

அமெரிக்கா
அமெரிக்காவில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை பள்ளிச் சுற்றுலா முடியும் வரை தோளில் சுமந்த ஆசிரியரைப் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் என்கிற சிறுமி ஒருவர், பிறக்கும்போதே முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் நடக்க முடியாத நிலையில் உள்ளார். அச்சிறுமி, தற்போது மழலையர் வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில் அச்சிறுமியின் பள்ளியில் கடந்த 20-ம் தேதி, ஓஹியோ மாநிலத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்திருந்தனர். இந்தச் சுற்றுலாவில் சிறுமி ரியானை, அவரது ஆசிரியர் கிரிஸ்டி பைல் தன் முதுகில் சுமந்து, சுற்றுலாவில் அச்சிறுமியும் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்துள்ளார்.
சிறுமியை முதுகில் சுமக்கும் ஆசிரியர்
இச்சம்பவம் குறித்தும், ஆசிரியர் கிரிஸ்டி பைல் குறித்தும், சிறுமியின் தாய், சிறுமிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அதில், ஆரம்பத்தில் தன் மகளைச் சுற்றுலாவுக்கு அனுப்ப தயக்கம் கொண்டதாகவும், ஆசிரியர் கிரிஸ்டி பைல் இதனைச் சாத்தியமாக்கியதாகவும், அந்த ஆசிரியருக்கு ரியானின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சிறுமி ரியான் பயிலும் பள்ளிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறுமி ரியானின் தாயார் பதிவிட்ட இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. ஆசிரியர் கிறிஸ்டி பைலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.