புற்றுநோயால் ஒற்றைக் காலை இழந்த சிறுமி: நடனம் ஆடி அசத்தல்

நடனமாடும் சிறுமி அஞ்சலி
நடனமாடும் சிறுமி அஞ்சலி
Updated on
1 min read

கொல்கத்தா

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தன் ஒற்றைக் காலை இழந்த சிறுமி, மற்றொரு காலில் நடனம் ஆடி அசத்தினார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஆங்காலஜி நிபுணர்களுக்கான வருடாந்திர மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில், அஞ்சலி என்ற 11 வயது சிறுமி நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.

அஞ்சலி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தன் ஒற்றைக்காலை இழந்தவர். இந்நிலையில், தன் ஒற்றைக் காலின் துணையுடன் ஸ்ரேயா கோஷல் பாடிய 'மேரே டோல்னா' பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தப் பாடல், 'பூல் புலையா' எனும் இந்தி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடலாகும். இந்தப் பாடலில் நடிகை வித்யா பாலன், பாடலின் வேகத்துக்கு ஏற்ப நடனமாடியிருப்பார். சிறுமி அஞ்சலியும் தன் ஒற்றைக்காலில் இசையின் வேகத்துக்கு ஏற்ப ஆடி, மற்றவர்களைக் கவர்ந்தார். 'லெஹங்கா' உடையில் அழகிய நடன அசைவுகளுடன் ஆடிய சிறுமியை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மருத்துவர் அர்னாப் குப்தா, தன் முகநூல் பக்கத்தில் சிறுமியின் நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவர் அர்னாப் குப்தா தன் பதிவில், சிறுமி அஞ்சலி நடனக் கலைஞராக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

சிறுமியின் நடன வீடியோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in