பள்ளி செல்லும் குழந்தைக்கும் நீரிழிவு: அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்

பள்ளி செல்லும் குழந்தைக்கும் நீரிழிவு: அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்
Updated on
1 min read

புதுடெல்லி

பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் 1% பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.

இதன் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தொற்றாத நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளும் 10 முதல் 19 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரும் என்சிடி எனப்படும் தொற்றா நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

தேசிய ஊட்டச்சத்துக் கணக்கெடுப்பு 2016-18 இன் ஆய்வுப்படி, பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் பத்தில் ஒருவர், நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (pre-diabetic) உள்ளனர்.

பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் 1% பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பள்ளி செல்லும் குழந்தைகளில் 3% பேருக்கும் இளம் பருவத்தினர் 4% பேருக்கும் அதிகக் கொழுப்பு உள்ளது.

நாள்பட்ட சிறுநீரக நோய்களால் 7 சதவீத பள்ளிக் குழந்தைகளும் இளம் பிராயத்தினரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இளமைப் பருவத்தில் இருக்கும் 5% பேர், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்தியக் குழந்தைகளில் 35% பேர், வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். பள்ளி வயது குழந்தைகளில் 22 சதவீதம் பேருக்கு இதே பிரச்சினை உள்ளது. வளரிளம் பருவத்தினரில் 24% பேர், அவர்களின் வயதுக்கு மிகவும் ஒல்லியானவர்களாக இருக்கின்றனர்.

பிறந்த குழந்தைகளிடமும் இதே குறைபாடு உள்ளது. போதிய வளர்ச்சி இன்மையாலும் எடை குறைபாட்டாலும் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வயது வரை, இரண்டு குறைபாடுகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. அதேபோல வைட்டமின் ஏ, வைட்டமின் டி, துத்தநாகக் குறைபாட்டாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in