

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஒட்டுமொத்த உலகமே முன்னெடுத்திருக்கும் காலகட்டத்தில், ஒரு டீத்தூள் பையில் இருந்து கோடிக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நம் உடலில் கலந்து தீங்கு விளைவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆழ்கடல், பனிப்பாறைகள் என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக், உணவுப்பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. பிளாஸ்டிக், வெவ்வேறு காலகட்டத்தில் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் அதைவிட சிறிய நானோ பிளாஸ்டிக் துகள்களாக உருமாற்றம் அடைகிறது.
புத்துணர்ச்சிக்காக அருந்தப்படும் டீ, சமீபகாலமாக டீத்தூள் பைகள் மூலமாக எளிதில் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இத்தகைய டீத்தூள் பைகளில் இருந்து கோடிக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் பொருட்கள் மனித உடலில் கலப்பதாக, கனடா நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
மெக்கில் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், டீத்தூள் பைகளைக் கொதிக்கும் நீரில் போட்டபோது அந்தப் பைகளுக்கு சீல் வைக்கப் பயன்படுத்திய பாலிபிராபிலின், வெந்நீரில் கோடிக்கணக்கான மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்களை வெளியேற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதில், ஒரு டீத்தூள் பை, 1100 கோடி மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் 310 கோடி நானோ பிளாஸ்டிக் துகள்களை வெளியேற்றுவது தெரியவந்தது. மற்ற உணவுப்பொருட்களில் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் துகள்களின் தாக்கத்தை விட இது ஆயிரம் மடங்கு அதிகம்.
அந்தப் பைகளில் இருந்து டீத்தூள்களை மட்டும் பயன்படுத்தியபோது பிளாஸ்டிக் துகள்களின் அளவு வெகுவாகக் குறைந்திருந்தது. இந்த ஆய்வுக்கு, 4 விதமான டீ பாக்கெட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
உணவுப் பொருட்களில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இதுவரை ஆய்வு ரீதியாகத் தெரியவில்லை என்றாலும், பாதிப்புகள் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏஎன்ஐ