Published : 12 Sep 2019 05:22 PM
Last Updated : 12 Sep 2019 05:22 PM

முன்பை விட அதிகம் மது அருந்தும் இந்தியப் பெண்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

புதுடெல்லி

இந்தியர்களின் குடிப்பழக்கம் 38% அதிகரித்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 18 முதல் 70 வயது வரையிலான 5 ஆயிரம் பெண்களிடம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை 'குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு எதிரான சமூகம்' (CADD) என்ற அமைப்பு நடத்தியது.

இதன்படி, ''உலக அளவில் அதிக அளவில் குடிப்பழக்கத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில், குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியர்களின் குடிப்பழக்கம் 38% அதிகரித்திருக்கிறது. 2005-ல் ஓராண்டுக்கு 2.4 லிட்டர் மது அருந்திய நபர் தற்போது 5.7 லிட்டர் மதுவை உட்கொள்கிறார்.

இதற்கான காரணத்தைத் தேடும்போது, குடிப்பழக்கத்தில் அமைதியான பங்கேற்பாளர்களாக பெண்கள் இருந்தது தெரியவந்தது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் குடிக்கின்றனர். அதேபோல பெண்கள் குடிக்கும் மதுவின் அளவும் அதிகரித்திருக்கிறது.

சில நூறு ஆண்டுகளாகப் பழக்கவழக்கத்தின் அடிப்படையில், பெரும்பாலான பெண்கள் குடிக்காமல் இருந்தனர். ஆனால், தற்போது பெண்களின் மது சந்தை விரிந்துவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இது 25% அதிகரிக்கும்.

என்ன காரணம்?

இந்த மாற்றத்துக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன.
* அமைதியடையவும் மகிழ்ச்சி பெறவும் மதுவே சிறந்த மருந்து எனத் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து போதிக்கப்படுகிறது.
* பெரும்பாலான அனைத்து சமூக நிகழ்வுளும் மதுவைச் சுற்றியே அமைந்திருக்கின்றன.
* மது எளிமையான, வேகமான சமூக இளக்கியாக அமைந்துவிடுகிறது.
* இப்போது மதுப் பழக்கத்தை யாரும் பிரச்சினையாகவோ, தவறாகவோ பார்ப்பதில்லை. அது ஒரு நடைமுறை அவ்வளவே என்ற எண்ணத்துக்கு நகர்ந்து விட்டோம்.
* செலவழிக்கும் திறன், செழிப்பான குடும்பப் பின்னணி, ஆண்களுடனான சம வாய்ப்பு என இருக்கும் பெண்கள் எரிச்சல், மன அழுத்தம், தனிமை, கோபம், வலி, உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளுக்கு வடிகாலாக குடிப்பழக்கத்தையே நாடுகின்றனர்.

உதாரணத்துக்கு டெல்லியில் 40 சதவீத ஆண்களும் 20 சதவீதப் பெண்களும் மது நுகர்வோர்கள். 18-30 வயதுப் பெண்களில் 43.7% பேர் குடி எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குடிக்கின்றனர். 31 - 45 வயதுப் பெண்களில் 41.7% பேர் தொழில் தேவைகளுக்காகவும் சமூகப் பழக்கத்துக்காகவும் குடிக்கின்றனர். 46- 60 வயதுப் பெண்களில் 39.1% பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 53% பேரும் உளவியல் காரணங்களுக்காகக் குடிக்கின்றனர்.

அதேபோல பெரும்பாலான பெண்கள் குடிக்கும்போது, ஒரு முறைக்கு 4 அல்லது அதற்கும் மேற்பட்ட 'பெக்' என்ற அளவில் எடுத்துக்கொள்கின்றனர்''.

இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x