்பயிற்சியை மிதமானது எனக் குறிப்பிட்டால் அதை தினமும் 20 நிமிடங்கள் மேற்கொள்வது என்றும் தீவிர உடற்பயிற்சி என்றால் நடைப்பயிற்சி, வேகமாக சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ் உட்பட அரை மணி நேரம் செய்தல் என்றும் வரையறுத்துள்ளனர்.
தென் கொரியாவின் சீயோல் தேசிய பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
-ஏஎன்ஐ