Published : 03 Oct 2019 03:21 PM
Last Updated : 03 Oct 2019 03:21 PM

மன அழுத்தத்தைப் போக்கும் மாத்திரைகள்: கர்ப்பிணிகள் உட்கொண்டால் நீரிழிவு நோய்க்கு வாய்ப்பு; ஆய்வில் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

மன அழுத்தத்தைப் போக்க கர்ப்ப காலத்தில் மாத்திரைகள் உட்கொள்வது, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஸ்டேஷனல் நீரிழிவு எனப்படும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய், உலக அளவில் 5-ல் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக, அதிக எடையுள்ள குழந்தைகள் பிறப்பது, தீவிரமான பிரசவ வலி, குழந்தை பிறப்பதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இத்தகைய நீரிழிவு நோயுள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமன், நாளடைவில் நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோன்று அப்பெண்ணும் டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய்களுக்கு ஆட்படும் வாய்ப்புகளும் கர்ப்ப கால நீரிழிவு நோயால் அதிகரிக்கின்றன.

இந்நிலையில், பிஎம்ஜே ஓபன் எனும் இணைய ஆய்வு இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு மாத்திரைகள் உட்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு கெஸ்டேஷனல் நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள், மன அழுத்தத்துக்காக எடுத்துக்கொள்ளப்படும் வென்லாஃபாக்ஸின் மாத்திரை உட்கொண்டால் 27 சதவீதமும், அமித்ரிப்தைலின் உட்கொண்டால் 52 சதவீதமும் அதிகம் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கெஸ்டேஷனல் நீரிழிவால் பாதிக்கப்படுவதற்கு, இத்தகைய மாத்திரைகள் உட்கொள்ளாத பெண்களை விட 19% வாய்ப்புகள் அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

கெஸ்டேஷனல் நீரிழிவு ஏற்படும் ஆபத்துகளில், குறைந்த காலத்துக்கு அத்தகைய மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு 15%, நடுத்தர காலத்திற்கு உட்கொள்பவர்களுக்கு 17%, அதிக காலத்துக்கு உட்கொள்பவர்களுக்கு 29% வாய்ப்புகள் அதிகம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனச்சோர்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகள் உடல் பருமனை ஏற்படுத்தி, அதன் விளைவாக நீரிழிவு நோயை உண்டாக்குவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

எனினும், கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்திற்கான மாத்திரைகள் உட்கொள்வதை, அதன் தீவிரத்தைப் பொறுத்து, மருத்துவரின் ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x